பெரு மௌனம்
ஒரு முள்ளின் கீறலில்
இதயத்தின் உள்வட்டத்தில்
உண்டான அதிர்வுகள்
உனது சொல்லினால்
வருமெனில் ..
சிறகொடிந்த
பறவையாகிறேன்
விரல் நுனி
கதவிடுக்கில்
பட்ட வலியை
அது தருமெனில்..
கடலும் வானும்
தொடுகின்ற
தூரத்து விளிம்பில்
ஓடி நின்று
ஒளிகிறேன் ..
சுருதி கூட்டுகிறேன்
கற்பாறையில்
விரல்கள் தேய்ந்ததுதான்
மிச்சம்..
அசட்டு ரோமங்கள்
அதற்கும் கூட
சிலிர்த்தெழ
அரை இருளில்
கருவண்ணப்
பூனையை தேடுகிறேன்
இதயத்தின் துடிப்புகள்
மெல்ல அடங்கும்
நிசப்த நொடியினில்
பெரு மௌனம்
இசைக்கும்
ராகம்
எனக்குள்ளே
அமிழ்ந்திட
கழுகொன்று
மேலே வட்டமிடும்
காட்சியை
காண்கின்றன
உயிரற்ற
என் விழிகள் ..
மேற்கில்
அஸ்தமனமாகும்
சூரியனின்
மஞ்சள் கிரணங்கள்
அணிந்து
அகல்கிறாய்
நீ..
இக்கணத்தில்!