மனமெனும் தோழன்
என்னையறியாமல்
என்னை இயக்கும்
என் நண்பன்
எனக்குள் இருப்பவன்
அக வெளியுள்
அதிரும்
நாண் அவன்
புறவெளியில்
புலப்படும் புதிர் நான்
அவன் பேசுவது
உணர்வுகளால்
நான் பேசுவது
உதடுகளால்
நானும் அவனும்
நல்ல நண்பர்கள்
இருப்பினும்
இடைவெளிகள் உண்டு
எமக்கிடையிலும்
மௌனமும் தனிமையும்
என் வழி
கூச்சலும் கும்மாளமும்
அவன் மொழி
நம் ஊர்ச்சாமிகள் போல்
நான் பேசாமல் இருப்பேன்
நாய்க்குட்டி போல் எப்போதும்
குரைத்துக் கொண்டிருப்பான்
அவனும் நானும்
மோனலிசா போல்
ஓவியமான
சந்தர்ப்பங்களும் உண்டு
அவன் மௌனமான
சந்தர்ப்பங்களில்
ஆயிரம் குரல் பூட்டி
அழகு பார்ப்பேன்..
அதிசயமான
ஆச்சரியக் குறியாய்
அவனும் முற்றுப்
பெறாத காற்புள்ளியாய்
நானும் நம் இருவரையும்
அடக்கிய அடைப்புக்
குறியாய் என் உருவம் ஆகி
உலவுகிறேன் ..