குழந்தைகள் எந்திர குதிரைகளா
விடுமுறை நாட்களிலும் பிள்ளைகளை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தனியார் பள்ளிக்கூடங்களும் பெற்றோர்களும்...
விடுமுறை என்பதே தன்னை புதுப்பித்துக் கொள்ளவும், எதிர்கால வகுப்புகளுக்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், பள்ளி நாட்களில் சந்திக்க இயலாத உறவுகளை, பார்க்காத இடங்களை , பாட்டி ஊரில் உள்ள நண்பர்களை காணவும் தன்னம்பிக்கையை அதிகரிக்கவுமான நாட்களே இந்த விடுமுறைகள் ஆகும்.
வகுப்புகள் முறையாக ஆரம்பிப்பதற்கு முன்பே பிள்ளைகளை கட்டிப்போட்டு அச்சு பிசகாமல் வரிக்கு வரி மனப்பாடம் செய்ய வற்புறுத்தி துன்புறுத்தும் சித்திரவதை கூடமாகவே தனியார் பள்ளிகள் செயல்படுகிறது.
பள்ளிகளுக்கு தேவை
நூறு சதவிகித தேர்ச்சி கூடவே புகழ். அப்பொழுதானே பணத்தைக் கொட்டிக் கொடுத்து பெற்றவர்கள் தன் பிஞ்சு மழலைகளை இயந்திர குதிரைகளாக மாற்ற வருவார்கள்.
பெற்றவர்களுக்குத் தேவை தன் பிள்ளை எல்லாரையும் விட எல்லாவற்றிலும் முதலிடம் பெறுவதும்
ஆங்கிலம் பிரெஞ்சு இந்தி என தாய்மொழி தவிர எல்லா மொழிகளிலும் உளறிக் கொட்டுவதை ரசிப்பதும் தான் அவர்களின் வாழ்நாள் தேவைகள். எதிர்பார்ப்புகள். தன் பிள்ளை பணம் கொட்டி தரும் மரமாக இருக்க வேண்டுமே தவிர நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்பதை பற்றி கண்டுக்கொள்வதில்லை. பிறகு அவர்கள் வளர்ந்த பின் தாயை மதிக்கலை தகப்பனை மதிக்கலை எதிர்த்து பேசுகிறான் என புலம்புவதில் பயனில்லை.
பிள்ளைகளின் ஆசை என்ன? அவர்களின் விடுமுறை தின கனவுகள் என்ன? அவர்கள் ஆசைப்படுவது என்ன? எத்தனை பெற்றோருக்குத் தெரியும்?
சரி. படிப்பு படிப்பு படிப்பு தான் வாழ்க்கை என்று சொல்பவர்கள் பலருக்கும் படித்த படிப்புக்கு ஏற்ற பணியை தான் எல்லாரும் செய்கிறார்களா? என்பது தெரியுமா?
திறமை மிக்க எத்தனையோ மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்துவிட்டு படிப்புக்கு சம்பந்தமே இல்லாத பணிகளை செய்கிறார்கள்.
எந்திர குதிரையாக வளர்க்கப்படும் குழந்தையிடம் அவர்கள் வளர்ந்த உங்களிடம் மதிப்பாக நடப்பார்கள் என தயவுசெய்து
எண்ணாதீர்கள்.
விடுமுறை நாட்களில் அவர்கள் மனதோடு பேச நேரமுண்டு. குடும்பத்தைப் பற்றி உறவுகளைப் பற்றி அம்மாவின் கதை, அப்பாவின் கதை என அவரவர் வாழ்க்கை கதைகளை பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசினால் பிள்ளைகள் அதை புரிந்துக் கொள்வார்கள்
உங்களை நம்புவார்கள்
நட்பாக நினைப்பார்கள்
ஏய் ஏண்டி பத்தாவது வந்துட்ட ஸ்பெசல் கிளாஸ்ல படிச்சதை வீட்ல படிக்காம என்னடி ஆதித்யா காமெடி பாக்குற
டேய் என்னடா கிரிக்கெட் விளையாட போற. பிளஸ் 2 பாடமெல்லாம் படிக்க டைம் இல்ல தம்பீ.. இனி கிரிக்கெட்லாம் மறந்துடு..
அம்மா என்னை படத்துக்கு கூட்டிட்டு போங்கம்மா..
படிக்குற பொழப்ப பாருடி இந்த வருஷம் ஸ்டேட் பர்ஸ்ட் உன் எய்ம்மா இருக்கணும் மார்க் மட்டும் குறையட்டும் அப்பறம் இருக்குடி..
அப்பா நான் பாட்டி ஊருக்கு போய்டு வரட்டுமா?
ஏண்டா உனக்கு ஆயிரக்கணக்குல பணம் கொட்டி படிக்க வைக்குறேன் ஸ்கூல்ல ஸ்பெசல் கிளாஸ் வச்சு உனக்கு பாடம் நடத்துறாங்க. உனக்கு கொழுப்பா? பாட்டி வீடும் போக கூடாது பூட்டி வீடும் போக கூடாது. போய் படி. மதியம் சாப்பிட்டுட்டு நான் கேட்குற கேள்விக்கு ஆன்ஸர் பண்ணனும் இல்ல தொலச்சுப்புடுவேன்
இந்த வசனங்கள் விடுமுறை தினங்களில் பள்ளி செல்லும் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் வீடுகளில் தினம் கேட்கும்.
விடுமுறை நாளில் பிள்ளைகளின் சின்ன சின்ன ஆசைகளை கூட கருக்கி விட்டு அவர்களின் மன ஓட்டங்கள் புரியாமல் தடித்த வார்த்தைகளை பேசி படிப்பு மட்டுமே வாழ்க்கை வேற எதுவுமே முக்கியமில்லை என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் இரத்த காயங்களை ஏற்ப்படுத்தி செதுக்கி விடுகிறார்கள்...
விடுமுறை தினங்கள் பிள்ளைகளின் மன அழுத்தங்களை குறைக்கவும் குடும்ப உறவுகளுடைய கட்டமைப்பை அறிந்துக் கொள்ளவும் கிடைத்த அரிய பெரிய சந்தர்ப்பமே தவிர மேலும் மேலும் மென்மையான பிள்ளைகள் மனதிலும் முதுகிலும் கடினமான சுமைகளை ஏற்றுவதற்காக அல்ல.