வாழ்வு சிறந்திட வேண்டும்-மே- 1- தொழிலாளர் தின – போட்டி கவிதை

ஓட்டைக் குடிசையில்
ஒடுங்கி கிடக்கும்
பாட்டாளி ஒன்றுமில்லாமல் கிடக்கிறான் பாரு!- அவன்
பழஞ்சோற்றுக்கே ஆலாய் பறக்கிறான் பாரு!- நல்
வாழ்வு மலர்வதெப்போது?-அவன்
பெறுவ தெலாம் வெறும்தீது!

ஒட்டுச் சட்டையில்
ஒளிந்து கிடப்பது
ஒடிசலான உடம்பு மட்டுமே சொத்து!- அதில்
ஒட்டியிருப்பதோ உயிரெனும் சத்து!
அதையுங்கூட விடுறான் – அதில்
அவதிதானே படுறான்!

ஓயா உழைப்பினை
ஊருக்கு தந்திட்டு
ஓயாமழையினில் ஒழுகும் குடிசையில் ஒதுங்குறான்-கிழிசல்
பாயுமில்லாமல் மூலையில்தானே பதுங்குறான்!-மழைக்
குளிராலே உடல்நடுங்கி – பின்
குறுகித்தானே படுக்கிறான்!

ஏங்கி இருப்பவனும்
துவண்டு கிடப்பவுனம்
விம்மி எழுந்திட வேண்டும் சிங்கமென- கொடி
தாங்கியே தலைமைக் கொண்டிட நல்லதொரு
காலம் வந்திடவேண்டும்-நல்
வாழ்வு சிறந்திட வேண்டும்.

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (23-Apr-16, 10:54 am)
பார்வை : 218

மேலே