வரட்சி காட்டுத் தீ மழைவீழ்ச்சி சூறாவளி கடும் குளிர்காற்று, இது என்ன காலநிலை

காலநிலை மாற்றத்தில் எல்நினோ லாநினா
.................................................................................

அறிமுகம்


மனிதனுடைய சமூக பொருளாதார கட்டமைப்புக்களில் காலநிலை கணிசமான பங்கு வகிக்கின்றது. அவனது ஒவ்வொரு செயற்பாடுகளும் காலநிலையையும் கருத்திற் கொண்டதாய் அமைகிறது. இவ்வாறான காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனுடைய சமூக பொருளாதார கட்டமைப்புக்களில் பாதிப்பை உண்டு பண்ணும். அதிகரித்த மழை வீழ்ச்சி வெள்ளப் பெருக்கு வெப்பநிலை அதிகரிப்பு வரட்சி போன்ற காலநிலை மாற்றங்கள் ஏற்படும் பொழுது இவ்வாறான பாதிப்புக்களை உலகம் எதிர்கொள்வது இயற்கை. ஆனால் இத்தோற்றப்பாடுகள் யாவும் ஒரே நேரத்தில் உலகின் வேறு வேறு பிரதேசங்களில் ஏற்படுகின்ற பொழுது அதனால் ஏற்படும் பிரச்சனைகள் பூகோள ரீதியாக ஓர் அச்சுறுத்தலாக அமைகிறது. அந்த வகையில் காலநிலைச் சீர்கேட்டால் முழு உலகையும் அச்சுறுத்தும் தோற்றப்பாடாகிய எல்நினோ லானினா பற்றி அறிவது இக் கட்டுரையின் நோக்கமாகும்.


எல்நினோ லாநினா என்றால் என்ன?

புவியில் இயற்கையாகவே ஏற்படும் காலநிலை மாற்றங்களான கோடை காலம் மாரி காலம் வசந்த காலம் போன்றதொரு காலநிலை மாற்றச் செயற்பாடே எல்நினோவாகும். இவ் எல்நினோ செயற்பாடானது சாதாரண காலநிலை மாற்றம் போல ஓர் சிறிய கால இடைவெளியில் இடம்பெறாது மாறாக எப்போதாவது தோன்றுவதாகவும் 12 – 18 மாதங்கள் வரை நீடிப்பதாகவும் காணப்படும். ஏல்நினோ ஆரம்பிக்கும் பொழுது உலகின் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு விதமான வழமைக்கு மாறான காலநிலைச் சீர்கேட்டை அவதானிக்க முடியும். எடுத்துக்காட்டாக இக்காலப்பகுதியில் வட அமெரிக்காவில் வழமைக்கு மாறான வெப்பமான காற்றுக்களும் வடகிழக்கு அமெரிக்கா கனேடிய பிரதேசம் போன்றவற்றில் ஈரப்பதன் நிறைந்த குளிர்ச்சியான காற்றுக்களும் வீசுகின்ற அதேநேரம் பெரு ஈக்குவடோர் போன்ற பிரதேசங்களில் மிகக்கடுமையான மழை வீழ்ச்சியும் இந்திய அவுஸ்ரேலிய பிரதேசங்களில் மழைவீழ்ச்சியற்ற வறட்சியான தன்மையும் கிழக்கு பசுபிக் நாடுகளில் சூறாவளியும் காணப்படும். இவ்வாறாக எல்நினோ இடம்பெறும் காலப்பகுதியானது பூகோள ரீதியாக காலநிலையில் சமனற்ற குழப்பங்கள் நிறைந்ததாக காணப்படும்.


