ஆடுகளமும் ஆட்டுவிப்போரும்

ஒருவரின் வெற்றியின் அளவும் எதிராளியின் தோல்வியும் எதிர் மறையில் ஒரே விகிதாச்சாரத்தில்தான் இருக்கும். சம்பந்தப்பட்டவரின் பலவீனத்தை ஆய்ந்து பட்டியலிட உங்களின் வெற்றிக்கான அடிக்கல் நிறுவியாகிவிட்டது என்று நீங்கள் மார்தட்டிக் கொள்ளலாம். இந்த பலவீனம் என்ற சொல் அறிவுப் பற்ற்றாக்குறையாகவோ, பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வாகவோ மற்றும் பல சமன்பாடிலாத நீண்ட பட்டியலை முன்னிறுத்தும் காரணிகளாகவும் இருக்கும்.
ஒருவரின் பலவீனத்தைக் கண்டறிந்து அவரை வீழ்த்துவது அப்படியொன்றும் சுலபமான காரியமில்லை; என்றாலும் நிறைவேற்றக்கூடிய சாத்தியக் கூறுகளுண்டு என்பதை நாம் ஒரு போதும் மறக்க இயலாது.
மனிதனின் பல விதமான பலவீனங்களை ஆராய அனைவரும் அதிகப்படியாக மனதில் மறைத்து வைத்திருக்கும் மரண பயம்தான் இப்போதைய நம் ஆடுகளம். இந்த இளகிய மனநிலையில்தான் ஏதாவதொரு, மதத்தின் கொள்கைகளை சர்வரோக நிவாரணியாக மரணபயத்தை அதிகப்படுத்தியோ அல்லது மரண பயத்தை அகற்ற உதவும் வடிகாலாகவோ கொஞ்சம் திரித்துக் கூற அவர்களின் வாக்குப் பெட்டிகளில் வழிய வழிய வாக்குகள் விழும் சாத்தியங்களுண்டு.
எல்லா மதங்களும் இறப்பு சார்ந்த மீட்சியை ஒரு மித்த ஒர் மையப் புள்ளியில்தான் வெவ்வேறு அலகுகளில் தொடர்வதாய்த் தெரிகிறது. உதாரணமாக, இறப்பிற்குப் பின் யோக வாழ்வு, இன்றைய அல்லது கடந்தகால பாவ புண்ணிய கணக்குகளின் மரணம் சார்ந்த மதிப்பீடு, மறுபிறவி, வாழ்க்கையின் நிரதரத்தன்மையென பட்டியல்கள் நீண்டு கொண்டே போகும் பட்டியலில் மையப் பொருளாய் மரணமும், அதனைச் சார்ந்த மேலுலக வாழ்க்கையும்தான் எஞ்சியிருக்கும். மரணத்தைக் குறித்த அச்சம் மனிதர்களிடையே இருக்கும் வரை மதங்களின் ஆதிக்கமும் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். பன்னாட்டு நிறுவனங்களில் தொழில் ஆளுமை குறித்த போராட்டாம், பணி நிமித்தம் எழும் மனச் சோர்வு, மற்றும் புலன்களின் கட்டுபாட்டிற்கு மதங்கள் உதவுவதாக ஒரு சாராரின் வாதம் இருந்தாலும், மதம் ஒரு சிறந்த வசியப் பொருளாகவே மனிதர்களிடம் இருக்கும் காரணம், மரணம் குறித்த பயத்தினைத் தாண்டி வர சிறிதேனும் இந்த மதம் உதவுமென்ற தவறான நம்பிக்கையில் இந்த மானுடம் இதுநாள் வரை உழல்வதால்தான்.
பயமெனில் ஓரளவு நீக்கவும், பலவீனமெனில் மாற்றியமைக்கவும் வழியுண்டு. ஒருவனின் குழம்பிய மன நிலையை மற்றவர்கள் அவர்களின் கொள்கை கேட்பாட்டிற்கேற்றவாறு ஒரு பொருளாக அவனை மாற்றியமத்துத் தன் கட்டுப்பாட்டிற்குள் பக்குவமாக வைத்துக்கொள்வதில்தான் மதவாதிகள் வெற்றி அடைகிறார்கள். அடுத்தவர்களிடம் வசிய மறுக்கும் உறுதியான மன நிலையில் நீங்களிருந்தால் உங்களை அவ்வளவு சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது.
அதிகமான கேள்விகளைக் கேளுங்கள். நீண்ட சர்ச்சைக்கு உங்களை உட்படுத்துங்கள். கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு பிரித்தாய்ந்து , சரி தவறு என்ற இரண்டே பாகுபாட்டில் திருப்தியடைந்து விடாமல், அதையும் மீறியபடிக்கு இருக்கட்டும் உங்களின் விவாத மேடை. மற்றவர்களின் கருத்துக்களுக்கு சீக்கிரம் விலை போகும் நுகர்பொருள் நீங்கள் இல்லை என்பதில் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் தீர்மானமாக இருங்கள்.
