பூமியின் முதல் புன்னகை

கொட்டும் மழையினை
குடைகள் தடுக்கும்..
ஆயினும் ..
என்னவொரு விந்தை…?
கார்மேகக் குடைகளிலிருந்தது தான்
மழைத்துளிகள் பிறக்கும்!.

வானம் என்ற வள்ளல் தந்த..
வெள்ளிக்காசுகளை..
சேர்த்து வைத்திருப்பதால் தான்
பூமி செல்வந்தனாகிப்
பூத்துச் சிரிக்கும்.

இடி எக்காளமிடும்….
மின்னல் அம்புகள்…
அங்கும் … இங்கும்.. பாயும்.
மேகச்சேனைகள்
ஒன்றோடொன்று மோதும்.

எனினும்..
இந்தப்போர்..
எப்போதும் சமாதானத்தில் தான்
முடியும்.
பூமியேங்கும்
மகிழ்ச்சி அருவிகளாய்
பொங்கி
வழியும்.

வானரசர்கள்
தன்னை புகழ்ந்து பாடிய
பூமிப் புலவனுக்கு தந்த
பரிசில்
இதுவா..?

அல்லது
பூமிப்பெண்ணின்
பேரழகினைக் கண்டு
வியந்த வானக்காதலன்
காதலில் கசிந்துருகி
கண்ணீர் வடிக்கிறானா..?

தாயுள்ளம்
கொண்ட வானம்.
தன் மேகமுந்தானையில்
முடித்து வைத்திருந்த
சில்லரைகளை
பூமித்தனையனுக்கு கொடுத்து
பூரித்துப்போய் நிற்கிறதா..?

இது
பூமி வெடித்த பாலை வனங்களை
சோலைவனங்களாக்கிக் காட்டும்
மந்திரக் கலை..?.

வானம் ..
தன் வலது கை கொடுப்பதை
இடது கை அறியாத பெருங்கொடை..

மழைத்துளிகள்தான்..
பூமியெங்கும்
உயிர்களை விதைத்த

முகத்தினில் செல்லமாய்
அடித்து சிரித்த
பூமியின்
முதல் புன்னகை!.

எழுதியவர் : பரதகவி (10-May-16, 5:27 pm)
பார்வை : 149

மேலே