நமது சிந்தனைக்கு மேற்குலகத்தில் தமிழ்க் கல்வி -
‘மேற்குலகம் என்னும்போது ஐரோப்பாவையும் அமெரிக்காவையுமே இந்தக் கட்டுரை குறிக்கிறது. இங்குள்ள நாடுகளில் உயர்கல்வியில் தமிழின் நிலை பற்றியே இது பேசுகிறது. ஒரு தலைமுறைக்கு முன் இந்த நாடுகளில் குடியேறிய தமிழ்ப் பெற்றோர்களும் இலங்கையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையால் நாட்டை விட்டு வெளியேறிய பெற்றோர்களும் தங்கள் பிள்ளை களுக்குத் தமிழ்ப் பரிச்சயம் போய்விடக் கூடாது என்றும் தமிழ்ப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைப்பதற்காகவும் தனிப்பட்ட முயற்சியால் பள்ளிப் பாடத்திட்டத்திற்கு வெளியே நடத்தப்படும் தமிழ் வகுப்புகளைப் பற்றி இந்தக் கட்டுரை பேசவில்லை. இவற்றின் கல்வி நோக்கமும் உள்ளடக்கமும் வெவ்வேறு. இவற்றைப் பற்றித் தனியே கட்டுரை எழுத வேண்டும். இதே போல, சிறுபான்மையினரின் மொழி உரிமையை அங்கீகரித்து, தமிழைத் தொடக்கப் பள்ளிக் கல்வியில் போதிப்பதையோ உயர் நிலைப் பள்ளியில் படிக்க வேண்டிய அந்நிய மொழிகளில் ஒன்றாகத் தமிழை அனுமதிப்பது பற்றியோ முன்வைக்கவில்லை. இவை பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மொழிக் கொள்கைகளின் அடிப்படையில் அந்தந்த நாடுகளின் அரசியல் பின்னணியில் எழுத வேண்டிய கட்டுரைகள்.
இந்தக் கட்டுரை மேற்கு நாடுகளில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கும் கல்வியைப் பற்றியே பேசுகிறது. இதைச் சொல்லும்போது இந்தியாவில் உள்ளதுபோல் தமிழை மட்டுமே படித்துப் பட்டம் பெறும்நிலை இந்த நாடுகளில் இல்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும். தமிழ் மற்றொரு சிறப்புப் பாடத்தின் பகுதியாகவே இருக்கும். காலனிய ஆட்சி, தான் ஆளும் இந்தியாவைப் புரிந்துகொள்ளும் அவசியத்தை நிறைவுசெய்யும் வகையில் ஐரோப்பிய அறிஞர்கள் ‘இந்தியவியல்’ (Indology) என்னும் பெயரில் ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் - குறிப்பாக, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் -ஒரு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப் பாடத்திட்டம் பெரும்பாலும் பிரதிகளைப் படித்துப் பொருள் விளக்கும் திறனை வளர்க்கும் (philology) நோக்கத்தில் அமைந்தது. பிரதிகளை ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்க்கும் வேலையும் நடந்தது.
பிரதிகள் சமஸ்கிருத மொழியில் உள்ளவற்றை மீறிச் செல்லவில்லை. சமஸ்கிருதத்திற்கும் லத்தீன், கிரேக்க மொழிகளுக்கும் இடையே கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று உறவு இதற்கொரு காரணம். இந்தியாவின் கலாச்சார வரலாற்றையும் சமகாலக் கலாச்சாரப் பழக்கவழக்கங்களையும் புரிந்துகொள்ளச் சமஸ்கிருதமே உதவும் என்று பிராமணர்களின் உதவியோடு காலனிய அறிஞர்கள் உருவாக்கிக்கொண்ட கருத்தாக்கம் மற்றொரு காரணம்.
