வரம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான் அவளின் ஆருயிர் காதலன் அருண். இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம் செய்துகொள்ள இருக்கும் அவனுக்கு.. இல்லையில்லை அருணுக்கு எதிர்பாராத விதமாக இது நடக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. இன்றோடு மூன்று நாட்கள் ஆகியும் வருத்தம் குறையவில்லை. அடிபட்ட இடத்தில் பத்திற்கு மேற்பட்ட தையல் போட்டிருக்கிறார்கள். அதுவும் முழங்கையிற்கு சற்று கீழ். கையத் தூக்கி எதுவும் செய்ய முடியாது. உணவு உண்பதென்றால் இடது கையால் கரண்டியில் எடுத்து உண்ண வேண்டும் அல்லது யாராவது ஊட்டி விடவேண்டும். என்னதான் காதலர்கள் என்றாலும் கல்யாணத்துக்கு முன் அவனுக்கு ஊட்டி விடுவதென்பது சாத்தியமில்லாமல் இருந்தது அவளுக்கு. அவனைப் பார்க்க சென்றிருந்த போதெல்லாம் பக்கத்தில் யாராவது இருந்து கொண்டிருப்பதால் ஊட்டி விட சந்தர்ப்பமும் அமையவில்லை. ஒருகையால் அருண் உடை மாற்ற மற்றும் இதர தேவைகளை செய்துகொள்வதற்கு சிரமப் படுவதைப் பார்க்க பாவமாக இருந்தது. நேற்று அருணை பார்த்துவிட்டு திரும்பிய வேளை பிரியாத வரம் கேட்டு மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டாள். இப்போதும் அருணைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டுக்கொண்டிருந்த அவள். கடவுள் அவளின் வேண்டுதலுக்கு செவி சாய்த்திருப்பார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாள் .
ஆட்டோவில் இருந்து இறங்கி மருத்துவமனையின் வரவேற்புக் கூடத்துள் நடந்து கொண்டிருந்தாள். அது ஒரு தனியார் மருத்துவமனை என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை. ஆனால் கூட்டம் இல்லாமலும் இல்லை என்பது மாதிரி இருந்த ஒரு பரபரப்பான காலை நேரம் அது. அருணை சந்திப்பதற்கு முன்பாக அருணுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியரை சந்தித்து நிலைமை எப்படி என்று கேட்டுத் தெரிந்துகொள்ள எண்ணி அவரின் அறைபக்கமாகத் திரும்பவும் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி அவரே எதிரே வைத்தியர் வரவும் சரியாக இருந்தது. “குட் மோர்னிங்’’ என்றவள் கடவுளே நல்ல சேதியா இருக்கும் என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டாள் “ மோர்னிங் மோர்னிங்..” என்ற அவரின் உற்சாகமான பதில் மகிழ்ச்சியத் தரவே அவர் முகத்தைப் பார்த்தாள். “Don’t worry .. இனி பயப்படத் தேவை இல்லை” என்று அவர் நகர கைகால் புரியாத சந்தோசத்தில் அருணைப் பார்க்க ஓடினாள்.
அருணும் கூட இந்த சந்தோஷ செய்தியை அவளிடம் பகிர்ந்து கொள்ள ஆவலோடு இருந்தான். அவளைக்கண்டதும் முகம் மலர்ந்தவன் ‘ அனிதா .. வா ..” வரவேற்றவன் சொன்னான் . ‘ இனி தையல் பிரியாதாம் ..சீக்கிரம் ஆறிடும் என்று சொன்னாங்க நம்ம கல்யாணத்துக்கு உன் கழுத்திலே நான் தாலி கட்டுறதுக்கு கை சுகமாகணும்னா அதுக்கு தையல் பிரியாமல் இருக்கணும். அது பிரியாத வரம் கேட்டு கடவுளை மன்றாடினேன் . என் வேண்டுதல் வீண்போகவில்லை.” என்றவன் அவளை பார்க்கிறான் அவளும் அதனை ஆமொதித்தவளாய்..முகம் மலர இருவரும் தவம் செய்யாமலே வரம் பெற்ற மகிழ்ச்சியில்...!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (10-May-16, 1:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : varam
பார்வை : 555

மேலே