எந்தக் கருத்தினையும் அடுத்தவர்களின் பரிச்சயம் கருதியோ, அல்லது உறவு சார்ந்தோ, உடல் வசீகரத்தாலோ, திணரடிக்கும் தொடர் மொழிச் சொல்லாற்றலாலோ மட்டும் தீர்மானிக்காமல் அன்னாரின் கருத்துக்களுடன் சமூக சிந்தனையோடு உங்களின் பங்கினை உரிமையோடு எடுத்துச் சென்று நிறைவேற்ற ஏதுவான ஆடுகளம் தானவென்று பரிசோதியுங்கள். வாழ்க்கையின் எந்த நிலையிலும் உங்களுக்கான விலையை அடுத்தவர்கள் தீர்மானிக்கும் சந்தர்ப்பத்தை அறவே கொடுக்காதீர்கள்.
இன்னும் நாம் ஒரு குழந்தையின் மன நிலையில் இருப்பதுதான் அடுத்தவர்களுக்கு இன்றளவும் ஒரு ஆறுதலான பலம். ஒரு குழந்தையிடம் “அம்மா வேண்டுமா, அப்பா வேண்டுமா” என்று கேட்க, யாருடைய அணைப்பில் தற்போது இருக்கிறதோ அவர்கள்தான் வேண்டுமென்று குழந்தைகள் கூறும். இத்தகைய மனநிலை ஒரு புறம் பாதுகாப்பு கருதியிருக்கலாம். குழந்தையின் இயலாமைதான் அதன் சரணாகதிக்குக் காரணம். வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது சரணாகதித் தத்துவத்தை மெதுவாக எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தன்னிலை ஆராய்ச்சியில் புது மனிதராகத் தம்மை இனம் கான விழைகிறார்கள். அடுத்த படி நிலையான சுய சிந்தனைக் கட்டத்தில் எதற்கும் வசியப்படாமல் நியாயமான தன் கருத்துக்களை முறியடிக்கும் எதிர்க் கருத்தை துளியும் உள்வாங்காமல் உறுதிப்பாட்டுடன் இருக்க முயற்சிப்பதே வாழ்க்கையின் வெற்றி.
அடிப்படையில் மனிதன் மிகவும் நல்லவன்தான். அவன் குணங்களைத் தீர்மானிப்பது புற நிலைக்காரணிகளின் தூண்டுதலான பேச்சும் செயல்பாடும் தான். இப்போதாவது உங்களின் மேல் நம்பிக்கை வையுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இந்தப் பூவுலகின் ஈடில்லா சிறப்புப் பிரதிநிதிகள். உங்களுக்கென்று நிச்சயம் தனிக் கொள்கைகளுண்டு, கோட்பாடுகளுண்டு. இன்றே தீர்மானியுங்கள் யாருடைய வழித்தடத்தில் உங்களின் வருங்காலம் இருக்க வேண்டும் என்பதை.
எந்த மதத்திலும் என்னை நான் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை. ஆயினும் எனக்கு கிறித்துவப் பாதிரிமார்களின் அன்பான அரவணைப்பு பிடிக்கும். அடுத்தவர் பசி தீர்க்கும் முல்லாக்களின் மனத்தவிப்பு பிடிக்கும். நம்பிக்கையான இந்துப் பூசாரியின் வாக்கு பிடிக்கும்.
என் நண்பர் வீட்டிற்கு ஒரு விடுமுறை நாளில் சென்றிருந்தேன். அன்றுதான் நண்பரின் ஐந்து வயது குழந்தைக்குப் பிறந்தநாள். நண்பரின் மடியில் பஞ்சுப் பொதியலென அவரின் அன்பு மகள். வழக்கம்போல நான் “உனக்கு யாரு செல்லம் ரொம்பப் பிடிக்கும்?” என்று கேட்க தாமரைப் பூ விரல்களை விரித்து, கூடத்தின் பக்கம் நீட்டி “பாட்டிதான் ரொம்பப் பிடிக்கும்” என்றாள். தந்தையின் தற்போதைய அன்பான பாதுகாப்பிலிருந்தாலும் அந்தக் குழந்தை மதியத் தூக்கத்திற்கு பாட்டியின் மடிக்கு முன்பதிவு செய்த திருப்தியில் என்னைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தது.

எழுதியவர் : பிரேம பிரபா (15-May-16, 12:27 pm)
சேர்த்தது : பிரேம பிரபா
பார்வை : 79

மேலே