தோற்றமும் பரவலும்

காலநிலைச் சமநிலையை சீர்குலைக்கும் இவ் எல்நினோ முதன் முதல் எங்கு எப்போது தோற்றம் பெற்றது என இன்னும் அறிய முடியாதுள்ளது. ஆனாலும் பல்லாயிரம் வருடங்களிற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இதன் முதற் பதிவானது 1567ம் ஆண்டு தென்னமரிக்க மீனவர்களினால் பதியப்பட்டு அவர்களது குறிப்பேடுகளில் இருந்து பெறப்பட்டது. இவ் எல்நினோ என்னும் பதமானது 1892 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்காலப்பகுதியில் புவியியல் சமூகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்ட கப்பல் ஓட்டிகளில் ஒருவரான கமிலோ கரிலோ என்பவர் இவ் எல்நினோ என்னும் பதத்தை அறிமுகம் செய்தார். எல்நினோ என்பதன் அர்த்தம் ஸ்பானிய மொழியில் இயேசுவின் குழந்தை என்பதாகும். அனேகமாக கிறிஸ்மஸ் காலப்பகுதியில் இத்தோற்றப்பாடு இடம் பெறுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.இவ் எல்நினோ தோற்றப்பாடானது 1770-1793, 1828-1876, 1891, 1925-1926,1982-1983, 1986-1987, 1991-1992, 1993-1994, 1997-19998, 2002-2003, 2004-2005,2006-2007 ஆகிய காலப்பகுதிகளில் இடம் பெற்றுள்ளது.

இயல்பான காலநிலை காணப்படும் போது தென்னமரிக்க பசுபிக் சமுத்திரத்தில் இருந்து மத்திய கோட்டை நோக்கி வீசும் பருவபெயர்ச்சிக் காற்றானது பேரு ஈக்குவடோர் நாடுகளை அண்மித்த பசுபிக் சமுத்திர வெப்ப நீர்ப்பரப்பை இந்தோனேசியா அவுஸ்ரேலியா போன்ற நாடுகளை நோக்கி நகர்த்தும். இதன் விளைவாக இக்காலப்பகுதியில் தென்னமரிக்க பசுபிக் சமுத்திர வெப்பநிலை குறைந்து குளிர்ந்த மேற்பரப்பாகக் காணப்படும். ஆனால் இவ் எல்நினோ இடம்பெறும் பொழுது மேற்கு நோக்கி வீசும் பருவப் பெயர்ச்சி காற்று திடீரென எதிர்திசையில் வீச ஆரம்பிக்கும். இதனால் தென்னமரிக்க பசுபிக் சமுத்திர வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். இவ் வெப்ப அதிகரிப்பானது மேற்பரப்புக்காற்றின் ஈரப்பதனை அதிகரிக்கச் செய்யும். இதன் காரணமாக பேரு ஈக்குவடோர் போன்ற நாடுகளில் அதிகரித்த மழைவீழ்ச்சி சூறாவழி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும். தென்னமரிக்க கரைகளிற்கு அப்பால் வடக்கு நோக்கி ஓடுகின்ற குளிர்ச்சியான கம்போல்ட் நீரோட்டம் மத்திய கோட்டிற்கு அண்மையில் பசுபிக் சமுத்திரத்திற்கு குறுக்கே மேற்காக திரும்பி ஓடுகிறது. இது தென்மத்திய நீரோட்டம் என அழைக்கப்படும். எல்நினோ ஆரம்பிக்கும் பொழுது இக் கம்போல்ட் நீரோட்டத்தின் வழமையான திசை மாற்றப்படுவதுடன் மேல் எழுச்சியும் தடைப்படும்.

இவ்வாறு கம்போல்ட் நீரோட்டத்தினது திசை மாற்றச் செயற்பாட்டினை மத்திய கோட்டு வலய நீளத்திற்கு தென்கிழக்கு ஆசியா வரைக்கும் உள்ள வளிமண்டல அமுக்கத்தில் ஏற்படுகின்ற மாற்றத்துடன் தொடர்பு படுத்தியறியலாம். மத்திய கோட்டிற்கு அண்மையில் பசுபிக்பகுதியில் தை மாதத்தில் இயல்பாகவே அமுக்கக் காற்றுக்கள் காணப்படும். கிழக்கிந்திய தீவு பப்புவா நியூகினி அவுஸ்ரேலியா ஆகியவற்றின் மேலாக தாழமுக்கம் காணப்படுவதுடன் சமுத்திர நீர்ப்பரப்பு உயர்வெப்ப நிலையைக் கொண்டதாகவும் காணப்படும். இதன் காரணமாக இப்பிரதேசங்களில் மழைவீழ்ச்சி அதிகமாக இடம்பெறும்.

