திருக்குறளும் திருமந்திரமும்
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலக்கியப்படைப்பை வாசிக்கும்போது மூன்று விஷயங்களைச் செய்கிறோம். ஒன்று அதை நாம் வாசித்த முந்தைய படைப்புகளுடன் ஒப்பிட்டு மதிப்பிட்டு ஒரு இடத்தை அளிக்கிறோம். இரண்டு, அதை நாமறிந்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி விரிவாக்கம் செய்துகொள்கிறோம் மூன்று, இவ்விரு செயல்பாடுகளின் விளைவாக நம் வரையில் அந்நூலை குறுக்கி தொகுத்து ஒரு வரையறையை அளித்துக்கொள்கிறோம். அதன்பின் அந்த வரையறையில் இருந்தே அந்நூலை விரிவாக்கம் செய்துகொள்கிறோம் என்று “பின் நவீனத்துவ சிந்தனைகள் என்ற தலைப்பில் கூறுகிறார் ஜெயமோஹன் எனும் எழுத்தாளர்.
நாம் வாழுகின்ற இவ்வுலகில் எவ்வளவோ படைப்பு இலக்கியங்கள் இருப்பினும் அவற்றைப் படிக்கும் போதுதான், இதனை வேறு எங்கோ படித்து இருக்கிறோம் என்ற நினைவு எழும். அவ்வாறு எழும்போது ஒத்த கருத்துக்களைக் கூறும் படைப்புக்களை, குறிப்பாக அவை ஒரே கருத்தமைவை கொண்டவை என்பதை அடிக்கோடிட்டு காண்பிக்கையில், அவற்றை நம் வாழ்வுடன் தொடர்பு படுத்தி புரிந்து கொள்கிறோம்.
நமக்குத் தெரிந்து எத்தனையோ சமயங்களும் பொருள் நிலைக் கோட்பாடுகளும் உள்ளன. அதே போல், சமயங்களையும் சமயங்களின் சாரத்தையும் விளக்கும் பிரமாண நூல்களும் பலவாறாக உள்ளன. இந்த நூல்களில் சில கருத்தமைவில் ஒன்றியும், சில ஒவ்வாமலும், ஒன்றுகொன்று முரணுவதாயும் அமைந்துள்ளன. சமயம் சார்ந்த பிரமாண நூல்கள் அல்லது ஆகமங்கள் இவ்வாறு முரண்படும் சமயங்களில் எந்தச் சமயம் முதன்மையானது, அதனை விவரிக்கும் பிரமான நூல் ஆகிய ஆகமங்களில் எது சிறந்தது என்பன போன்ற வினாக்கள் ஆன்ம தாகம் கொண்டோர்க்கு எழுவது இயல்பு.
ஒரு கருத்தைப் பொருந்தும் கருத்து, ஏற்புடைய கருத்து எனவும், அல்லது பொருந்தாது, ஏற்க இயலாது எனவும் கூறும் வெளிப்படையான பிணக்கு இன்றி முறையாக அவை அனைத்தையும் தன்னுள் அடக்கிக் காட்டுவது எதுவோ அதுவே முதன்மைச் சமயமோ அல்லது சமயம் சார்ந்த முதன்மைப் படைப்பு என்றும் கொள்ளலாம். அதன்வழி நின்று பொருள்களை தெளிவுற உணர்த்தும் நூலே மெய்நூல் ஆகும்.
இப்படிச் சிந்தித்தோமெனில், தமிழராகிய நாம், வணங்கிய கடவுள் எது, அது முதன்மைக் கடவுளா, அதன் மெய்ப்பொருள் நூல் எது எனத் தெளிவாகக் கூறுதல் நலம் பயக்கும். எனினும் சமயங்களில் சிறந்தது எதுவென்ற ஆராய்ச்சியில் இறங்காமல், அதைப்பற்றிய விவாதம் ஏதுமின்றி, தமிழரின் சமயம் எதுவென அறிந்திட தொல்காப்பியத்தைப் புரட்டினோம் எனில்,
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயதீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(தொல்காப்பிய, அகத்திணை இயல் சூத்திரம்)
என்று நான்கு முக்கிய தெய்வங்களை பழந் தமிழர் தெய்வங்களாக தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியம் குறிக்கிறது. இதன்படி, முல்லை நிலத்தில் திருமாலும், குறிஞ்சியில் முருகனும், மருதத்தில் இந்திரனும், நெய்தலில் வருணனும் கடவுளராக வழிபட்டு வந்துள்ளனர். வேதங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்திரனும் வருணனும்தான். அவ்விரு தெய்வங்களையும் இந்த சூத்திரத்தில் குறித்தவர் இன்னொரு சூத்திரத்தில் மற்றொரு வேத கால முக்கியக் கடவுளான அக்னி பகவானையும் குறிப்பிடுகிறார்.
