யாத்திரை

ஆரம்ப
அத்தியாயங்களை
மீண்டும் மீண்டும்
படிக்கின்றன
தொடர்ந்து வரும்
அத்தியாயங்கள் !
நேற்றுக்களோடு
கைகுலுக்கத்தான் ஆசை
இன்றைய நாட்களுக்கு !
தாய்ப்பாலின்
இனிமையை
கசப்புகளுக்கு
ஊட்ட நினைக்கின்றன
உணவு மேசைகள் !
பள்ளிப்
பைகளின்
பொத்தல்களூடேதான்
இன்றைய காட்சிகள்
விரிகின்றன !
முட்டிச்
சிராய்ப்பின்
சுகங்கலந்த
வலிகள்
இன்றைய
காயங்களுக்கு
மருந்திடுகின்றன !
துவக்கத்தின்
நுழைவாயிலில்
முடிவுபெறவே
விரும்புகின்றன
நமது யாத்திரைகள் !