உழைப்புக்கு பின் வலி
உழைக்கும் உயிரும் உடலும் - உறுதியே
உயர்வு நாளை நமக்கு என்று – கருதியே
மனம்போல் மகிழ்ந்து வியர்வை வடித்து
உருவம் குறைத்து குருதி தெறித்து
சாதித்த பின் , (சம்பளம்) கண்முன்னே கணக்கிட்டு
காகிதத்தில் மை இட்டு, களவாடிய பின்
காசு என்னும் காகிதம் குறைந்து, கேட்க மனமும் இல்லை
கேட்பேன் எனில், அடுத்த பொழுது வேலை,
எனக்கு அல்ல, காத்திருப்போர் ஏராளம் என நினைத்து
கவலை என்னும் கருமேகம் சூழ்ந்து
கண் வரை கண்ணிர் மூழ்க, கலங்கிய மனம்
வெந்நீராய் வேக, வழியெல்லாம் கடன் சுமைகள்
இறக்கிவிட்டேன், வீட்டிற்க்கு வெறும் கை –
வீசினால் வெட்கப்படும் மனம்,
எதிர்பார்க்கும் கண்களில்
ஏமாற்றத்திற்கு என் இரு கைகள்...
என் எதிர்காலம் எங்கே ....?
வாட்டி வதைத்து வாங்கிய உழைப்புக்கு வருமானம் – எங்கே ?
வாழ்வு செழிக்க நான் வருத்திய என் உடல் உழைப்பும்,
இளமை மறந்து பழமை போல வத்கப்பட்ட என் புற அழகும் – எங்கே ?
இனிமை கொள்ள என் இனிய குடும்பம்,
எடுத்து நிமிர்த்த உடம்பில் வலிமை இல்லை,
வந்தவள் என் தாய் போல் இருக்கையில் மடி சாய்ந்தேன்,
வாலிபம் அவளுக்கும் உண்டே, மறுக்க முடியுமா ?.....