மேதினப் பறவை-சுஜய் ரகு-
சென்ற வருடம்
வலசைபோன மேதினப் பறவை
இன்று திரும்பியிருக்கிறது
சிறகு நிறைய பூக்களோடும்
அலகு நிறைய வாழ்த்துக்களோடும்
வானெங்கும் அளாவுகிறது
இன்றதிகாலை முதலே
செருப்புத் தைப்பவனுக்கு
வாழ்த்துக் கூற
அவனதன் கால்களை
நோக்குகிறான்
பூக்காரிக்கு கைகுலுக்க நீட்ட
அவள் கைகள் பூ கட்டுவதிலேயே
மும்மூரம் காட்டுகிறது
இக்கோடையை ரசித்தபடி
இளநீர் வெட்டுபவனையோ
நெருங்கவே
பயமாய் இருக்கிறது
முழுக்க முக்காடிட்டு
மாட்டுவண்டியை விரட்டுபவனின்
கையோ கண்களோ எதுவும்
தென்படவில்லை
சந்தைப் பக்கம் போனால்
"வாழ்த்தா அதெல்லாமில்ல"
என விரட்டுகிறார்கள்
வாழ்த்தென்பதை மேலோட்டமாகப்
புரிந்து கொண்டாலும்
ஏனோ மீன் வியாபாரியும்
கசாப்புக் கடைக்காரனும்
"அப்படி ஓரமா நில்லு"
என்கிறார்கள்
உடன் நிற்கும்
பிச்சைக்காரர்களுக்கு
வாழ்த்துச் சொல்ல மனமில்லை
"இதுவும் உழைப்புதான்"
என்றொருவன் முணுமுணுக்கிறான்
சோர்வுடன் காணப்பட்ட
மேதினப் பறவை
கடைசியாய் ஒரு
செங்கல் சூளைக்குள்
நுழைந்ததாகக் கேள்வி
விளகொளி ஒளிர ஒளிர
அதன் கண்கள் இருள இருள
பிறகது
தொலைந்து போயிருக்கலாம்