எல்நினோ ஆரம்பிக்கும் பொழுது இத் தாழமுக்கம் உயரமுக்கமாக மாற்றம் அடையும் அதேநேரம் கிழக்கு பசுபிக் மத்திய கோட்டுப்பிரதேசம் அமுக்கம் குறைந்த நிலைக்கு மாற்றம் அடைவதுடன் மத்தியகோட்டு தாழியையும் உறுதியடையச் செய்யும். எனவே புதிதாக ஏற்பட்ட இத்தாழமுக்கப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகமாக காணப்படும். அமுக்க மாற்றத்தின் காரணமாக மேற்பரப்புக் காற்றுக்களும் நீரோட்டங்களும் மாற்றம் அடையும். இம் மாற்றத்தால் கீழை வியாபார காற்று அமர்ந்துவிட பலவீனமான மேலைக்காற்று சில சமயம் நிலவும். சாதாரண காற்றுத்திசை முற்றாக பின்வாங்கும். அவற்றை மீண்டும் கொண்டு வருவதற்கு வியாபாரக் காற்றுக்களின் அமுக்கம் இன்மையால் சூடான நீர் கிழக்குப்பக்கமாக பாயும். இதனால் பெரு ஈக்குவடோர் கரைகளிற்கு அப்பால் கடல் மேற்பரப்பு வெப்பநிலையும் கடல் நீர் மட்டமும் உயர்வடையும். எனவே இச்செயற்பாடு காரணமாக வழமைக்கு மாறான காலநிலைச் செயற்பாடு இடம்பெறும்.



லானினா

இயற்கையின் பருவகால மாற்றத்தில் எல்நினோவின் சகோதரி என விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் காலநிலை மாற்றமும் உண்டு. லானினா என்றால் ஸ்பானிய மொழியில் சிறுமி என்று அர்த்தம். இவ் லானினா தோற்றப்பாடானது நான்கில் இருந்து ஜந்து வருட இடைவெளியில் எப்போதாவது தோன்றும். லானினாவானது காற்றின் திசைமாற்றத்தால் ஏற்படும் தோற்றப்பாடல்ல. மாறாக மேற்குத் திசையிலேயே அதிக வேகத்துடன் அப்பருவக்காற்று வீசுவதால் ஏற்படும் நிகழ்வாகும்.

சூரியன் உச்ச நிலையில் இருக்கும் காலத்தில் தென்பசுபிக் வட அயன உயரமுக்கம் அதிகமாக விருத்தியடையும். இதன் காரணமாக வியாபாரக்காற்று வலிமையானதாக விருத்தியடைவதோடு இக்காற்றுக்களின் விசை வெப்பமான மேற்பரப்பு நீரை சாதாரண அழவிற்கு அதிகமாக மேற்கு பக்கம் நோக்கி நகர்த்துவதுன் மேற்கு கரைகளிற்கு அப்பால் உள்ள நீரையும் கொண்டு வரும். இதனால் மத்திய கிழக்கு பசுபிக் வெப்ப நிலையானது சாதாரண அளவிலும் பார்க்க குறைந்த நிலைக்கு வீழ்ச்சி பெறும். எனவே இந்நிலையால் இப்பகுதி சமுத்திர மேற்பரப்பு அளவிற்கு அதிகமான குளிராக காணப்படுவதோடு கனடாவிலும் அலாஸ்காவிலும் கடுமையான குளிர் காலநிலை நிலவும் அதேநேரம் அவுஸ்ரேலிய பிரதேசங்களில் அதிகளவு வெப்பம் நிலவும்.

1988-1989 காலப்பகுதிகளில் வலிமையான ஓர் லானினா தோற்றப்பாடு விஞ்ஞானிகளால் அறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1995, 99-2000, 2000-2001, 2007-2008 காலப்பகுதிகளில் தோற்றப்பாடு அறியப்பட்டது. இறுதியாக ஏற்பட்ட லானினா தோற்றப்பாடானது 2007 இன் நடுப்பகுதியில் ஆரம்பமாகி 2008 வரை நீடித்தது.



