கடைவீதி

நல்லவேளை..
யாரும் பார்க்கவில்லை..
மெல்ல கீழே குனிந்தெடுத்து
அவசரமாக பையில் திணித்து
விரைவாய் நடக்கிறேன்..
கொதிக்கின்ற கோடை வெயிலில்
உருகிக் கொண்டிருக்கும் தார்ச் சாலை..

சட்டைப்பையில்
பென்ஷன் பணமும்..
வளர்ந்த பிள்ளை
ரொம்ப நாட்களாய்
ஆசைப் பட்டு கேட்கும்
டி ஷர்ட் ஜீன்ஸ்
ஸ்போர்ட்ஸ் ஷூ
என்று நீளும் பட்டியலில்
ஏதாவதொன்றை இம்மாதம்
வாங்கிக் கொடுக்க வேண்டும்..

அதோ
தென்பட்டுவிட்டார்
நான் எதிர்பார்த்தவர்..
பையிலிருந்து மெதுவாய்
வெளியே எடுத்ததை
அவரிடம் நீட்ட
இது ரொம்பவும்
நைந்து போய்விட்டதய்யா
தைத்தாலும் எத்தனைநாள்
தாங்குமென்று தெரியாதென்றார்
காலணிகள் பராமரிக்கும்
ஏழைத்தொழிலாளி..

எழுதியவர் : ஜி ராஜன் (22-Apr-16, 9:00 pm)
பார்வை : 143

மேலே