தென்னிந்தியாவில் காலனி ஆட்சியர், கிறிஸ்துவ மத போதகர்கள் திராவிடக் கலாச்சாரத்தின் வேறுபட்ட தன்மையையும் அதை அறியத் தமிழின் இலக்கிய அறிவின் தேவையையும் நிலைநாட்டியும் அது ஐரோப்பாவின் இந்தியவியல் பாடத்திட்டத்தில் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. இந்தியவியலில் தமிழுக்குரிய இடம் இல்லாதது தமிழறிஞர்கள் ‘தமிழியல் (Tamilology)’ என்னும் துறையை உண்டாக்க ஒரு காரணமாக இருந்தது. ஆனால் இந்தப் புதிய கல்வித் துறை மேல்நாட்டுக் கல்வியில் இடம்பெறவில்லை.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகத்தைப் பற்றிய அறிவின் தேவை வேறு ஆனது. உலகின் பன்மை முக்கியம் ஆனது. வரலாற்று அறிவோடு சமகால அறிவின் தேவை உணரப்பட்டது; கலாச்சார அறிவோடு அரசியல், பொருளாதார அறிவின் தேவை உணரப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்தி - உருதுவின் முக்கியத்துவம் உணரப்பட்டது. இந்தியவியல் கற்றுக்கொடுத்த இடங்களில் தற்கால இந்திய மொழிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன. அரசியல் சார்ந்து இந்தி - உருதுவும் வரலாற்றுக் கலாச்சாரம் சார்ந்து தமிழும் இதில் முன்னிடம் பெற்றன. இந்த மொழிகள் இந்தியவியலில் ஒரு பிற்சேர்க்கை, இரண்டாம் இடமுடையவை என்ற நிலையை இன்னும் சில துறைகளின் பெயர்களில் காணலாம். அமெரிக்காவில் ஹார்வார்டில் உள்ள துறையின் பிற்காலப் பெயர் Department of Sanskrit and Indian Studies. ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள துறை அண்மையில் Institute of Indology and Tamil Studies என்று மாற்றப்பட்டது. வட அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இரண்டாம் உலகப்போருக்குப் பின் தொடர்ந்த ஆதிக்கப் போட்டியில் உலக நாடுகளைத் தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டுவரும் நோக்கத்தில், இந்தியாவைப் பொறுத்தவரை, அதன் தற்கால மொழிகள் இந்த இரு நாட்டுப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றன. தமிழ் இடம்பெற்றது தற்கால மொழி என்னும் தகுதியிலேயே. அதன் செம்மொழித் தகுதி, இந்தியாவின் மற்ற தற்கால மொழிகளோடு ஒப்பிடும்போது, தமிழுக்கு அதிகபட்சமான இடத்தைப் பெற்றுத் தந்தது. இது தமிழுக்கு இந்திய அரசு செம்மொழித் தகுதி தருவதற்கு மிக முன்னாலேயே நடந்தது.
வட அமெரிக்காவில் தமிழ் உட்படத் தற்கால இந்திய மொழிகளைக் கற்பிக்க அந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பட்ஜெட்டிலிருந்து பணம் வருவது இங்குக் கவனம்கொள்ளத்தக்கது. சோவியத் யூனியன் 1957இல் விட்ட ஸ்புட்னிக் விண்வெளியில் அதன் ஆதிக்கத்தின் குறியீடு என்று நினைத்த அமெரிக்கா கல்வியைச் சீர்திருத்தப் பணத்தைக் கொட்டியது. அதில் ஒரு பகுதி உலகின் பல நாடுகளின் அமைப்பையும் சமூக உரசல்களையும் புரிந்துகொள்ள உதவும் பாடத்திட்டங்களுக்குச் சென்றது. இந்தப் புதிய பாடத் துறை, மண்டலவியல் (regional studies) எனப்பட்டது. இந்தப் பாடத் திட்டத்தில் மொழிகள் முக்கிய இடம்பெற்றன. தமிழும் இவற்றில் ஒன்று. ஆனால் மொழிகளைக் கற்பிப்பதே இந்தப் புதிய பாடத் திட்டங்களின் தலையாய நோக்கம் அல்ல. தமிழ்நாட்டின் அரசியலை, சமூகத்தை, கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் ஆராய்ச்சிக்குத் தமிழறிவு தேவை என்னும் நிலையிலேயே பாடத்திட்டத்தில் தமிழ் இடம்பெற்றது. ஆனால் வரலாற்று நோக்கிலும் சமகாலப் பார்வையிலும் தமிழ் இலக்கியத்தைப் படிப்பதற்கும் இலக்கணத்தைப் படிப்பதற்கும் மாணவர்கள் இருந்தார்கள். இவர்களையே தமிழைச் சிறப்புப் பாடமாகப் படிப்பவர்கள் எனலாம். தங்கள் துறைப் படிப்பிற்குத் தமிழைக் கருவி மொழியாகக் கற்பவர்களைப் பார்க்க இவர்கள் சிறுபான்மையினரே.
