தேர்தல் – வேட்பாளரின் குண நலன்கள்
உண்மையான தேசநலம் கருதும் சில பெரியார்கட்கு நான்கு அரும்பெருங்குணங்களை திருவள்ளுவர் விதிக்கின்றார். இந்நான்கு குணங்களும் ஒருவரிடத்தே அமைந்து இருக்குமானால் அவர் எக்குற்றங்கட்கும் அகப்படாது தனித்தே நிற்கின்றார். அந்த நான்கு குணங்களையும் திருவள்ளுவர் கீழே வருமாறு கூறுகிறார்.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. குறள் 513
அன்பு, அறிவு, தேற்றம், அவாவின்மை ஆகிய நான்கு குணங்களில் தேசத்தார்க்குச் சேவை செய்யவரும் தலைவரிடத்தில் முதலில் பேரன்பு வேண்டும். அன்பு இல்லாவிடில் பிறர்க்கு நன்மை செய்ய வேண்டுமென்ற நினைப்பே இராது. அதனால்தான் அன்பை முதலில் கூறினார்.
அன்பு காரணமாக நன்மை செய்ய நினைப்பினும் அந்நினைப்பை முற்றுப் பெறச் செய்வது அறிவாதலால் அதன் பின் அறிவும் வேண்டுமென்றார். அறிவோடு கலந்து ஆலோசித்துச் செய்வார்க்கு ஒன்றைத் துணிந்து செய்யும் ஒப்பற்ற குணமும் வேண்டுமென்றார்.
அன்பு, அறிவு, தேற்றமாகிய மூன்றாலும் மிகுதியான பணம் தம் கையில் சேருமானால் பொதுமக்களுக்கே உதவி செய்தற்குரிய அப்பணத்தில் சிறிதும் ஆசையில்லாதிருத்தல் வேண்டும். இந்நான்கு குணங்களையும் எவர் உறைவிடமாகக் கொள்கின்றாரோ அவரே பொதுச் சேவைக்குரியார்.
முன்னுள்ள மூன்று குணங்களும் சாதாரணமாய் அநேகரிடத்துக் காணலாம். பொதுமக்கள் நலனுக்காக உதவக்கூடிய பொதுப்பணத்தில் ஆசையில்லாதிருத்தல் அருமையிலும் அருமைதான். இந்நான்கு குணங்களையும் உடையாரையே தேர்ந்தெடுக்கும் மக்கள் மிக்க நலனை அடைவர்.
இதனால் வாக்காளர்கள் தமது விலையுயர்ந்த வாக்குரிமையை அறிவு குணங்களால் நிறைந்த மேலோர்கட்கே உதவ வேண்டும். அவ்வாறு உதவினால் வாக்காளர்களுக்கும், ஏனைய மக்களுக்கும் நன்மை. அதுமட்டுமின்றி, இங்குள்ள வாக்காளர்களாகிய பொதுமக்களெல்லாம் தக்க அறிஞராகவே விளங்குகின்றனர் என்ற புகழையும் அடைவர். ஆதலின் இயன்றளவு எண்ணி ஆராய்ந்து தகுதியுள்ளவர்களையே தேர்ந்தெடுத்தல் நலம்.
ஆதலால், திருவள்ளுவர் கூறும் வாக்காளர் கடமையைச் சிறிதும் சிந்தியாது, சிற்றினத்தாரைத் தேர்ந்தெடுப்பின் அடியில் வரும் குற்றங்கட்கு ஆளாக வேண்டியதுதான்.
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். குறள் – 507
தகுதியில்லாரைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் குற்றங்களை இக்குறட்பாவால் விளக்குகிறார். அதாவது, பொதுமக்களுக்குப் பலவகையிலும் நன்மை செய்தற்குரிய திறமையும், அறிவும் இல்லாதாரை அன்பு காரணமாகத் தேர்ந்தெடுப்பின் அத்தேர்வு வாக்காளர்க்குப் பல அறியாமையைக் கொடுக்கும்.
எனவே, ஒருவர் பிறரிடத்துள்ள அன்பு காரணமாய் அவரைத் தேர்ந்தெடுத்தல் பெருந்தவறாம். ஒருவரிடத்துள்ள அன்புக்குத் தொழில் முடிக்கும் திறமையோ அறிவோ இராது. ஆதலால் அத்திறமையில்லாரிடத்தில் பொது வேலைகளைச் சுமத்தினால் அவ்வேலையும் கெடும். அது மட்டுமின்றி, இத்தேசத்தார்க்கு ஓர் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் அறிவு கூட இல்லாமல் போயிற்றே என்று பிறரால் இகழ்ந்துரைப்பதற்கு இடமாகும்.
இவ்வுண்மையைச் சிறிதும் சிந்தியாது, தேர்தல் காலங்களில் எவர் நாட்டுக்கு நலம் பயக்கின்றாரோ அவரையே தேர்ந்தெடுத்தல் முறையென்று கருதாது எவர் ஒருவர் பணத்தையோ, பொருளையோ இலவசமாகத் தருகின்றாரோ அல்லது தருவதாக வாக்களிக்கிறாரோ அவர்க்கே வாக்களித்தல் தவறாகும். சுயநலங் காரணமாய் உங்களது வாக்கை எனக்கே அளிக்க வேண்டும் என்ற முறையில் பல வேட்பாளர்கள் அலைகின்றனர்.
