வாக்காளருக்கு மரியாதை
வாக்காளருக்கு மரியாதை
தேர்தல் முடியும் வரை
சுட்டெரிக்கும் வெயிலில்
பணம் கொடுத்து அழைத்துவரப் படுவார்களாம்
அதற்காக விளைநிலங்கள் அழிக்கப்படுமாம்
அழைத்துவரப்பட்ட அனைவருக்கும்
பிரியாணி பொட்டலங்களும்
தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்படுமாம்
பல மணி நேரங்கழித்து அன்புத் தலைவர் வருவாராம்
அவர்மீது வெயில் படக்கக்கூடாதாம்
கூலிக்கு அழைத்துவரப்பட்டவர்கள்
காத்திருக்க வேண்டுமாம்
உட்கார வைக்கப்பட்ட இடத்தை விட்டு
நகரக்கூடாதாம்
கொடுக்கப்பட்ட தண்ணீர்
தீர்ந்து போனபின்பு
நாவறண்டு போனாலும்
காத்திருக்க வேண்டுமாம்
சிறுநீர் கழிக்கச் செல்லவும்
அனுமதி இல்லையாம்
தலைவர்
யாரோ எழுதிக் கொடுத்த சொற்களை
பார்த்து படித்துவிட்டுச் செல்லும் வரை
உச்சி வெயிலில் காத்திருக்கவேண்டுமாம்
கூலிக்கு அழைத்துவரப்பட்ட
அப்பாவி ஏழை வாக்காளப் பெருமக்கள்.
வேட்பாளர்களுக்கும்
நல்ல மரியாதை கிடைக்குமாம்
கைகூப்பிய வண்ணம் மேடைக்கும்
கீழே நிற்கவைக்கப்படுவதால்
அன்புத் தலைவருக்கு
நிகராக மேடையில் அமரவோ நிற்கவோ
அனுமதி இல்லையாம்!
வாழ்க சனநாயகம்!
வளர்க பணநாயகம்!
இளிச்சவாயர்களின் எண்ணிக்கை பெருகுக!
திரை விருந்தை அமுதமாய்
தினம் உண்டு வாழ்பவர்க்கு
வெயிலில் தரும் விருந்து
வேண்டாப் பொருள் ஆகுமா?
நன்றி:::ஆனந்தவிகடன் கட்டுரை, தி இந்து கட்டுரை மற்றும் தொலைக் காட்சி செய்திகள் காட்சிகளில் படித்த, பார்த்த, கேட்ட தகவல்களின் அடிப்படையில்