கீழ்வரும் சூத்திரத்தில் கொற்றவை எனப்படும் துர்க்கையே பாலை நிலக் கடவுள் ஆகிய காளி எனக் காளிவழிபாடு பற்றிப் பாடுகிறார் தொல்காப்பியர்.
“மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
கதிரவன், தீ, சந்திரன் என்னும் இயற்கைப் பொருள்களையும் தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் தெய்வங்களாக வழங்கி வந்தனர். ஆயினும், முன்னர் சொல்லியபடி இவை ஒன்றுக்கொன்று முரணுவதாலேயே பழங்கடவுளான உருத்திரன் எனப்படும் சிவனை , ஆதி சிவன் எனக் கொண்டாலும் திருமூலர் அவனை பரமசிவன் என்றாலும், அத்தகைய ஆதி அந்தம் இல்லாக் கடவுளை திருமூலர் படைப்பில் காணும் அதே சொல்லை பயன்படுத்தி அவன் பெயரைச் சொல்லாமல் திருவள்ளுவர் மெய்ப்பொருள் உணரச் செய்கிறார். இந்த இருவருமே வடமொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதால், அந்த மொழி பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.
தொல்காப்பியர் தமிழைத் தவிர வடமொழியினை மட்டும் பெயர் சுட்டிச் சொல்லியுள்ளார். சங்க இலக்கியங்கள் பன்மொழி பேசும் தேசங்களின் பெயர் பற்றியும் பேசுகின்றன. சாத்தனார்,
”மொய்த்த மூவறு பாடை மாக்கள்” என்றும், திருமூல தேவ நாயனாரோ
“பண்டிதர் என்போர் பதினெட்டுப் பாடையும், கண்டவர் கூறும் கருத்தறிவார்”
என்றும் கூறுவது இங்கு கவனத்துடன் நோக்கற்பாலது. தமிழ் நெறி விளக்கமும், திவாகர நிகண்டும் இம்மொழிகளைச் சுட்டியுள்ளன. இந்த மொழிகளில் தோன்றிய இலக்கியங்களும் அந்தக் காலச் சூழலுக்கு ஏற்ப அற நூல்களாகவே படைக்கப்பட்டன. இவ்வாறறாய் படைக்கப்பட்ட நூல்கள் நெஞ்சினைப் நோக்கிப் பேசுதல், உலகோருக்கு உரைத்தல், நம்பி, நங்கையினை விளித்துப் பேசும் ஆடூஉ முன்னிலை மகடூ முன்னிலை அமைத்துப் பேசுதல் என வடிவமைக்கப்பட்டன. இத்தகைய அறங்கள் அறம் பொருள் இன்பம், வீடு எனும் உறுதிப் பொருள்களை உரைப்பனவாக அமைந்தன.
திருக்குறளின் மூன்று பால்களும் (அறம், பொருள், இன்பம்) இந்துமத புராண இதிகாசங்களில் புழங்கும் மூன்று சம்ஸ்கிருதச் சொற்கள் ஆகிய தர்ம, அர்த்த, காம என்பனவற்றின் மொழிபெயர்ப்பு ஆகும். திருமூலரும் சரி, திருவள்ளுவரும், சரி சமஸ்கிருதத்தில் பண்டிதர்கள் என்பதும் இவர்கள் வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்கள் என்பதும் இவர்கள் படைப்புக்களில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
இதன் பொருள் என்னவெனில் ஆழமான நீர் நிலையில் இருந்தால் முதலை வெற்றிபெறும். அதே முதலை நீரை விட்டு வெளியே வந்தாலோ மற்ற உயிரினங்கள், அதை எளிதில் வென்றுவிடும்.
முதலை வாயில் சிக்கிய கஜேந்திரனை காப்பாற்ற மகாவிஷ்ணுவே வரவேண்டி இருந்தது என்பதை குறள் 495-ல் மறைமுகமாக கஜேந்திர மோட்சக் கதையைச் சொல்கிறார் வள்ளுவர்.
கூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் முழுதும் –271 முதல் 280 வரை– ஒவ்வொரு குறளும் ஒரு புராண, இதிகாசக் கதையை மனதில் வைத்தே எழுதியது போல இருக்கிறது. உதாரணமாக,
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று
புலித்தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்த பசுவின் கதை ((273),
அதைப் போலவே
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றலின் தலைப்பட்ட வர்க்கு
எனும் குறள் எண் 269—ல் மார்கண்டேயர், சத்தியவான் சாவித்திரி கதையைக் கூறுகிறார் ‘’கூற்றம் குதித்தலும் கைகூடும்’’ (எமனையும் வெல்ல முடியும்) என்பார் வள்ளுவர். மேலும்
பிறனில்விழையாமை என்னும் அதிகாரத்தில் (141—150), சீதையை விரும்பிய ராவணன், அகலிகையை விரும்பிய இந்திரன் கதைளைச் சொல்கிறார். பின் மெய்பொருளின் சாரமாகிய அன்பு பற்றிக் கூற முற்பட்டு
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
என குறள் எண் 72 இல் அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை ஆக்கிக் கொள்வர். ஆனால் அன்புடையாரோ, தனது எலும்பையும் கூடப் பிறர்க்கு அளிப்பர் எனபதை ததீசி முனிவரின் கதையினை நம்மை வாசிக்கச் செய்கிறார்.
ததீசி என்னும் முனிவர் தனது முதுகு எலும்பையே இந்திரனுக்குக் கொடுத்தார். அசுரர்களைக் கொல்வதற்கு ஆயுதங்கள் தேவைப்பட்டது. அப்போது எலும்பினால் செய்யப்பட்ட வஜ்ராயுதமே அசுரர்களைக் கொல்ல வல்லது என்று அறிந்தான். உடனே ததீசி முனிவரை அணுகினான். மனித குலத்தைக் காக்க தனது முதுகு எலும்பையே கொடுத்தார் ததீசி. அதையே வள்ளுவன் ‘’என்பும் உரியர் பிறர்க்கு’’ என்றார்.
திருவள்ளுவரைப் போலவே திருமூலரும் சமஸ்கிருதம் பயின்றவர். திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய திருவந்தாதி 26 ஆம் பாடலில் திருமூலர் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள்களும் நிரம்பப் பெற்ற தமிழ்மறைகளை, வடமொழி வேதங்களாய்த் தழுவி, “தமிழாகமம்” எனப் போற்றப்படும் திருமந்திரப் பனுவலை இயற்றினர் என்று கூறுவதால், இவரது வடமொழிப் புலமையும் வேதங்களைப் புரிந்து கொண்ட பாண்மையும் விளங்கும்.
இறைவனால் அருளிச் செய்யப்பட்ட ஆகமங்கள் தமிழிலும் வடமொழியிலும் ஒப்ப அமைந்து இருந்ததோடு, இறைவனியல்பை உலக மாந்தர் உணர்ந்து உய்தி பெறும் வண்ணம் தமிழிலும் வடமொழியிலும் இறை நூலாகிய அருள் நூல்களை அமைத்திருந்தனர்.. இதனைத் தன் வாயால் கூற வந்த திருமூலர்,
அவிழ்க்கின்றவாறும் அது கட்டு மாறுஞ்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் லெனுமிவ்விரண்டும்
உணர்த்து மவனை யுணரலுமாமே (திருமந்திரம்: 66)
என ஆகமச் சிறப்புணர்த்தும் பகுதியில் விளக்கிக் கூறுகிறார்.. அன்றியும் திருமந்திரத்தின் நான்காம் தந்திரத்தில், “வயிரவி தந்திரம்” என்ற பகுதியில்,
அந்த நடுவிரல் ஆதி சிறு விரல்
வந்த வழிமுறை மாறி யுணரச் செய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடு
நந்தி யதனை நவமுணரத்தானே (திருமந்திரம் :1089)
என்பதால், வழிபாட்டுக்குரிய மந்திரம் வடமொழியில் மட்டுமின்றி தமிழிலும் அமைந்து இருத்தலை நன்கு தெளியப்படுத்தும். அத்துடன், திருமந்திர வரலாறு கூறும் பாயிரப் பகுதியில்,
நந்தி யிணையடி நான் தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாடொறுஞ்
சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே (திருமந்திரம் :73)
எனவும்,
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே (திருமந்திரம்:89)
என வரும் ஆசிரிய வாய்மொழிகள் இந்த நூல் தமிழ் ஆகமமாக அருளிச் செய்யப் பெற்றதென்பதை அங்கையிற் கனியாக விளக்கும். தமிழ் மண்டலம் ஐந்துந்தாவிய ஞானம் திருமந்திரத்தில் கூறப்படும் தத்துவ உண்மைகள் செந்தமிழ் நாட்டில் வாழ்ந்த சிவ ஞானிகளால் அருளிச் செய்யப்பெற்ற சிறப்புடையன என்பதும் குறித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இவர்கள், இறைவனால் அருளிச் செய்யப்பட்ட ஆகமங்கள் படைத்தனர் எனில் இவற்றில் ஒத்த கருத்துக்கள் உள்ளனவா, இவர்கள் ஒரே காலத்தவரா என்ற கேள்விகள் நமக்கு எழுகிறது.
(வளரும்)