முகமூடிகளும் முட்கிரீடங்களும்

வழிந்து படரும் மங்கிய ஒளி. மனதை விரல்களால் மெல்ல வருடும் இசை. பெரிய மனிதர்களின் முகத்தை அலங்கரிக்க பல விதமான வினோத முகமூடிகள். ஆங்கில உரையாடல்கள். வலது கைகளின் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானக் கலவை. அதை மெதுவாக சுவைத்துப் பருகியபடி நடக்கும் தொழில் சார்ந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள். இது போன்ற நிகழ்ச்சிகளில் அறிமுகமான நண்பர்களை அடையாளம் காண்பதென்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. ஒவ்வொருவரையும் அடையாளம் காண்பது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். இது ஒரு சாதாரண நிகழ்வெனினும் நிஜ வாழ்க்கையில் முகமூடி தரித்துக் கொண்டவர்களின் இறுக்கமான மனப் போராட்டங்களைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.
நம்முடைய புரிதலுக்கு எளிமையான இரண்டு விதமான முகமூடிகளைப் பற்றி மட்டும் நாம் இப்போது பார்ப்போம்.
ஒன்று அவர்களாகவே அணிந்து கொள்ளும் முகமூடி. மற்றோன்று ஏதாவதொரு சூழ்நிலை நிர்பந்தத்தின் காரணமாக அடுத்தவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு வித பலாத்காரத்துடன் அணியவைக்கும் முகமூடிகள்.
முதல் பிரிவினர்களுக்கு முகமூடிகள் தம் முழுக் கட்டுபாட்டில் இருப்பது போன்ற பாவனியில் இருந்தாலும், நாட்கள் கழியக் கழிய அவர்களின் முகத்தோடு முகமாக கனக்கச்சிதமாக ஒட்டிக் கொள்ளும். இரண்டாம் பிரிவினர்க்கு முகம் முழு உருமாற்றம் பெறுவதற்கான ஆயத்தப்பாட்டில் சமூக நிர்பந்தத்தின் பங்களிப்பு பெருமளவு இருக்கும். உங்களை விட்டால் எங்களை வழி நடத்த ஆளில்லாமல் அனாதைகளாகி விடுவோம் என்று துதிபாடும் கூட்டத்தினர்களிடமிருந்து முகமூடியை மிகவும் பவ்யமாகப் பெற்றுக் கொண்டு அதன்படி உருமாற்றத்திற்குத் தன்னைத் தானே தயார் செய்யும் மனிதர்கள் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள்.
இப்போது முதலில் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றிப் பார்ப்போம். இயல்பான உணர்வுப் பதிவுகளை மாற்றிக் கட்டமைத்து போலியாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள சராசரி ஆசாமி, அதி மேதாவியாகவும்; மற்றவர்களால் சுலபமாக ஏமாற்றப்படும் ஆசாமி, உஷார் ஆசாமி என்ற பெயரையும் தட்டிச் செல்வார்கள். இவர்கள் ஆரம்ப அங்கீகாரம் கிடைக்க கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். நாள்பட அடுத்தவர்களின் ஒருமித்த சான்றிதழ் கிடைக்கும் பக்குவத்திற்கு வந்தவுடன் அன்னாரின் முகமூடி கழற்ற முடியாதபடிக்கு நிரந்தரமாக அவர்களின் முகத்தோடு முகமாக ஒட்டிக் கொள்ளூம்.

‘நான் இப்படித்தான். இதை மீறியபடிக்கு என்னால் நடக்க முடியாது. என் பலவீனங்களை கண்முன்னே காட்டிவிட்டேன். இதை ஒப்புக்கொண்டு என்னுடன் பழக முயற்சியுங்கள்” என்று யாரும் தங்களின் சுயத்தை அவ்வளவு சுலபமாக பூசணிக்காயை உடைப்பது போல வெளிக்காட்டிவிட மாட்டார்கள். நம் பலங்களை விட பலவீனங்களை அறிந்த ஒருவனிடமிருந்தே இணக்கமான உறவுகள் கிடைக்கும் என்பதே அனைவராலும் ஒப்புக்கொண்ட பொதுவான் உண்மை.