உலக அரசியல் சார்ந்த இந்தப் பாடத்திட்ட மாற்றம் தமிழ்க் கல்வியில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. தமிழ் இந்தியவியலில் ஒரு பகுதியாக இருந்தது மாறி, தென்னாசிய மண்டலப் படிப்புத் துறையின் (South Asian Studies) ஒரு பகுதியாக மாறியது. களப்பணி பெற்ற முக்கியத்துவத்தால் பேச்சுத் தமிழைக் கற்பித்தல் பாடத்திட்டத்தில் அமெரிக்காவில் இடம்பெற்றது. ஐரோப்பாவில் இன்னும் பழைய முறையான பிரதி படித்தலே வன்மையாக இருக்கிறது. தமிழ் மொழியை நடைமுறைத் தேவை சார்ந்த காரணங்களுக்காக மட்டும் கற்கும் மாணவர்கள் தோன்றினார்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்தையும் பாரம்பரியத்தையும் தெரிந்துகொள்வது ஓரளவுக்குத்தான்.
தமிழைச் சிறப்புப் பாடமாகப் படிக்கும் மாணவர்கள் தமிழை மட்டுமே படிக்கப் பாடத்திட்டம் அனுமதிக்காது. இந்திய வரலாறு, சமயங்கள், தத்துவம், புராணங்கள் முதலியவற்றையும் கற்க வேண்டும். மற்றொரு மொழியும் படிக்க வேண்டும். அது பெரும்பாலும் சமஸ்கிருதமாக இருக்கும். அது சமஸ்கிருத மொழி மட்டுமல்ல. மாணவரின் விருப்பப்படி சமஸ்கிருத இலக்கியம் மற்றும் அறிவுத்துறைப் பொருளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். இவர்கள் தமிழ் இலக்கியத்தையும் மற்ற பொருள்களையும் அணுகும் முறை தென்னாசியா அல்லது இந்தியா என்ற பெரும் மரபில் வகிக்கும் இடத்தைக் காணுவதாக இருக்கும். தமிழ் ஒரு சுயமான (autonomous) பாடம் அல்ல.
அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார மாற்றங்களால் மண்டலப் படிப்புத் துறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா, அமெரிக்காவைப் போல் மண்டலப் படிப்புத் துறை வேரூன்றாததால் அங்கே பெரிய மாற்றம் இல்லை. இருப்பினும் இரண்டு இடங்களிலும் சமூக அறிவியல் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதிலும் இலக்கியம், மொழி ஆகியவற்றை முழுநேரப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது. இரண்டு இடங்களிலும் பல்கலைக்கழகங்களில் தமிழைச் சிறப்புப் பாடமாக நடத்தும் ஒருவர் ஓய்வுபெற்றால், அந்த இடத்தை நிரப்புவதில்லை. ஊரில் வசிக்கும் தமிழ் பேசும் ஒருவரை வைத்துத் தமிழை மொழியாக மட்டுமே ஒரு சில மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் நிலை இருக்கிறது. சில பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்றுக் கொடுப்பதே நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் நிதி திரட்டிப் பல்கலைக் கழகத்திற்குக் கொடுத்துத் தமிழ் கற்பிக்கும் நிலையையும் பார்க்கலாம். அதாவது, தமிழ்க் கல்விக்கு அரசு - பல்கலைக்கழக ஆதரவிலிருந்து தமிழ்ச் சமூக ஆதரவு என்று நிலைமை மாறிவருகிறது. இது தமிழுக்கு மட்டுமல்ல, இந்தி - உருது தவிர்த்த மற்ற தற்கால இந்திய மொழிகளுக்கும் பொருந்தும். சமஸ்கிருதமும் இந்தப் போக்கிற்கு விதிவிலக்காக இருக்கிறது. காலனிய காலத்தைப் போல், அது இந்திய -ஐரோப்பிய மொழிகளின் பாடத் திட்டத்தின் பகுதியாக மட்டும் இல்லாமல், தென்னாசியாவில் செல்வாக்குச் செலுத்திய மொழி, தென்னாசியாவின் தற்கால மொழிகளை, சமயங்களை, கலைகளை வரலாற்று நோக்கில் புரிந்துகொள்ளத் தேவையான மொழி என்ற நிலையில் ஒரு தென்னாசிய மொழியாகத் தற்கால இந்திய மொழிகளைப் படிப்பவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் தமிழ் கற்கும் மாணவர்கள் குறைந்துவருவதைப் பின்வரும் புள்ளிவிவரம் உறுதிப்படுத்தும். 2004இல் இந்தி படித்த மாணவர்கள் 1430. இதில் இந்தி -உருதுவைச் சேர்த்து ஒரு மொழியாகப் படித்தவர்களைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 1857ஆக உயரும். தமிழ் படித்த மாணவர்கள் 114. இவர்களுக்கு முன்னால் சமஸ்கிருதம், வங்காளம், உருது படித்த மாணவர்களின் எண்ணிக்கை வருகிறது. அதாவது, இந்திய மொழிகளில் தமிழ் ஐந்தாம் இடம் வகிக்கிறது. ஒரு பல்கலைக்கழகம் இந்திய மொழிகளைக் கற்பிக்கப் பணம் ஒதுக்கினால் நிதியைப் பொறுத்து சமஸ்கிருதம், இந்திக்கு அடுத்தபடி தமிழைத் தேர்ந்தெடுக்கும். திராவிட இந்தியாவைத் தமிழ் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதும் தமிழ் தென்னாசியாவில் இலங்கையிலும் பேசப்படுகிறது என்பதும் இதற்குக் காரணங்கள். மேலே உள்ள புள்ளி விவரம் ஒரு மொழியை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு அந்த மொழியின் அரசியல் முக்கியத்துவம் முதல் காரணமாகிறது என்று காட்டுகிறது. வரலாற்றுக் கலாச்சாரக் காரணம் இரண்டாம் பட்சம். கலாச்சாரக் காரணத்தைவிட நடைமுறை நன்மை சார்ந்த காரணமே முக்கியமாகிறது.
கடந்த இருபதாண்டுகளாகத் தமிழ் முதலான இந்திய மொழிகளின் கல்வியில் அமெரிக்காவில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுவருகிறது. தமிழ் கற்கும் மாணவர்களில் தமிழ்க் குடும்பங்களிலிருந்து வரும் இரண்டாம் தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. வீட்டிற்குள் பெற்றோர்கள் தமிழில் பேசுவதால், இவர்களுக்கு வீட்டுத் தமிழ் புரியும். ஆனால் பேச வராது. சிறிது பேசினாலும் சாதி சார்ந்த குறு மொழியாகவே இருக்கும். இந்த மாணவர்கள் தமிழில் தாத்தா - பாட்டியிடம் பேச, தமிழ் சினிமாவை, சினிமாப் பாட்டைக் கொஞ்சம் புரிந்துகொள்ள, (நான் யார் என்ற கேள்விக்குரிய விடையின் ஒரு முகமாக) பெற்றோரின் கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள என்று சொந்தக் காரணங்களுக்காகத் தமிழ் படிக்க வருகிறார்கள். பொருளாதார வாய்ப்புக் குறைவு என்ற காரணத்தால் இவர்களில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் படிப்பவர்கள் அபூர்வம். இங்குள்ள பெற்றோர் போலவே அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மருத்துவம், பொறியியல், சட்டம் படிக்கவே ஊக்கப்படுத்துகிறார்கள்.