பாதிப்புக்கள்

எல்நினோ லானினாவால் ஏற்படும் காலநிலைச் சீரழிவானது பூகோள ரீதியாக பல பாதிப்புக்களை உண்டு பண்ணும் இவற்றால் ஏற்படும் பாதிப்புக்களை மூன்று வகையாக பிரித்து நோக்கலாம்.
1. பௌதீகச் சூழற் பாதிப்பு
2. உயிரியற் சூழற் பாதிப்பு
3. பொருளாதாரச் சூழற் பாதிப்பு



பௌதீகச் சூழற் பாதிப்பு

புவிப்பௌதீகச் சூழலில் இக்காலநிலை மாற்றத்தால் வெப்ப அதிகரிப்பு வரட்சி பாலைவனமாகுதல் வெள்ளப்பெருக்கு மண்ணரிப்பு மண்வளம் குன்றுதல் போன்ற பல்வேறு விதமான பாதிப்புக்கள் ஏற்படும். வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் போது அது தொடர்ச்சியான பல பாதிப்புக்களை நீண்ட காலப்போக்கில் உருவாக்கும். எனவே அவை நீண்ட காலப் பாதிப்புக்களாக மாறக்கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்படும்.

1982-1983 இல் தோற்றம் பெற்ற எல்நினோவின் காரணமாக கிழக்கு பசுபிக் வெப்ப நிலையானது 32 பாகை செல்சியஸாகவும் கடல் மட்டம் 15-20 சென்ரி மீற்றர் வரையும் உயர்ந்தது. இதன் காரணமாக பேரு ஈக்குவடோர் பிரதேசங்களில் மிக அதிகமான மழை வீழ்ச்சி வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புக்கள் ஏற்பட்ட அதேநேரம் தென்னாபிரிக்கா தென் இந்தியா இலங்கை போன்ற பிரதேசங்கள் அதிகரித்த வரட்சிக்கு முகம் கொடுத்தன. இதே போன்று 2007-2008 இல் ஏற்பட்ட லானினா தோற்றப்பாட்டின் போது 2008 மார்ச்சில் இந்தோனேசியா மலேசியா சிங்கப்பூர் போன்ற பிரதேசங்களில் இடம் பெற்ற அதிரித்த மழைவீழ்ச்சியும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.



உயிரியற் சூழற் பாதிப்பு

எல்நினோ லானினோ தோற்றப்பாடுகளின் போது உயிரியற் சூழலில் பாரிய மாற்றங்கள் ஏற்படும். காட்டுத் தீ, கடல் நீரின் வெப்ப அதிகரிப்பு போன்றவை உயிர்ப் பல்வகைமையை பாதிப்படையச் செய்யும். வெப்ப அதிகரிப்பு காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டு அதிகளவான தாவரப்போர்வை அழிவடையும் போது அவற்றில் தங்கி வாழும் உயிரினங்களும் பாதிப்படையும். 1982 இல் ஏற்பட்ட எல்நினோவின் தாக்கத்தால் அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீ ஏற்பட்டு 73 மனித இறப்புக்கள் பதிவு செய்யப்பட்ட அதேநேரம் 350 000 ற்கு மேற்பட்ட உயிரினங்களும் அழிந்தன.

சமுத்திரப் பிரதேசத்தில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பானது சமுத்திர சூழற் தொகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பவளப்பாசி பவளப்பாறைகள் போன்றவை தாக்கத்திற்குள்ளாகும். பவளப்பாசிகள் வெளிறல் நிலைக்கு உள்ளாகி அழிந்து போகும். 1998 இல் ஏற்பட்ட எல்நினோவின் தாக்கத்தால் ஏற்பட்ட சமுத்திர நீரின் வெப்ப அதிகரிப்பானது உலகளாவிய ரீதியில் 16 வீதமான முருகைக்கற் பாறைகளின் இறப்பிற்கு காரணமாக மாறலாம் என விஞ்ஞானிகளால் எதிர்வு கூறப்பட்டது.