கடற்கரையில் கால் கடுக்கக் காத்துக் கிடந்து அரும்பாடுபட்டுக் காதலை வளர்க்கும் காதலர்கள் தத்தம் பலவீனங்களை ஒருமனதாக மூட்டை கட்டி கடலில் வீசி எறிந்துவிட்டு, தனி மனித பலங்களையும் தனித் திறமைகளையும் போட்டிப் போட்டுக்கொண்டு உயர்த்திப் பிடித்து முகமூடிகளுடன் ஒரு நாள் கை பிடிக்க, திருமண வாழ்க்கை சீக்கிரமாகவே ஒரு போராட்டக் களமாகிவிடும். காதல் திருமணங்கள் நூற்றுக்கு நூறு வெற்றி பெறாததற்கான காரணம் இது போன்ற திட்டமிட்ட இருட்டடிப்புதான்.
திறமையை மீறியபடிக்கு மரியாதை நிமித்தமாகவோ, ஆளுமை காரணமாகவோ சுயம் தரித்துக்கொண்ட முகமுடிகள் ஆயுள் தண்டனைக்கு ஒப்பாகும். நீங்கள் நீங்களாகவே இருக்க ஒரு நாள் நிச்சயம் நீங்களும் மற்றவர்களால் பாராட்டப்படலாம். போராடி வளர்த்துக் கொண்ட உங்களின் திறமைகள் முகமூடிகளைப் பார்க்கிலும் மிகவும் போறுத்தமாகவும், வெகு நேர்த்தியாகவும் இருக்கலாம். அடுத்தவர்களின் அங்கீகாரத்திற்காக ஒருவன் வாழ முற்பட்டால், முகமூடிகளுடன் இலவச இணைப்பாக சில முட்கிரீடங்களையும் நிச்சயம் நாம் சுமக்க வேண்டியிருக்கும்.
இரண்டாவது ரக முகமூடிக்கார்களோ கொஞ்சம் வித்தியாசமானவர்கள். அடுத்தவர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க அடுத்தவர்களாலேயே முகமூடி தரிக்க வேண்டிய நிப்பந்தம் அவர்களுடையது. இது போன்றவர்களுக்கு சலுகையான விஷயம், எதைக் குறித்து முகமூடி அளிக்கப்பட்டாரோ, அதைச் சார்ந்த துறைகளில் விற்பன்னராக வேண்டிய கட்டாயத்தின் காரணமாக கண்டிப்பாக திறமைகளை வளர்க்கப் போராடிக் கொண்டே இருப்பார்கள். காலப் போக்கில் சுயம் மறந்து அச்சில் வார்க்கப்பட்டவர்களாக வலம் வந்து கொண்டிருப்பார்கள். இறுக்கமான முகத்துடன் இயல்பான சிரிப்பை அளவுடன் வெளிப்படுத்தி, மற்றவர்களால் பூட்டப்பட்ட முகமூடிக்கு எவ்வித களங்களும் வராதபடிக்கு இயந்திர மனிதர்களாகவே முழுவதும் மாறிவிடுவார்கள். முனியாண்டி என்ற உங்களின் பெயரை இனிமேல் “மேக்” என்றுதான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று கட்டளை இடும் பிபிஓ நிறுவனத் தலைவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு முகமூடி தரித்து வாழும் நம் படித்த இளைஞர்களும் இதில்தான் அடங்குவார்கள்.