இன்னும் சில வேட்பாளர்கள் பணப்பெருக்கினால் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம். நான் வென்று விட்டேன் என்று பறைசாற்றலாம். ஆனால், பொதுமக்களுக்கு யாதேனும் நன்மை விளையுமா? அதுதான் இல்லை. இது சிறிது பண ஆசையால் வாக்காளர்கள் தமது உயரிய வாக்குரிமையைத் தகாத மனிதர்கட்கு விற்பதால் வரும் கேடேயாகும்.
அதனால்தான் அன்பு காரணமாய், பொருள் காரணமாய், நட்புக் காரணமாய், உறவு முறையார் என்ற காரணங்களைக் கொண்டு தகாதாரைத் தேர்ந்தெடுத்து விட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார் திருவள்ளுவர். இந்த எச்சரிக்கையை மறந்து தகுதியில்லாரை தேர்ந்தெடுப்பாராயின் பழிபாவங்களும், அறியாமை முதலிய பல குற்றங்களும் வாக்காளரிடம் வந்து நிறையும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும், திருவள்ளுவர் கூறுவதாவது,
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல். குறள் – 516
வாக்காளர்கள் முதலில் ஆராய வேண்டுவது யாதெனில், தேர்ந்தெடுக்கப்படுவோரது குணம், செயல், சாமர்த்தியம், தன்மை முதலியவற்றை ஆராய்ந்தறிய வேண்டும். அதன்பின், அவரது தொழிலையும், அவரது செயல் திறனையும் அறிந்தபின் அதற்கு மேல் அறிக என்று ஒரு நுட்பமான முறையை வெளிப்படுத்துகின்றார் திருவள்ளுவர்.
இப்புதிய முறையை எங்கும், யாரும் ஆலோசிப்பதில்லை. அது யாதெனின், ஒருவன் எத்தொழிலையும் எளிதாகச் செய்து முடிக்கும் ஆற்றலுடையவனாகினும் இவன் இக்காலத்துக்கேற்ற பொருத்த முடையவன்தானா? தேசிய உணர்ச்சி உடையவன்தானா? நன்னோக்கமுடையோரால் விரும்பத் தக்கவன்தானா என்பனவற்றையும் ஆராய்ந்து தொழிலை அவனிடம் சுமத்துக என்பதாம். அதனால்தான், ’காலத்தோ டெய்த உணர்ந்து செயல்’ என்கிறார் திருவள்ளுவர்.
உதாரணமாய், மதுவிலக்குச் சங்கத்தில் கள்ளுண்டு களிக்கின்றானைத் தேர்ந்தெடுப்பின் அச்சங்கத்தால் பயன் யாது? காலத்துக்குத் தக்கவாறு குணங்களையும், செயல்களையும் மாற்றிச் சமயோசிதம் போல நாகரீகமான முறையில் திறமையாய் வேலை செய்து நாட்டை உயர்த்துகின்ற மனப்பான்மை உடையானையே தேர்ந்தெடுத்தல் நலம் என்பது விளங்கிற்றல்லவா? மதுபான விற்பனையில் நாட்டுக்குத் தேவையான வருமானம் கிடைக்கிறதென்று ஏழை எளியோரையும் மதுபானம் அருந்தச் செய்யும் செயல்களில் அரசாங்கமே இறங்கலாமா?
பொதுமக்களின் குடியாட்சி நல்ல முறையில் நடைபெற தேர்தல் படிப்பினையில் ஒவ்வொரு வாக்காளர்களும் தேர்ந்துவிட வேண்டுமென்பது சிறந்தது.
ஆதாரம்:
திருக்குறள் அஷ்டாவதானம் தி.ப.சுப்ரமண்யதாஸ் அவர்களின் ’வள்ளுவர் வகுத்த அரசியல்’ என்ற புத்தகத்திலிருந்து.
தமிழக வேட்பாளர்களில் 32% பேர் மீது கிரிமினல் வழக்கு
மே 14, 2016
சென்னை: 2016 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 32 சதவீதம் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வலைதளத்தில், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறி்த்த தகவல்கள், அரசியல் கட்சிகளின் வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட பல விவரங்களை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வலைதளம் 2016 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழக வேட்பாளர்கள் (1575) குறித்து வெளியிடபட்டுள்ள தகவல்கள்:
* தமிழக வேட்பாளர்களில் 21 சதவீதம் (324) பேர் மீது கிரிமினில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
* 11 சதவீதம் பேர் (178) மீது கடுமையான கிரிமினில் வழக்கு உள்ளது.
* 38 சதவீதம் வேட்பாளர்கள் (594) கோடிஸ்வரர்கள்
* 45 சதவீதம் வேட்பாளர்கள் (706) பட்டப்படிப்பு படித்தவர்கள்
* 21 சதவீதம் வேட்பாளர்கள் (324) பான் கார்டு எண் சமர்ப்பிக்கவில்லை
* 10 சதவீதம் வேட்பாளர்கள் (151) பெண்கள்
* 53 சதவீதம் வேட்பாளர்கள் (833) வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள்.