இது தவிர உலக பாதுகாப்பு நிறுவனத்தின் அறிக்கையின் படி உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் 16199 உயிரினங்கள் அபாய நிலையில் காணப்படுகின்றன. இவற்றில் பனிப்பாறைகளில் தங்கி வாழும் உயிரினங்களும் அடங்குகின்றன. எல்நிநோ லானினாவின் தாக்கத்தால் பனிப்பாறைகள் பாதிப்படையும் போது இவ் உயிரினங்களும் பாதிப்படையும்.



பொருளாதாரச் சூழற் பாதிப்பு

பொருளாதார ரீதியிலும் இவ் எல்நினோ லானினா பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும். பொருளாதார ரீதியில் ஏற்படும் பாதிப்புக்கள் கலாச்சார ரீதியிலும் சீரழிவுகளை ஏற்படுத்தும். திடீரென ஏற்படும் வரட்;சி வெள்ளப் பெருக்கு போன்றவை விவசாய பொருளாதாரத்தை பாதிப்பதாக அமையும். பயிரழிவு விவசாய உற்பத்தி வீழ்ச்சி போன்றவை மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும்.

எல்நினோவின் தாக்கத்தால் அதிகமாக பதிப்படையும் மற்றொரு முக்கியமான துறையாக மீன்பிடி காணப்படுகின்றது. உதாரணமாக 1972 இல் ஏற்பட்ட எல்நினோவினால் பேரு கரையோரத்தில் வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு அப்பிரதேச அன்சோவி மீன்பிடிக் கைத்தொழில் மிகவும் தாக்கம் அடைந்தது. சமுத்திர வெப்ப அதிகரிப்பால் மீன் இன அழிவு ஏற்பட்டு 13 தொன்னில் இருந்த மீன்பிடியானது 2 தொன்னாக குறைவடைந்தது. இதன் காரணமாக அவர்களது ஏற்றுமதி வர்த்தகத்திலும் கணிசமான பாதிப்புக்கள் ஏற்பட்டன.

இவ்வாறாக பொருளாதார ரீதியாக ஏற்படும் சரிவினால் வருமான மட்டம் குறைதல் போசனை மட்டம் தாழ்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்கள் உளவியல் ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமுண்டு.

எனவே சுருக்கமாக நோக்குமிடத்து காலநிலை சீர்கேட்டால் முழு உலகையும் அச்சுறுத்தும் தோற்றப்பாடாகிய இவ் எல்நினோ லாநினாவானது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்ற ஒன்றாக காணப்படுவதோடு அது தொடர்பான ஆராட்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எது எவ்வாறிருப்பினும் இக் காலநிலை சீர்கேடானது உருவாகுவதற்கு முன்பே அதனை கண்டறியக்கூடிய வகையிலான ஆராட்சிகள் முற்றுப் பெற்றால் மட்டுமே இப் பாதிப்புக்களில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்

.

என்ன நண்பர்களே அண்மைக்காலமாக இலங்கை இந்தியா போன்ற எங்களுடைய பிரதேசங்களில் வரட்சி தாண்டவமாடுகிறது. மறுபுறம் அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீ பரவி அந்நாட்டின் பணக்கார நகரமே சாம்பலாகி விட்டது. பிரித்தானியாவில் வழமைக்கு மாறான மழைவீழ்ச்சியும் சூறாவளியும் வெம்மையும் மாறி மாறி வாட்டுகிறது. கனடாவிலும் அலாஸ்காவிலும் கடும் குளிர்காற்று அல்லல் படுத்துகிறது. இப்படி உலகின் ஒவ்வொரு மூலையிலும் தாண்டவமாடும் இக் காலநிலை எது என்று புரிகிறதா?....

எழுதியவர் : திவினோதினி (13-May-16, 5:00 pm)
சேர்த்தது : சர்மிலா வினோதினி
பார்வை : 1497

சிறந்த கட்டுரைகள்

மேலே