இன்றைய இயந்திர வாழ்க்கையில் இது போன்ற முகமூடிகள் தேவை கருதி கட்டயமாக அணிய வேண்டிய ஒன்றாக மாறிப் போக, வரும் காலங்களில் உலா வரும் இயந்திர மனிதர்களை நினைத்துப் பார்க்கவே மிகவும் அச்சமாக இருக்கிறது. சடங்காகிப் போன உயிரற்ற கை குலுக்கல்களும், திட்டமிட்டு முன் ஒத்திகை நடத்திய அளவான பேச்சுக்களும் , காரியம் முடிந்ததும் அவசரகதியில் கைகளைக் குலுக்கி விடை பெறுதலும் மானுடத்தை தனி மனிதத் தீவுகளாக ஒருநாள் அடையாளம் காட்ட வேண்டி இருக்கும்., இது போன்ற முகமூடிக் கலாச்சாரத்தால் உங்களின் சுயம் செத்தொழிந்து ஏதோவொன்றாக மாறிப் போவீர்கள். நீங்கள் நீங்களாகவே இல்லாமல் யாரோ ஒருவராக நிரந்தர ஒப்பனையுடன் வாழ வேண்டியிருக்கும். பரம்பரை இடைவெளிகள் நீண்டுகொண்டே போய் “நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில்தான் இருக்கிறோம். ஆனால் தனித்தனியாக” என்ற முரணான புரிதல் வந்து விடும். என்று உங்கள் சுயம் அழிந்ததோ அன்றே, போலித்தனமான உபசரிப்புகளும், இயந்திரத் தனமான தலையாட்டல்கள் மட்டும்தான் உங்களின் போலியான வாழ்வுக்கு வெகுமதியாகக் கிடைக்கும்.
நாம் இயல்பாக இருப்பதை இயற்கை என்றும், முகமூடி தரித்தலை செயற்கை என்று சொல்கிறோம். ஆனால் நவீனத் திறனாய்வின் தந்தை என்று அழைக்கப்பட்ட பிரேஞ்சுக் கவிஞர் சார்லஸ் பாதலேர் (1821-1867) “இயற்கையாக இருப்பது சுயநலம்” என்கிறார். அதாவது தீய குணம் இயற்கையானது. அதற்கு மாறாக நல்ல குணம் என்பது செயற்கையானது. நாம் நல்லவர்களாக இயங்கிவர நம்முடைய இயற்கையான் உந்துதல்களையெல்லாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பது அவருடைய வாதம்.
பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் மதிப்பெண்கள் அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழுக்குப் பதிலாக ஃப்ரென்ச் மொழி எடுத்துப் படிக்க வேண்டியதாயிற்று. நண்பர்களிடையே ஃப்ரென்ச் மொழி வித்தகனாக முகமூடி மாட்டிக்கொண்ட நான், ஒரு நாள் என் நண்பனுடன் மதுரைக்கு சுற்றுலா வந்த ஃப்ரென்ச் யுவதியிடம் வகையாக மாட்டிக்கொண்டேன். நான் பேசுவது அந்த யுவதிக்குப் புரியாமல் தலையாட்டியபடி இருக்க அந்த யுவதியின் பேச்சைப் புரிந்துகொள்ள என் அறைகுறை பிரெஞ்ச் அறிவு கைகொடுக்காமல் தவிக்கவிட, என் நண்பன் மாறிமாறி எங்களைப் பார்த்து என்ன ஏது என்று குடைய ஆரம்பித்தான். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நானே அணிந்து கொண்ட முகமூடிக்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு தனிப்பயிற்சிக்கு வேண்டா வெறுப்பாகச் செல்ல ஆரம்பித்தேன். ஆசிரியர் எவ்வளவோ போராடியும் ஃப்ரென்ச்சில் நான் வெகு சரளமாகப் பேச கற்றுக்கொண்ட ஒரே வாக்கியம் “மான்சியர் சில் வு பிளே” என்பதுதான்.

எழுதியவர் : பிரேம பிரபா (15-May-16, 12:35 pm)
சேர்த்தது : பிரேம பிரபா
பார்வை : 97

மேலே