வைர ஊர்வலம்
கள்ளிக்காட்டில்
நீ பொறந்தாலும்
எங்கள்
உள்ளக்காட்டில்
என்றுமே நீதான்
மகராசன்.
உயரத்து நயாக்ராவை
பாடியிருந்தாலும்
இதயத்து வயல்வெளி
தமிழ்ப்பாட்டில்
என்றுமே நீதான்
மகராசன்
உனது
சொற்கூட்ட வரிசைகளில்
சுகம் பேசும்
நீ வரைந்திடும்
வார்த்தை ஓவியத்தில்
சுகந்தம் பேசும்.
சிதறிக்கிடக்கும்
சிறு எழுத்தெல்லாம்
உன் விரலசைவில்
ஒன்று சேரும்.
அது நெஞ்சில்
நின்று பாடும்.
குறுந்தொகையொன்றை
திரைப்பாட்டில் தந்தாய்.
அதில்
அகங்கள் ஆயிரம்
வியப்பில் வென்றாய்.
வரிகள் பரிகளாகி
வார்த்தை தேரோட்டம்,
அவை ஒவ்வொன்றும்
வகுக்கும் சக்ர வியூகம்.
சாரதி இல்லா பாவலனே...!
சொற்புரவி மீதேறி
தமிழ்ப் பாட்டில்
உன் ஊர்வலம்.
என்றும் ஊர்ந்துவருமே
எங்கள் உயிர்வலம்.