முகவரி தந்த பாவலன் பாரதிதாசன்
(29-4-16 இன்று பாவேந்தர் பிறந்த நாள் )
முகவரி தந்த பாவலன் பாரதிதாசன்
பாவலர் கருமலைத்தமிழாழன்
வரிகளிலே முருகனையே முதலில் பாடி
----வளர்ந்திட்ட அறிவாலே பாதை மாற்றிப்
பெரியாரின் பகுத்தறிவை நெஞ்சில் ஏற்றுப்
----பெரும்புரட்சி செய்தவர்தாம் பாவின் வேந்தர்
அரிதான பாரதியின் தாச னாகி
----அடியொற்றி அவரைப்போல் எளிமை யாக
உரிமைக்குக் குரல்கொடுக்கும் உணர்ச்சிப் பாட்டால்
----ஊரினையே மாற்றியவர் பாவின் வேந்தர் !
சாட்டையிலே சொற்களினை வீசி மூட
----சாதிகளின் தோலினையே உரித்த வர்தாம்
வேட்டெஃக சொற்களிலே தமிழை வீழ்த்த
----வெறிகொண்ட பகைவரினைச் சுட்ட வர்தாம்
கூட்டிற்குள் இருந்தபெண்ணைக் கல்வி கற்கக்
----கூட்டிவந்தே ஏட்டினையே தந்த வர்தாம்
பாட்டாளித் தோழர்க்குத் தோளாய் நின்று
----பாட்டாலே விடியலினை விதைத்த வர்தாம் !
தமிழாக மட்டுமிங்கே வாழ்ந்தி டாமல்
----தமிழுக்காய் வாழ்ந்தவனே பாரதி தாசன்
தமிழெங்கும் முன்நிற்கப் பாட்டின் மூலம்
----தலைநிமிரச் செய்தவனே பாரதி தாசன்
அமிழ்தென்று புகழ்ந்ததுடன் நின்றி டாமல்
----அனைவருக்கும் உணர்த்தியவன் பாரதி தாசன்
உமியாகத் தமிழ்ப்பகையை ஊத நெஞ்சில்
----உரந்தன்னை விதைத்தவனே பாரதி தாசன் !
சிங்கத்தின் முழக்கந்தான் தாசன் பாட்டு
----சிறுத்தையதன் பாய்ச்சல்தான் தாசன் பாட்டு
பொங்குகடல் வேகந்தான் தாசன் பாட்டு
----பொலிமின்னல் வீச்சுத்தான் தாசன் பாட்டு
வெங்கதிராய்ச் சுட்டெரிக்கும் பழம்மூ டத்தை
----வெண்ணிலவாய்க் குளிர்விக்கும் தமிழ்நெஞ் சத்தை
துங்கமணி போல்வந்த அவரின் பாட்டால்
----தூக்கத்தை விட்டெழுந்தார் தமிழ ரெல்லாம் !
கவிஞரெனும் பரம்பரைதாம் இவருக் கன்றிக்
----கவியுலகில் பெற்றவர்கள் யாரு மில்லை
புவிதன்னில் புரட்சிப்பா வேந்தர் என்று
----புகழ்பெற்றோர் இவரைப்போல் யாரு மில்லை
செவிகளிலே நுழையுமிவர் பாட்டைப் போல
----செந்தமிழை உயர்த்துமெந்த பாட்டு மில்லை
நவின்றிட்ட இவர்பாட்டே தமிழ னுக்கு
----நாட்டினிலே முகவரியைத் தந்த பாட்டு !
பாரதிபோல் யாப்பினையே சீர்தி ருத்திப்
----பாமரர்க்கும் புரியுமாறு கவிதை நெய்தோன்
ஊரதிரக் கருத்தினிலே புரட்சி ஏற்றி
----உயர்குடும்பம் உருவாகப் பாப்பு னைந்தோன்
சீரழிந்த தமிழகத்தைத் தமிழு ணர்வை
----சீர்செய்யக் கனல்தெறிக்கம் பாபொ ழிந்தோன்
வேரழிக்க வந்தபிற மொழிய ழிக்க
----வெகுண்டெழுந்த பாவேந்தர் போல்நா மெழுவோம் !