பெஞ்சு

கேவலம் ஒரு
பெஞ்சுதானே என்கிறீர்களா !

பிரசவ அறை
முன்னே முதன்முதலாய்
தன் குழந்தை முகங்காண
காத்திருக்கும் தந்தைகளின்
நெஞ்சுத் துடிப்பை
கேட்டுப் பழகியிருக்கிறேன் !

வகுப்பறையின்
கடைசி வரிசையில்
வாழ்க்கைச் சதுரங்கத்தின்
கருப்பு வெள்ளை கட்டங்களில்
எதிர்காலத்தில் என்னை நினைவுகூரும்
அனுபவங்களை கற்றுக் கொடுப்பதால்
என்னையே விரும்பும் ஒரு கூட்டத்தை
வருடங்களாய் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் !

என் மீது ஏறி நிற்கச்
சொல்வதால் வம்பு செய்யும்
மாணவர்கள் திருந்தி விடுவார்களென
ஆண்டாண்டு காலமாய் ஆசிரியர்களை
நம்ப வைத்திருக்கிறேன் !

டீ கடை வாசலில்
அரசியல் நாட்டுநடப்பு காதல்
இத்யாதியென விவாதிக்கும்
பாமரர்களின் பாராளுமன்றமாயிருக்கிறேன் !

கால்நூற்றாண்டு
முன்பு வரையிலும்
கிராமத்து திரைக் கொட்டகையில்
தரை டிக்கட் ரசிகன்
கண்ட கனவுகளின்
முதல் படிக்கட்டாய்
காட்சியளித்துக் கொண்டிருந்தேன் !

பூங்காக்களில்
போய் மறைந்த வசந்தத்தை
அசைபோட வரும் முதியவரும்
வேலையற்ற பொழுது போக்கிகளும்
வீட்டில் காதல் பேச இயலா தம்பதிகளும்
தேடித் தேடி வந்தமரும் ஞான பீடமாயிருக்கிறேன் !

வந்து நிற்கும்
புகைவண்டியில்
காலியாக கிடக்கும் என்னைப்
பார்த்தால் ஓடோடிவருபவர்கள்
வேர்க்கடலைத் தோலும்
பழைய செய்திதாட்களையும்
விட்டெறிந்து விலகும்போதும்
வருத்தமடைந்ததில்லை !

இந்த மாபெரும் நாட்டில்
ஜனநாயகத்துக்கு ஐயப்பாடு
வரும்போதெல்லாம்
அரசியல் சாசன பெஞ்சென்று
என் மீதமர்ந்துதான்
நீதியரசர்கள் தங்கள்
வேத புத்தகங்களை
புரட்டிப் பார்க்கிறார்களாம் !

அங்கு நான் நிஜமாகவே
இருக்கிறேனோ இல்லையோ
பெஞ்செனும் பெயரிட்டு
எனக்குப் பெருமை செய்திருக்கிறார்கள் !

வாருங்கள் !
என்மீதமர்ந்து சிந்தியுங்கள் !
நீங்களும் கவிதை எழுதுவீர்கள் !

எழுதியவர் : ஜி ராஜன் (29-Apr-16, 8:45 pm)
Tanglish : paynchu
பார்வை : 64

மேலே