கவிதை தொக்கு-9 - சந்தோஷ்

நெருப்பு புரவி
--------------------------


நெருப்புப் பழங்களை
தின்றுச் செரித்ததுப்போல
நாடி நரம்பு
தசை புத்தியெல்லாம்
குரோதம் பற்றி எரிந்தது
என் நம்பிக்கைச் சிற்பங்களை
துரோகிகள் வெட்டியெரித்த சமயத்தில்..!

உண்டு திளைத்த
கனியின் மீதங்களாய்
சிவந்துக் கிடந்தது
முன்னாள் காதலியின்
செந்நிற வெப்ப இதழ்கள்
ஞாபகச் சாத்தான் அறையில்
அவளை கொஞ்சகொஞ்சமாய்
பிணமாக்கி எரித்த ரணநாழிகையில்..!

இனியென் வாழ்க்கையில்
கதை திரைக்கதையெல்லாம்
எவரும் எழுதிடக்கூடாது
என் தலையெழுத்தை
நானே எழுதிட வேண்டும்
என் உயிரை
நானே இயக்கிட வேண்டும்
வரும் மரணத்திலும்
நான் என்னை எரித்து
நானே அதை சுவைத்திட வேண்டும்.

மீண்டுமொரு மீளும் பிறவியில்
நானே ராட்சத
நெருப்பு புரவியாய் பிறந்திடவேண்டும்.
பொறி பொறியாய் பொங்கியெழுந்து
வஞ்சகன்.. நயவஞ்சகிகளை
சுட்டுப்பொசுக்கி..
சுடும் சாம்பலை
நானே பெரும் வெப்ப
பேயாய் தின்றிட வேண்டும்.

ஆம்.. இப்போது
தீ உரசிய கன்னத்தில்
நெருப்பின் வண்ணம்.
மூங்கில்கள் உரசி
தீப்பிடித்த அனலாய்
நாக்கு தீச்சுவாலையாக எரிகிறது
செம்மொழியில் தீச்சுடரான
அக்னி கவிஞனின்
”வீழ்வேனென நினைத்தாயோ”
அனல் வரிகளை
வாசிக்கின்றப் போது...!**

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (30-Apr-16, 12:29 pm)
பார்வை : 133

மேலே