ஏன் தமிழன் தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்படக்கூடாதா ஏன் ஜாதிச்சாயம் பூசுகிறார்கள்
கட்டுரை தலைப்பு: ஏன் தமிழன் தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்படக்கூடாதா? ஏன் ஜாதிச்சாயம் பூசுகிறார்கள்?
ஆசிரியர்: தனசேகர்
---------------------------------------
ஏன் நாம் தமிழரை முன்மொழிய வெட்கப்படுகிறோம்? என்கிற கேள்விக்கு பிறகு வருவோம். முதலில் யார் உண்மையான தமிழர் என்று சிந்தித்து பார்ப்போம். யார் உண்மையான தமிழன்? தமிழ் படித்ததால் தமிழனா? தமிழில் படித்ததால் தமிழனா? தமிழில் பெயர் வைத்துக் கொண்டதால் தமிழனா? தூய தமிழில் பேசத் தெரிந்ததால் தமிழனா? தமிழ்நாட்டில் பிறந்ததால் தமிழனா? தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பிறந்ததால் தமிழனா? அல்லது தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ்நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்றால் உயிரைக் கொடுத்து போராடுபவன் தமிழனா? யார் தமிழன்? இவை எல்லாம் கொண்டவன் தமிழன் என்றால் அதற்கும் ஒருபடி மேலே போகலாம் அரசியல் என்ற மகத்தான பொதுவாழ்வின் பார்வையில்... தமிழ் கலாச்சாரத்தோடு, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், சுயநலத்திற்கு சிறிதும் இடமின்றி, தமிழர்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர்களையே, அர்ப்பணிக்க தயாராக இருப்பவர்களையே பொதுவாழ்வுக்கு இலக்கணம் படைத்த தமிழர்கள் என்று சுருங்கக் கூறலாம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட தமிழரை முதல்வராக, மக்கள் சேவகராக முன்மொழிய நமக்கு ஏன் தயக்கம் வரப்போகிறது?
இங்கு எல்லா பண்புகளையும் கொண்டவர்களை விட, அதோடு சுயநலத்தையும் சேர்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம். மேலும் அதோடு, தனக்கென ஒரு கூட்டத்தை அடையாளப் படுத்தி களம் காண்பவர்களின் கூட்டம் இன்னும் அதிகம். தன்னை ஆதரிக்கும் ஒரு கூட்டத்திற்கு சாதிச் சாயத்தை தானே பூசி, அதன் மூலம் தேர்தல் களம் காண்பவர்கள்தான் அதைவிட அதிகம். இது ஏன் நடக்கிறது?
வேறொன்றும் இல்லை, பொதுவாழ்வு வணிகமயமானதன் விளைவுதான் அது. தனக்கென நிரந்தரமாக, சாதி சார்ந்த ஒரு சமூகக் கூட்டத்தை தக்கவைத்துக் கொள்வதன் மூலம், குறைந்தபட்ச வாக்கு வங்கியை சுயநலவாதிகள் தன்வயப்படுத்திக் கொள்வது. அதன்மூலம் எப்போது தேர்தல் வந்தாலும் தனக்கான பதவியை ஆயுள் முழுவதும் அடைந்துகொண்டிருப்பது.
நமக்கு தமிழரை முன்மொழிய வெட்கமில்லை. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தமிழரை முன்மொழிய ஒன்றும் வெட்கமில்லை. நாம் முன்மொழிபவர்கள் தமிழர்களாக இருக்கும் வேளையில், சாதி சாயத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இல்லாமல் இருப்பதுதான் நமது தயக்கத்திற்கு காரணம். அவர்கள் பொதுவாழ்வில் அடியெடுத்து வைப்பதே சாதிச்சாயத்தோடுதான் என்பதுதான் பிரச்சனை.
இது தனக்கு இயல்பாய் ஏற்பட்டு விட்டது என்றோ, தான் பொதுவாழ்விற்கு வருவதற்கு இந்த குறிப்பிட்ட சமூகத்தினரது ஆதரவுதான் காரணம் என்றோ அவர்கள் நினைக்கலாம். ஆனால் இவ்வளவு காலங்களாக பொதுவாழ்வில் இருந்தும், இந்த சாதிச் சாயத்தை அவர்களால் நீக்க முடியவில்லையா? அல்லது நீக்க விருப்பமில்லையா? என்பதுதான் இயல்பாய் எழும் கேள்வி.
இந்த மண்ணின் மைந்தர்கள் செய்த மாபெரும் தவறு இதுதான். தமிழக மக்களை எந்த சாதிக்கும் உட்படுத்தாமல் தன்னால் ஒரு சிறந்த பொதுநலவாதியாக (வெற்றி தோல்வியெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்) உருமாற முடியாததுதான் இந்த மண்ணின் மைந்தர்கள் செய்த மாபெரும் தவறு. இவர்கள் எப்படி தமிழகத்தை வளர்ச்சிப்பாதையை நோக்கி கொண்டு செல்லப்போகிறார்கள்? அல்லது இவர்கள் தரும் உறுதிமொழியை மக்கள் எப்படி நம்புவார்கள்?
ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறந்திருக்கலாம். எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் இதுவரை ஆளாகாமல் இருந்திருக்கலாம். சுயநலத்தைக் கைவிட்டு, தனது அடையாளத்தை பொதுநலம் சார்ந்து, (இவர் மக்கள் பிரதிநிதியாக மக்கள் பிரதிநிதிகளின் தலைவராக அதாவது முதல்வராக வந்தால் எங்களுக்கு நிச்சயம் ஏதாவது செய்வார் என்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்தினரும் உறுதியாக நம்பும் அளவிற்கு) தனக்கான அடையாளத்தை மக்கள் மனதில், மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவரே, அல்லது இனிமேல் ஏற்படுத்துபவரே (பதவி இல்லாமலும், மக்களுக்காகவே வாழ்வது....) நமக்கான தலைவராக, நாம் முன்மொழியக் கூடியவராக விளங்க முடியும்.
-----------------------------