படித்ததில் பிடித்தது-பிடித்ததால் பதிந்தது
இலக்கணம் பற்றிப் பேசினாலே
கலக்கமுறுவோர்க்கும்
விலக்கிவிட்டு தன்வழியே
வெறுத்து நடப்போர்க்கும்
இனிக்கலாம் இக்கவிதை-
அதன் ஆசிரியரின் முன்னுரையுடனும்
சுயவிளக்கத்துடனும், எனக்கு ஜி-மெயிலில்
வந்ததை வந்தபடி அளிக்கிறேன் உங்களுக்கு:
===
என் புதிய தமிழ் நண்பர்களே. தமிழ் இலக்கணம் அதிகம் அறியாத நான் , பழக்கத்தின் காரணமாக கவிதைகள் எழுதி வருகிறேன். என்னைப் பற்றி நானே எழுதி துபாய் தமிழ் தேர் இதழில் வெளியான கவிதையை ? இத்துடன் தன்னிலை விளக்கமாக அனுப்பியுள்ளேன் .
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்
என்னை அறிந்தால்
என் எழுத்துக் கோர்வைகளை
என் கவிதைகளென்று வியந்து
என்னைப் பாராட்டும்
என் இனிய நண்பர்களே
என்னை அறியுங்கள்
என் திறனும் அறியுங்கள்
என்று நான் எழுதும்
என் சுய விமர்சனம் இது .
நான் கவிஞனில்லை
தமிழ் அறிஞனில்லை
கவிதை இலக்கணம் அறிந்தவனில்லை
இலக்கணம் படித்தேன் பள்ளியில் பாடமாய்
இலக்கு எனக்கு மதிப்பெண்கள் தான் .
மதிப்பெண் பெறவே மனனம் செய்தேன் -அன்றி
மதித்துப் படித்திலேன் மனமது ஒன்றி .
இலக்கணம் கற்கவில்லை
இலக்கியங்கள் படிக்கவில்லை
இலக்கியவாதியாகும்
இலக்கும் இருந்ததில்லை .
காப்பியம் படித்ததில்லை
காபிதான் குடிப்பதுண்டு
வெண்பா அறிந்ததில்லை
வெண்பொங்கல் தானறிவேன்
கலிப்பா எனக்கு
புலிப்பால் போலாகும்
ஆசிரியப்பா என்றால் - நான்
மாணவனப்பா என்பேன்
எதுகை என்றால் -புற
முதுகைக் காட்டிடுவேன்
மோனை என்றாலோ
மௌனமாய் நின்றிடுவேன்
அணிகள் நானறியேன்
அணிகலன்கள் தானறிவேன்
தேமாங்காய் தெரியாது
வடுமாங்காய்தானறிவேன்.
புளிமாங்காய் தெரியாது
புளியங்காய் தானறிவேன்
மாமுன் நேர் நானறியேன்
மாமன் மகள் தானறிவேன்
விளமுன் நிறைஎன்பது
விளங்கியதில்லை எனக்கு
அடியென்றால் அஜீத் என்பேன்
தொடை என்றால் ரம்பாவென்பேன்
சீர் நான் வாங்கியதில்லை
தளை எனக்கிட்டாரில்லை
விருத்தங்கள் தெரியாது - அதில்
வருத்தமும் கிடையாது.
வேற்றுமை உறுபுகளின்
வேறுபாடு நானறியேன் .
யாப்பிலக்கணம் கேட்டால்
ஆப்பசைத்த குரங்காவேன்
குறி, நெடில் மாத்திரையறியேன்
க்ரோசின் மாத்திரையறிவேன்
புணர்ச்சி விகுதிஎன்றால்
தளர்ச்சியடைந்திடுவேன்
தொல்காப்பியம் , எனக்கு
தொல்லை காப்பியமாகும்
நன்னூல் சூத்திரங்கள்
எந்நாளும் படித்ததில்லை
பத்துப் பாட்டு தெரியாது
குத்துப் பாட்டுதான் தெரியும் .
எட்டுத் தொகை எனக்கு
எட்டாத் தொகையாகும்
பதினென் கீழ் கணக்கு - நான்
பருவத்தில் செய்தது .
தமிழின்பால் ஆர்வத்தால்
தகைந்திட்ட சிற்றறிவால்
சந்தங்களை மட்டும்
சொந்தமாக்கிகொண்டு
வார்த்தைகளை நானடுக்கி
கோர்த்துக் கொடுத்தவற்றை
கவிதையென போற்றுகின்றீர்
களிப்படைகிறேன் நான் - சீ
கழுதையென்று ஏசினாலும்
சலிப்படையேன் நான் .
என்னார்வம் கண்டு
என்னைத்தன் மகனென்று
அன்னைத் தமிழ் என்னை
ஆசிர்வதிப்பாள் அதுபோதும் .
வாழ்க தமிழ் . வாழ்க தமிழன் தொலைகாட்சி .
========== ================