தமிழ்ப் பெற்றோரைக் கொண்ட மாணவர்களில் மொழி படிக்க வரும் எல்லாரும் தமிழ் படிக்க வருவதில்லை. பலர் இந்தி படிக்கிறார்கள். இந்திய வம்சாவளியினர் என்னும் அடையாளத்திற்கு இந்தி கொஞ்சம் தெரிய வேண்டும் என்ற எண்ணம் இதற்கு ஒரு காரணம். இந்தி வகுப்பு பெரிய வகுப்பாக இருப்பதால் இந்திய வம்சாவளியினரிடையே உறவு வைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பது இன்னொரு காரணம்.
தமிழ் வம்சாவளி மாணவர்களே வெள்ளை மாணவர்களைவிட (அமெரிக்கக் கறுப்பு மாணவர்கள் தமிழ் படிப்பது அபூர்வம்) தமிழ் வகுப்பில் அதிகம் இருப்பதால், அவர்கள் தமிழ் படிப்பதன் நோக்கம் மேலே சொன்னபடி இருப்பதால், தற்போதைய தமிழ்ப் பாடத்திட்டமும் அதைப் பிரதிபலிக்கிறது. தென்னாசியப் பாடத்திட்டத்திலும் இந்திய வம்சாவளி மாணவர்களைக் கவரும் வகையில் - இந்துமத அறிமுகம், ஜனரஞ்சகக் கலாச்சாரம் (pop culture), அமெரிக்கா வாழ் இந்தியர்களின் கலாச்சார அடையாளம் போன்ற பாடங்களுடன் - பாடத்திட்டம் அமைகிறது. இந்த மாறுதல்கள் அமெரிக்காவில் போல் ஐரோப்பாவில் இல்லை.
உருவாகிவரும் உலகச் சந்தை மேல்நாடுகளில் தரும் தமிழ்க் கல்வியையும் பாதிக்கிறது. அமெரிக்காவின் பெரிய பல்கலைக்கழகங்கள் உலகப் பல்கலைக்கழகங்களாக விழைகின்றன. அதாவது, அரசியல், தொழில்நுட்பம், வணிகம், சட்டம், மருத்துவம் முதலான துறைகளில் பல நாடுகளிலும் அதிகார முன்னணியில் நிற்கும் வர்க்கத்தினரை (elite) உருவாக்க விழைகின்றன. இதன் விளைவாகத் தென்னாசியப் படிப்புத் துறையிலும் International Relations, Business Management, Global Health Outreach முதலான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. முன் போல் சமூக அறிவியல் படிப்பிற்கும் இலக்கியப் படிப்பிற்கும் அவற்றில் மொழியின் இடத்திற்கும் பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் குறைகிறது. தமிழ்நாட்டில், உலகச் சந்தை தரும் வாய்ப்புகளைப் பெற உலக மொழியான ஆங்கிலம் ஒன்றே போதும் என்ற எண்ணம் ஆழமாகவும் பரவலாகவும் இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மாணவர்களும் இதேபோல் தமிழ்நாட்டுச் சந்தையின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஆங்கிலம் போதுமே, தமிழ் எதற்கு என்று நினைக்கிறார்கள். இந்த நினைப்பின் பாதிப்பு அமெரிக்காவின் தமிழ்க் கல்வியில் இருக்கும், தமிழ்நாட்டில் தமிழ்க் கல்வியில் இருப்பதுபோல்.
இந்தக் கட்டுரை காட்டும் பருந்துப் பார்வை தென்னாசியக் கல்வி கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் நடந்துவந்த பாதையைக் காட்டுகிறது, இனி எடுக்கப்போகும் நிலையையும் காட்டுகிறது. இதுவே தமிழ்க் கல்வியின் பாதையும்.
- இ. அண்ணாமலை