12 பிவி பாகம்- 7

முதல் நாள் பச்சையும் பசுமையுமாய், மலையும் ஏரியும் தோட்டமுமாய் அழகாய் தெரிந்த அதே சீதல்கஞ் இப்போது பலிபீடமாய் சுடுகாடாய் மயானமாய் எலும்பும் கபாலமும் நிறைந்த ஒரு மாயபூமியாய் தெரிந்தது பிவிக்கு. எத்தனை ஆசையோடு இன்புற்றிருக்க வந்தவள் இப்போது எங்கே போகிறோம் யாரிடமிருந்து ஓடுகிறோம் எவ்வளவு நேரம் ஓடுவோம், என்று எதுவும் தெரியாமல் புரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறாள். வெற்றி கிட்டுமா, இந்த நரகத்திலிருந்து விடுதலை கிட்டுமா.. மறுபடியும் ஊர் போய் சேர்வோமா.. அம்மா அப்பாவை பார்ப்போமா?.... என்று தன்னை கேட்டுக் கொண்டே ஓடிக் கொண்டே இருந்தாள் பிவி.

ஓடி நடந்து களைத்து விட்டிருந்தாள். 2 மணி நேரமாவது ஓட்டமும் நடையுமாய் கடந்திருப்பாள். இந்நேரம் தன்னை காணவில்லை என்று தெரிந்திருக்கும். ஆட்களை ஏவி விடுவானோ அந்த ட்ரூப் ஆள். அவர்கள் தன்னை அடைவதற்குள் பஜாரை அடைந்துவிடவேண்டும். பஸ் நிலையம் பஜாரிலிருந்து சிறிது தூரம் தான் என்று அவளுக்கு தெரியும். கொஞ்சம் இருட்டு போய் விடிய ஆரம்பித்திருந்தது. கீழ்வானம் சிவந்திருந்தது. அப்படியென்றால் இரவு முழுதும் நடந்திருக்கிறாள் பிவி. புதர்களை தாண்டி சாலைக்கு வந்தாள். கால் கெஞ்சியது.. நடக்க முடியாமல் சிறிது நேரம் உட்கார்ந்தாள்.

சத்தம் கேட்டு திரும்பியவளுக்கு அதிர்ச்சி... சில பேர் கையில் தடியுடன் சாலையின் தூரத்தில் வருவது தெரிந்தது. கெஞ்சிய கால் வலுப்பெற்று இப்போது ஓடத் தொடங்கினாள். ஓடி ஓடி சாலை போகும் வழியே ஓடினாள் தூரத்தில் பஜார் கண்பட்டது. இன்னும் வேகம் அவள் கால்களுக்கு கிட்டியது. பஜாரை நெருங்கும் வேலையில் திடீரென ஒரு கல் தடுக்கி தடுமாறி தூங்கிக் கொண்டிருந்த ஒரு ஆள் மீது போய் மோதி கீழே விழுந்தாள். விழுந்தவள் கண் சொருகி மயக்கமாவதை உணர்ந்தாள். அப்படியே அசையக் கூட தெம்பிலாமல் கிடந்தாள். பின்னே தடியுடன் வந்தவர்கள் தன்னை தாண்டிச் சென்றனர். மறுபடியும் போன வழியே வந்தனர். அருகே தூங்கிக் கொண்டிருந்தவர் எழுந்து உட்கார்ந்தார். மேக்னா மேக்னா என்று முனகினார். பிவி திரும்பி அவர் முகத்தை பார்த்தாள், சித்தம் பிசகிய அதே முதியவர் மேகனாவின் தாத்தா. அதற்க்கு பின் எதுவும் தெரியாமல் கண் மூடி மயங்கிவிட்டாள் பிவி.

சிறிது நேரத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினர். கண் விழித்தவள் சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். சுற்றும் முற்றும் தேடினாள். தடியோடு வந்தவர்களை காணவில்லை. மேகனாவின் தந்தையும் தாத்தாவும் அருகே இருந்தனர். மேகனாவின் அப்பா “ஹொவ் ஆர் யு நொவ்? ஹூ ஆர் யு?” என்றார். தனக்கு புரிந்த பாஷையில் பேசினாலும் பிவிக்கு பதில் சொல்ல வாய் வரவில்லை.தான் யார் ... இங்கே எப்படி வந்தாள்... அந்த கேள்விகளுக்கான விடைகளை தன்னைத்தானேக் கேட்டுக் கொண்டாள். சில நிமிடங்களுக்கு ஒன்னும் புரியாமல் குழம்பினாள். ஒருவழியாக பஸ் நிலையம் அருகே வந்துவிட்டோம் என்று தெரிந்தது. பஸ்.. பஸ்.. ரவி சார்.. சுமித்ரா மிஸ்.. என்று வரிசையாய் வேகமாய் விட்டு விட்டு பேசினாள்.

மேகனாவின் தந்தை அவளை கைபிடித்து தூக்கி நிறுத்தினார் குடிக்க தண்ணீர் குடுத்தார். பஸ் ஸ்டான்ட் இஸ் ஹியர் என்று கை காட்டினார். அவள் மீதமிருந்த சக்தியெல்லாம் ஒன்றுசேர்த்து அடிமேலடி வைத்து நடக்கத் தொடங்கினாள். சேருமிடம் வந்துவிட்டது என்று நினைக்கையில் நெஞ்சு படபடத்தது. கால் இன்னும் வலித்தது... பாதங்கள் புண்ணாய் எரிந்தது. அவளை பின் தொடர்ந்து மேகனாவின் தந்தையும் வந்தார். பஸ் நிலையத்தில் 2 போலிசாருடன் ரவி சார் நின்றிருந்தார். ரவி சார் என்று கத்தியபடியே ஓடிச் சென்று அவரை கட்டிக் கொண்டாள். இதுவரை அடக்கிவைத்திருந்த அழுகை பொங்கி வந்தது. ஆடைகள் கிழிந்து அழுக்கேறி கண்ணீருடன் பிவியை பார்த்ததும் பெரு மூச்சு விட்ட ரவி சார். “ஆர் யு அல்ரைட் மை ச்சைல்ட்” என்று நெற்றியில் முத்தம் குடுத்தார்.

தொடரும் ....

Pic courtesy: pixabay

எழுதியவர் : சுபா சுந்தர் (5-May-16, 12:58 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
பார்வை : 84

புதிய படைப்புகள்

மேலே