என் சமையலறையில்

ஒரு நேர்கோட்டின் ஒரு
புள்ளியிலிருந்து எதிரெதிர்
திசைகளில் பயணப்பட்டும்
ஒன்றுபடுகிறது நம் காதல் நமக்கு..!

**********
புரிதலொன்றே காதலென்று புரிதலற்று
புரிந்து கொள்ள எத்தனித்தும்
புரிபடா களேபரங்களில் போய்
முடியும் விவாதங்களின் முடிவில்
வசப்படுகிறாய் நீ எனக்கு..!

***********
இக்கோடை மதியங்களின் வெம்மை
தணிப்பதொன்றே நம் ஊடலின்
உண்மையாக இருக்கிறது,.!

************
உன்மதிய செல்பேசி அழைப்பகளின்
சிணுங்களின்றி உனக்கும் எனக்கும் இடையில் மோனத்திருக்கும்
இம்மவுனம் இம்மாலை வரை நீட்டிக்கப்படுகிறது..!

*************
இன்றைய என் சமையலறையின்
பிண்ணனி இசையாக ஒலித்துக்
கொண்டிருப்பது காலையில் நீ
பாடிய பாடலின் வரியாக இருக்கிறது,..!

*************
வாசல் திறக்கையில் நான்
உதிர்க்கப் போகும் புன்னகைக்கான
ஒத்திகையில் உதிர்ந்துகொண்டிருப்பவை
என் வெட்கங்களாக இருக்கின்றன..!

எழுதியவர் : .வித்யா (26-Apr-16, 10:01 pm)
பார்வை : 77

மேலே