நீர் இன்றி அமையாது உலகு - போட்டி கவிதை

குவளையிலிருந்து நெகிழி
குடுவைக்கு மாறியதில்
கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தது
தண்ணீர்
யாரும் கண்டுகொள்ளவில்லை
மூடி திறப்பும்
குடுக் குடுக் சத்தமும்
அப்போதைய தாகம் தீர்ந்த
திருப்தியில்
மறந்து போனது அந்த
தண்ணீரின் தாகம்

யோசிக்க மறந்து விட்டோம்
சட்டைப்பையில்
இருக்கும் இறுதி ஒற்றைரூபாய்
சற்று தெம்பாக இருக்கலாம்
ஆனால் எத்தனை காலம் ?
அது ஒரு ஒரு பைசாவாய்
கரைந்து கொண்டிருக்கிறது

சொத்து சேர்க்க மறந்த
தந்தை மகனிடம்
வெத்துக் கை காட்டுகையில்
மகன் பார்க்கும் கேவல பார்வை
கூனி குறுக வைக்கும்
ஆனால் இந்த விசயத்தில்
நமக்கிருக்கும் ஒரு நம்பிக்கை
நாம் அன்று இருக்க போவதில்லை

செவ்வாய் கிரகத்தில்
தேடுதல் நடத்தி என்ன பயன்
மாதம் மும்மாரி பொழிந்த
பூமியிலேயே
பட்ட மரங்களை
பார்த்துக் கொண்டிருக்கிறோம்
அந்த செவ்வாயின்
விட்டத்தில் மட்டும் என்ன
கிடைக்க போகிறது
அண்ணார்ந்து பார்க்கையில்

இலைதழையில் கூட
சொட்டிக் கொண்டிருந்த நீரை இன்று
சொட்டு பாசனம் வரை கொண்டுவந்து விட்டதில்
ஒரு சின்ன வருத்தமும் இல்லாத
நாம் செவ்வாயில் குடியேறினால்
அது செவ்வாய்க்கு தோசம்

காற்று அனலாய் வீசுகிறது
கிணறு வீணாய் கிடக்கிறது
இயற்கையே உனக்கு கருணை கிடையாதா ?
வாய் இருப்பதால் இப்படி நீ
வசவு பாடி முடித்தது
நன்கு கேட்கிறது
நல்ல வேளை உன்
காதுகளுக்கு இயற்கை பேசுவது
கேட்கவில்லை
அது நாராசமாய் சென்னை
பாசையில் வசவு பாடுகிறது
உன்னை

நூறில் இரண்டு பங்கு தான்
என தெரிந்தும் உன்
ஆறாவது அறிவு செய்தது என்ன
ஆறுகளை பட்டா போட்டது
மட்டும் தான்

ஒன்றை நன்றாக
புரிந்து கொள்ளுங்கள்
பணத்தை எவ்வளவு நக்கினாலும்
ஒரு சொட்டு நீர்
வராது காரணம் அது
உங்களுடன் பழகி பழகி
ஈரமற்று கிடக்கிறது

இனியும் நீ கண்டு கொள்ளாமல் விட்டால்
நீ மொண்டு கொள்ள
ஒரு துளியும் இருக்காது
நீ இன்றி இருந்தது
இனி இருக்கும் ஆனால்
"நீர் இன்றி அமையாது இவ்வுலகு"

எழுதியவர் : கவியரசன் (2-May-16, 11:21 am)
பார்வை : 3867

மேலே