12 பிவி பாகம்- 8

ரவி சார் சுமித்ரா மிஸ் நண்பர்கள் போலீஸ் மேகனாவின் தந்தை என்று எல்லோரும் சுற்றியிருக்க அவள் நடந்ததை கூறினாள். மேகனாவின் தந்தை அதுவரை மௌனமாய் இருந்தவர் மெதுவாக பிவி போட்டிருந்த உடையை பற்றிக் கேட்டார்.

பிவி “இது உங்கள் மேக்னாவுடயது தான். அவளை பார்க்கவில்லை ஆனால் நிச்சயமாக அவள் அங்கு தான் இருக்கிறாள் என்று எனக்கு தோன்றுகிறது” என்றாள். சுடுகாட்டில் எரிந்துக் கொண்டிருந்த சடலம் நினைவுக்கு வந்தது, மனதிற்குள் மேக்னா உயிரோடு இருக்க வேண்டுமே என்றும் பிரார்த்தித்துக் கொண்டாள்.

இதற்குள் மேகனாவின் தாத்தா அங்கு வந்தார் கையில் போட்டோ வைத்திருந்தார். பிவி அதை வாங்கிப் பார்த்தாள். வெள்ளை ஸ்கர்ட்டும் ஊதா கலர் டாப்சும் போட்டுருந்த அந்த குட்டிபெண் .... புன்முறுவலோடு ....கையில் தடியுடன் நின்றிருந்தாள், வலது புருவத்தின் மேல் ஒரு மச்சம். தன் நெற்றியில் கைவைத்துப் பார்த்துக் கொண்டாள். தனது இடது புருவத்தின் மேல் அதே மாதிரியான மச்சம். இதனால் தானோ என்னவோ மேகனாவின் தாத்தா அவளை மேக்னா மேக்னா என்று சந்தேகித்தார் என்று தோற்றியது. அந்த முகம் அந்த சிரிப்பு அந்த தடி ஞாபகம் வந்தவளாய் மேகனாவின் தந்தையிடம் அவள் ஊமையா என்று கேட்டாள். ஆம் என்றார் மேகனாவின் தந்தை. சட்டென்று பொறி தட்டியது பிவிக்கு..... நடுத்தர வயது கொண்ட டான்ஸ் ட்ரூப் பெண்மணியின் மகள் வேறு யாருமல்ல மேக்னா தான். சத்தமாய் அங்கிள் மேக்னா அங்குதான் இருக்கிறாள் என்று கத்தினாள்.

இதே சமயம் ஒரு வருடம் முன் சீசனுக்காக குடும்பத்தோடு வந்ததாகவும். அப்போது மேக்னா தன் தாத்தாவின் கைபிடித்து ஏரியோரம் நடந்துக் கொண்டிருந்ததாகவும்.. எங்கிருந்தோ வந்த இரண்டு முரட்டு இளைஞர்கள் தாத்தாவிடம் பேச்சுக் கொடுத்து திசை திருப்பி விட்டுவிட்டு மேக்னாவை கடத்திப் போனதாகவும் சொன்னார். வந்தவர்களின் அடையாளம் சொல்ல தெரியாத தாத்தா, வாய்பேச தெரியாத மேக்னா இப்படி இருக்க ஒரு வருடமாய் தேடியும் ஒரு துப்பும் கிடைக்காது இருந்ததாகவும் கூறினார் மேகனாவின் தந்தை. தன் தவறினால் தொலைந்துப் போன பேத்தியை தேடிக் கொண்டே இருக்கும் ஒரு சித்தப்ரம்மை பிடித்த தாத்தா. ஊரில் தன் வியாபாரம் அனைத்தையும் விட்டுவிட்டு ஊர்விட்டு ஊர் வந்து வாய் பேச முடியாத மகளை தேடும் ஒரு தந்தை என இருவரையும் பார்த்து நெகிழ்ந்துப் போனாள் பிவி.

முதல் நாள் தன்னை மேக்னா என்று அந்த தாத்தா அழைத்திராவிட்டால் தனக்கு நேர்ந்த தீங்கை உணராமலேயே போயிருப்பாள் பிவி. தாத்தா காட்டிய போட்டோவை பார்த்திராவிட்டால் தானும் அந்த கடத்தல் வளையில் சிக்கிப் போயிருப்பாள் பிவி. அவ்விருவருக்கும் மனதிற்குள் நன்றி தெரிவித்துக் கொண்டாள் பிவி.

போலீசுடன் ரவி சார் மேகனாவின் தந்தை மற்றும் தாத்தாவும் அந்த ஒதுக்குபுறமான வீட்டிற்க்கு பெரிய எதிர்பார்ப்புடன் புறப்பட்டனர்.

தொடரும்...
Pic courtesy: wildfrontiers

எழுதியவர் : சுபா சுந்தர் (10-May-16, 1:51 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
பார்வை : 124

மேலே