கானலாய் ஓர் அறிமுகம்

பகலென்றாலும் சரி...
இரவென்றாலும் சரி..

வெண்ணிலவு நீ
வெளியில்
வரும்போதெல்லாம்
எனக்குள் பெளர்ணமியான
தருணங்களை
தனியே நினைக்கிறேன்.....

என் காதல் பிரபஞ்சத்தின்
ஒற்றைத் துணைக்கோளாய்
இருந்தவள் நீதானே....!

உன்
பன்னீர் பார்வைகளில்
தாறுமாறான இதயம்
உன் இதய இணைப்பில்
சமாதானமடைந்தது
நினைவிருக்கிறதா...?
..
உன்
மந்திரப் புன்னகையில்
மசக்கையான
என் இதயம் இன்னும்
உன்னுடன் இருக்க நியாயமில்லை....

தூர நின்றுதானே
உன்னைப் பார்க்கிறேன்.
கொஞ்சம் மெதுவாகவே
நடந்து போ...

குளக்கரை தாமரைகளுக்கு
என் நினவுகளில்
பூத்து நின்ற
செந்தாமரை நீதானென்று
அறிமுகம் செய்ய வேண்டும்...

வாடைக்காற்றும்
தென்றல் காற்றும்
முத்தமிட்டுப் போகும்
இந்த குளத்துக்கு
என் இதயக் குளத்தில்
தினம் அலையடிக்க வைத்த
தனி அலை நீதானென்று
அறிமுகப்படுத்த வேண்டும்.

இருவண்ண தாவணியில்
இதயம் கலைத்த
என் இதய மயிலை
வயல் மேயும் மயில்களுக்கு
அறிமுகம் செய்யவேண்டும்.

எனக்குள் காதலிசை பாடிய
உன் குரலை
தினம் காப்பியடிக்கும்
புளியமரக் குயில்களுக்கும்
அறிமுகப்படுத்த வேண்டும்.

என்னை தீண்டிப்போன
இதயக்காற்று இவளென்று
தென்றலுக்கும்
அறிமுகப்படுத்த வேண்டும்..

கடைசியாய்
உங்களுக்கும்
அறிமுகப் படுத்த வேண்டும்.

நான் படிக்கவில்லையென
எனை உதறிப்போன
நாகரீகக் காதலியும்
இவள்தானென்று...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (14-May-16, 8:05 am)
பார்வை : 522

மேலே