பஜ்ஜி பேப்பர்

விக்ரம் பள்ளியிலிருந்து சோக முகத்தோடு வீட்டிற்க்குள் வந்தான். வந்தவன் எப்போதும் போல் இல்லாமல் தன் பள்ளி பையை அணைத்தவாறு சோபா வில் உட்கார்ந்தான். அவனை கவனித்த அவன் தாய் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள். அவன் டிபன் பையை எடுத்து பார்த்தாள்... சாப்பாடு அப்படியே இருந்தது.... என்னவாக இருக்கும் என்று அவள் யோசித்தவாறே உள்ளே சென்றாள். வந்ததும் டிவி ரீமோட்டை கையில் எடுத்தவாறே நுழைபவன் இன்று ஏனோ எதிலும் மனம் போகாமல் சோர்வடைந்து இருந்தான்.

அவள் ஒரு தட்டில் தான் செய்த பஜ்ஜியை வைத்து கொண்டு வந்தாள். அவன் அருகே அமர்ந்தாள். ஒன்றும் கவனிக்காதது போல் "டேய் விக்ரம் பஜ்ஜி எடுத்துக்கோ உனக்கு பிடித்த உருளைகிழங்கு பஜ்ஜி டா...". என்றாள்.
அவனோ முகத்தை திருப்பவே இல்லை. இப்போது நயமாக" என்னடா ஏன் டல்லா இருக்கே... பிரெண்ட் கூட சண்டையா?" என்றாள்.

அவன் மெதுவாக பள்ளி பையிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

கோர்டேர்லி கணக்கு பேப்பர். ஆ.... அதிர்ந்தே போனாள். "என்னடா பைல் ஆயிட்டே... நல்லா செய்தேன் ன்னு சொன்னியே ..." திருப்பி திருப்பி பார்த்தாள். எல்லா கணக்கும் போட்ருகான் ஆனா தப்பு. "சரி விடு... அடுத்த பரிட்சைல நல்லா படிச்சு மார்க் வாங்கலாம். இப்போ பஜ்ஜி சாப்பிடு. உன்னை டியூஷன் சேர்த்து விடறேன். உன்னோட மிஸ்ஸ நான் வந்து பாக்கறேன். என்ன பண்ணலாம்னு கேக்கறேன். ஓகே வா. இப்போ சாப்பிடு. லஞ்சும் சாப்டாம கொண்டு வந்துருக்கே. பூஸ்ட் போடட்டா?... "என்றாள்.

"அம்மா அப்பா கிட்ட சைன் வாங்கிட்டு போனும் மா. அப்பா போடுவாரா. நான் நேகஸ்ட் டைம் மார்க் வாங்கறேன் மா.. கிரிஷ் போற டியூஷன் ல என்ன சேர்த்து விடும்மா".

அவன் கண்களில் உண்மையான கவலை தெரிந்தது. அவன் டிவி பார்க்கும்போது அவனை கடிந்து கொள்ளாமல் சொல்லியதுண்டு. பரிட்சையின் போது கவனத்தோடு எழுத நினைவூட்டியதுண்டு. இப்போது அவனே புரிந்து தன் தவற்றை திருத்தி கொள்ள பார்க்கிறான். இப்போதும் அவனோடு இருக்க வேண்டும். தாயின் மனது தவித்தது.

"நீ கை கால் கழுவிகிட்டு டிரஸ் மாத்திக்கிட்டு பஜ்ஜி சாப்பிடு இதோ வரேன் "என்றவள். வேகமாக கைபையை எடுத்து கொண்டு கிளம்பினாள். "பக்கதுல கடை வரைக்கும் போயிட்டு வரேன்". என்று கூறி விட்டு நடையை கட்டினாள். பத்து நிமிடத்தில் வந்தாள்... கையில் கீரைகட்டும் பூவும் இருந்தது. கீரையை பிரிட்ஜில் வைத்து விட்டு பூவை சாமி படத்திற்கு போட்டாள்.

விக்ரம் சொல்லாமலேயே வீட்டு பாடங்களை செய்ய தொடங்கினான். பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து டிவி ரீமோட்டை தொடவே இல்லை. வியந்தாள். வாழ்த்தினாள் பிள்ளையை.

கணவன் வந்தார். களைப்பு தெரிந்தது நடையில். விக்ரம் உள்ளிருந்து எட்டி பார்த்தான். தந்தை உடை மாற்றி வந்து காபி அருந்த வந்தார். விக்ரம் மெதுவாக தன் பரீட்சை தாளை கொண்டு வந்து நீட்டினான். "அப்பா சைன் போடனும்."என்று நீட்டினான். அப்பா அதை வாங்கி பார்ப்பதற்குள் பேச ஆரம்பித்தான். "இந்த முறை மார்க் கம்மி.. இதான் பர்ஸ்ட் டைம் பா... லாஸ்ட் டைமும். இனிமே நான் பொறுப்பா படிக்கறேன். டியூஷன் சேர்த்து விடுங்கப்பா, இந்த முறை சைன் போட்ருங்க பா ப்ளீஸ்... "என்று முடித்தான்.
அப்பாவுக்கு கோபம் வந்தது. "எப்போவும் சைக்கிள் டிவி ன்னு இருந்தா உருப்பிட முடியுமா... நான் சைன் போட மாட்டேன். உங்க மிஸ்ஸ வந்து பார்க்கறேன். இவன ஸ்கூல்லையே வச்சுக்கோங்க ன்னு சொல்றேன் இரு..".என்று கடிந்தார். விக்ரம் கை கட்டி வாய் பொத்தி பாவமாய் நின்றான். இதற்குள் அம்மா பஜ்ஜியை ஒரு பேப்பரில் வைத்து கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்தாள். விக்ரம் அம்மாவின் பின் மறைந்து நின்றான். காபியை அருந்தி கொண்டே பஜ்ஜியை எடுத்து சுவைதார் அப்பா. ஒன்றும் பேசவில்லை. வீடே அமைதியாய் இருந்தது....சில நிமிடங்கள்.

அப்பா தான் பேச ஆரம்பித்தார்..." சரி சரி... நெக்ஸ்ட் டைம் மார்க் வாங்கு எங்கே சைன் போடணும். இப்போ போடறேன்... ஆனா அடுத்து வர பரிட்சைல பாஸ் பண்ணனும் ஓகே வா..." என்றவர் சொன்ன இடத்தில கையெழுத்திட்டார். விக்ரமிற்கு அப்பா புதிராகவே தெரிந்தார். சில நிமிடம் முன்பு வரை வசை பொழிந்தவர்... இப்போ ... என்னாச்சு? பேப்பரை வாங்கி கொண்டு மீண்டும் படிக்க அறைக்குள் சென்றான்.

மனைவியை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தார். கை பேசி ஒலிக்கவே... அதை எடுக்க உள்ளே சென்றார்.
மேசையின் மேலிருந்த பஜ்ஜி பேப்பர் பறந்தது.... அது விக்ரமின் தந்தையின் எட்டாம் வகுப்பு கணக்கு பேப்பரின் செராக்ஸ்..

எழுதியவர் : சுபாசுந்தர் (17-Apr-16, 8:47 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
பார்வை : 194

மேலே