எங்கே அவன்

அறைக்குள் தாழிட்டு
திறக்கத் தெரியாமல்
கதறியழும் சிசுவை
தாழ்பாள் உடைத்து மீட்ட
பக்கத்து வீட்டு இளைஞன்..

பிள்ளைப் பேறின்
அபாயகட்டத்தில்
தாயையும் சேயையும்
காப்பாற்றி அறுவை சிகிச்சை
அறையிலிருந்து புன்முறுவலுடன்
வெளியே வந்த மருத்துவர்..

குடும்ப யாத்திரையில்
காட்டு மலைப்பாதையின்
கொண்டைஊசி திருப்பத்தில்
பழுதான வாகனத்தை
நொடிப்பொழுதில் சரிசெய்த
வழிப் போக்கர்..

காலை நடை சென்று
சாலையில் மயக்கமுற்ற
அப்பாவை மருத்துவமனையில்
சேர்த்தபின் தொலைபேசியில்
தொடர்பு கொண்ட
ஆட்டோ ஓட்டுனர்..

கோளாறு காரணமாக
பொட்டல் காட்டில்
மணிக்கணக்கில் நின்று
போன ரயில் பெட்டியில்
வயிற்றுவலியால் கதறிய
தங்கையின் குழந்தையை
கைவசம் இருந்த மருந்தை
தந்து சிரிக்க வைத்த
சக பிரயாணி..

பெருவெள்ளத்தில்
நகரம் மூழ்கிய நேரம்
மொட்டை மாடியில்
தவித்து நின்ற
வயதான தாயாரை
காப்பாற்றிய மொழியறியா
ராணுவ வீரர்..

இது போல
ஊர்பேர் தெரியாத
யாரோ ஒருவரை
இக்கட்டில் சந்தித்திருந்தும்
கடவுளைப் பார்த்ததில்லை
என்றா சொல்கிறீர்கள் !

எழுதியவர் : ஜி ராஜன் (29-Apr-16, 8:48 pm)
Tanglish : engae avan
பார்வை : 129

மேலே