ஏன் தமிழன் தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்படக்கூடாதா ஏன் ஜாதிச்சாயம் பூசுகிறார்கள்

வந்தாரை வரவேற்பவன் தமிழன்!
வந்தாரை வாழவைப்பவன் தமிழன்!
வந்தாரை அரியணையில் ஏற்றி அழகு பார்ப்பவன் தமிழன்!

தமிழனுக்கு மொழிப் பற்று உண்டு.
ஆனால் மொழிவெறி கிடையாது.
அதனால்தான் தமிழை வளர்ப்போம், தமிழை காப்போம் என முழக்கமிடும் வேற்று மொழிக்கு சொந்தக்காரர்களை தனது தலைவனாக நேசிக்கின்றான். அரியணையில் ஏற்றி ஆளும் உரிமையை அளிக்கின்றான்.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மொழிவாரியாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் அந்த மாநிலத்திற்குச் சொந்தமான மொழி பேசும் நபர்கள் தான் ஆள்கின்றார்கள். ஒரு தமிழன் ஆந்திராவை ஆண்டுவிட முடியுமா? ஒரு தமிழன் கர்நாடகாவை ஆண்டுவிட முடியுமா? ஒரு தமிழன் கேரளாவை ஆண்டுவிட முடியுமா?
ஆனால் தமிழகத்தை திராவிடம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு மாற்று மொழியினர் ஆண்டு கொண்டிருகின்றார்கள்.

இன்றும் இதே நிலைதான் தொடர்கின்றது. காரணம் தமிழர்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ள சாதி வெறி. தமிழன் சாதி ரீதியாக பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றான். வன்னியன், முத்தரையன், முக்குலத்தோர் என நூற்றுக்கணக்கான சாதிகள் தமிழனை ஓரணியில் ஒற்றுமையாக சேரவிடாது பிரிக்கின்றது. தன் சாதி ஆளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் மற்ற சாதிக்காரன் ஆளக் கூடாது என்ற எண்ணம் தான் தமிழனிடம் குடிகொண்டுள்ளது. இதனால் சாதி என்ற வளையத்தால் பிரிக்கப்பட்ட மனிதன் தன்னையும் தன் நாட்டையும் ஆளும் உரிமையை மாற்று மொழியினரின் கையில் கொடுத்துவிட்டு வெற்றி முழக்கம் செய்கின்றான்.

ஆளும் சக்திகளும் எங்கே தமிழன் விழித்துக்கொள்வானோ என நினைத்து அவ்வப்போது சாதிரீதியாக கணக்கெடுப்பு எடுப்பது, சாதி மாநாடுகளுக்கு அனுமதி கொடுப்பது, சாதி ரீதியாக சலுகைகள் வழங்குவது என்று தமிழனின் பாதைகளை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த உண்மை புரியாமல் தமிழன் வாழ்க என கோசம் எழுப்பிக்கொண்டு கொடி பிடித்துக்கொண்டு திரிகின்றான். தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று கூறும் தலைவர்களை பைத்தியக்காரன், இனத்துவேசி தேசத்துரோகி என பெயர் சூட்டுகின்றனர். அந்த அளவுக்கு தமிழன் சிந்திக்கத்தெரியாத அடிமையாக திராவிடம் என்ற சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கின்றான்.

திராவிடம் என்றால் என்ன? தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் இவை அனைத்தும் சேர்ந்ததே திராவிடம். தமிழ் மொழி திராவிடத்தின் ஒரு அங்கம். ஆனால் திராவிடம் என்றாலே தமிழ் என்றும், திராவிடன் என்றால் தமிழன் என்றும், தமிழன் நினைக்கும் வரை தமிழன் தமிழ் நாட்டை ஆளமுடியாது.

திராவிடர் வளையத்தில் இருந்து தமிழன் வெளியேற வேண்டும். தங்களை சாதிகள் பிரித்தாள்கின்றன என்ற உண்மையை அவன் புரிந்துகொள்ள வேண்டும். வேறு மாநில மக்களுக்கு உள்ள மொழிப்பற்று தமிழனிடம் உருவாக வேண்டும். தமிழன் ஏன் தமிழ் நாட்டை ஆளக்கூடாது என்ற எண்ணம் கலை இலக்கிய மன்றங்கள் மூலம் பட்டிமன்றங்களாக பட்டி தொட்டி எங்கும் கொண்டுசெல்லப்பட வேண்டும். வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் இதே எண்ணத்தை நூல்களாக கவிதைகளாக கதைகளாக தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும். தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் விதைக்கப்பட வேண்டும். இன்று விதைக்கப்படும் விதை எதிர்காலத்தில் பெரும் மரமாக வளர்ந்து நிற்கும்.

தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்ற தணல் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் வளர்க்கப்பட்டு அவனது அறியாமை எரிக்கப்பட்டால் நிச்சயம் தமிழனின் நல் ஆட்சி தமிழகத்தில் உதயமாகும்.

எழுதியவர் : மோகனதாஸ் (6-May-16, 3:51 pm)
பார்வை : 186

மேலே