கவிதை தொக்கு 10 - கற்குவேல் பா

பூட்டிய எருதுகள்
களைப்படையும் முன்னமே
உழுது முடித்திருப்பார்
பாட்டையா !

அவர் வியர்வை
மண்ணைத் தொடும் முன்னே
முந்தானையில்
துடைத்துச் செல்லுவாள்
அப்பத்தா !

சிற்றப்பன் வீட்டில்
மண்வெட்டி வாங்கி
பங்காளி நிலத்திற்கும் சேர்த்து
வரப்பு கட்டிடும்
அப்பா ;

அம்மா
கொண்டு வரும்
பழைய சாதத்தை - அமிர்தம்
என்றவாறே
வரப்பிலமர்ந்து உண்ணுவார் !

அவர்
மீதம் வைத்த
சாதத்தை - இப்போதாங்க
அமிர்தமா இருக்கு என்றே
கரைத்து குடிப்பாள்
அம்மா !

காட்சியில்
அங்கே வட்டமிட்டிருந்த
நாரை கொக்குகளும் - காதல்
போதை கொள்ளும் !

மழை பொய்த்து
பஞ்சம் தலை தூக்க - கிழக்கே
பங்கு போட்டு
விற்கத் துவங்கினர்
பங்காளிகள் !

மேற்கே
சிற்றப்பன்கள் சேர்ந்து,
தோல் தொழிற்சாலையை
அமைத்து - கழிவு நீரை
தெற்கே விட ..

வடக்கிருந்த
பிசினாந்தையார் கதையாய்
தனித்து நின்றது ,
முப்போகம் விளைந்த - எங்கள்
செம்மண் பூமி !

அக்காவின்
திருமணத்திற்கு ,
பாதி நிலம் விற்க,
தம்பியின் படிப்பிற்கு,
மீதி நிலம் விற்க ..

எஞ்சிய
காணி நிலத்திற்கும்,
ஆளுங்கட்சி கட்டிடக்காரன்
துணிந்து மிரட்டிட ..

கைவிட்டுப்போன
வயல்வெளியில் - இன்று
வளர்ந்து நிற்குது
அடுக்குமாடிக் கட்டிடம் !

அதைக்
கடந்து செல்லும் நொடிகலெல்லாம் ,
இறந்த பாட்டையாவின்
வியர்வை வாசம்
நாசி தொடும் !

சுரக்கும்
கண்ணீரோடு சேர்ந்தே,
உயிரும் மண்ணில்,
உருகி விழும் !

- பா . கற்குவேல்

[ வாய்ப்பளித்த தோழர் கவிஜி அவர்களுக்கு நன்றிகள் ]

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (1-May-16, 10:57 pm)
பார்வை : 157

மேலே