நீங்களும் ஞானி ஆகலாம்
நீங்களும் ஞானி ஆகலாம் ..
ஒரு ஞானி இருந்தார். அவர் செய்த பெரும் தவத்தின் பயனாய் இறைவன் அவர்முன் தோன்றி ஒரு மாங்கனியை பரிசளித்தார். அந்த மாங்கனியை எவரொருவர் உண்டாலும் அவர் நினைத்தது உடன் நடக்குமென்றும் சொல்லி மறைந்தார்.
ஆசைகளனைத்தையும் துறந்து சந்நியாசி ஆகிவிட்ட அவருக்கு அதை அருந்தி தான் நினைத்ததை பெற விருப்பம் இல்லை. எனவே, அதை அருந்தாமல் எப்பொழுதும் அவர் தன் கையில் வைத்திருந்தார். இறைவன் அளித்த பரிசு என்பதால் அக்கனி வாடாமல், அழுகாமல் அப்படியே இருந்தது.
துன்பங்கள் நேரிடும்பொழுது மனிதருள் பலரும் துன்பங்கள் யாவும் விலகி நெடுநாள் உயிர் வாழ வேண்டுமென்று தான் நினைக்கிறார்களே தவிர, உடன் இறந்துவிட வேண்டுமென்று எவரும் வேண்டுவதில்லை என்பதை ஞானி நன்றாய் அறிந்திருந்தார். விரும்பிய வேளை மரணம் வந்து தன்னைத் தழுவும் என்று தெரிந்திருந்தும் கூட குருக்ஷேத்திர யுத்தகளத்தில் விஜயன் வேய்ந்த அம்புப் படுக்கையில் பீஷ்மர் படுத்திருந்தாரே சிலநாள்.
எனவே, அவர் சமாதி நிலை அடையும் தருணம், அதை அவர் சிஷ்யர் ஒருவரிடம் கொடுத்து, எவரொருவர் அம்மாங்கனியை அருந்துகிராரோ அவருக்கு மரணம் உடன் விளையுமென்று பொய்யுரைத்திருந்தார்.
ஆகையால், அக்கனியைப் பெற்றுக்கொண்ட சிஷ்யர் அவர் செல்லும் இடங்கள் எல்லாம் அதை உண்ணாமல் அப்படியே தன் கைகளில் வைத்திருந்தார்.
ஒருநாள், நெருங்கிய நண்பர்கள் மூன்று பேர் அவரை சந்தித்தனர். அவர் கையில் மாங்கனி இருப்பதை அவர்கள் மூவரும் கண்டுகொண்டனர். கையில் கனியிருந்தும் அதை ஏன் நீங்கள் உண்பதில்லை என்று மூவரில் ஒருவன் கேட்கவும். அதை அவர் அருந்தினால் உடன் இறந்துவிடுவார் என்று அதை அவருக்குக் கொடுத்த அவர் குருநாதர் சொல்லியிருந்ததை அவர்களிடம் தெரிவித்தார்.
அப்படியென்றால், மாங்கனியை நீங்கள் எங்காவது வீசியெறிந்திருக்கலாமே, ஏன் அதை வீணாகக் கைகளில் எடுத்துச் செல்கிறீர்கள் என்று வேறொருவன் வினவ, வீசியெறிந்துவிட்டால், அதை ஒரு மனிதனோ அல்லது ஒரு பறவையோ உண்டுவிட்டால், அதன் மரணத்திற்கு நான் அல்லவா பாவம் சுமக்கவேண்டும். எனவே, அதை எறியாமல் வைத்திருக்கிறேன் என்று பதில் அளித்தார்.
இதுவரை கேள்வியொன்றும் கேளாதிருந்த மூன்றாமவன், சுவாமி .. வாழ்வில் ஒருவர் நினைப்பது நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று வினவினான்.
அதற்கு, படைத்தவன் அருளிருந்தால் நினைத்தது நடக்கும் என்று பதிலளித்தார்.
மூவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் "உண்மையாகவே நடக்குமா என்று வினவினர்.
ஏன் நடக்காது .. நடக்கும். வேண்டுமானால் நாம் நால்வரும் இருநொடிகள் கண்மூடி, எது நடக்க வேண்டுமென்று அவரவர் மனதில் நினைத்துக்கொள்வோம். பிறகு, கண் திறந்து பாப்போம் என்றார்.
மூவரும் அவர் விருப்பத்திற்கு இணங்கி இருநொடிகள் கண்மூடியிருந்து பின் கண்கள் திறந்து பார்த்தனர்.
அப்பொழுது அவர் கையிலிருந்த மாங்கனி காணாமல் போயிருந்தது.
அவர் நாலவரில் யார் அதை உண்டார்களோ .. சொல்லமுடியுமா நிச்சயமாக உங்களால் ?