எனக்குள் ஒரு பாடல் -சுஜய் ரகு
எனக்குள் ஒரு பாடல்
இசைத்துக் கொண்டிருக்கும்
அவ்வப்போது
பூபாளத்தின் குயிலாக......
பனிக் கிளையோடும் அணிலாக......
வீட்டு முற்றத்தின் சிட்டாக.....
அந்தியில் கூடு விரையும் கொக்காக....
ஆனந்தமிக்க அப்பாடல்
என் சோர்வுறு தருணங்களை
சிதைக்கிறது
குளிர் நதியை
மனதின் மேற்பரப்பில்
காற்றுபோல நீந்தச் செய்கிறது
அப்பாடல் என்
கனவுப் பாடலாக இருக்கலாம்
அக்கனவு
என் காதலானதாகக் கூட இருக்கலாம்
ஒருநாளில்
அப்பாடல் தூர்ந்துபோனது
அலைகளற்ற அதன் கடலில்
அத்துணை நிசப்தம்
நான் காதலை
ஒரு செல்லப் பிராணியைபோலக்
கூட்டிக்கொண்டு
அப்பாடலின் வீதியில்
அலைகிறேன்
பால்வெளியைபோல்
நீள்கிறது அதன் வெளி
இப்போதெல்லாம்
தூக்கத்தில் அடிக்கடித் திடுக்கிட்டு
விழிக்க............அப்பாடல்
ஒரு வனம் துறந்த
யானையைப்போல்
பிளிறிக் கொண்டிருக்கிறது........!!