தோல்வியே வெற்றியின் முதல் படி

தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு எங்கள் மனம் திறந்த பாராட்டுக்கள்.

அதே வேளை தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். முயன்றால் முடியாதது இவ் உலகில் ஒன்றும் இல்லை. தைரியமுடன் இருங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். மீண்டும் புயலாக எழுந்து நில்லுங்கள். மனதை ஒருமுகப்படுத்தி சரியான திசையில் உங்கள் பார்வையை செலுத்துங்கள். வெற்றிக் கோட்டை அடைவதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். துணிச்சலாக படியுங்கள்.

கணிதத்தை கண்டு பயப்படாதீர்கள். கணக்கை கணக்காக போட்டால் நூற்றுக்கு நூறு வாங்கி விடலாம். ஆங்கில இலக்கணத்தை தெளிவாக படியுங்கள். தெரிந்தவர்களிடம் கேட்டு பயிலுங்கள். மனப்பாடம் செய்ய வேண்டியதை சரியாக பயிலுங்கள். தன்னம்பிக்கையுடன் செயல் படுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்தடையும்.

அதை விட்டுவிட்டு கோழைத்தனமாக வேறு முடிவுகளுக்கு வராதீர்கள். வாழ்க்கையின் சிகரத்தில் இருக்கும் பலரும் பரீட்சையில் தோற்றவர்கள்தான். தோல்விகாணாத மனிதன் உலகில் இல்லை. ஏதோ ஒரு விதத்தில் மனிதன் தோல்வியை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றான். தோல்வியே வெற்றியின் முதல் படி. அடுத்த பரீட்சைக்கு தயாராகுங்கள். விரைவில் வெற்றி பெற என் நல் வாழ்த்துக்கள்.

பெற்றோருக்கு ஒரு வார்த்தை. பிள்ளைகளை திட்டாதீர்கள். அவர்களுக்கு தைரியம் சொல்லி நல்ல முறையில் வழிகாட்டியாக இருங்கள். ப்ளஸ் டூ பரீட்சை என்பது மனப்பாடப் பயிற்சிக்கான மதிப்பெண்கள் தான். இதில் தோற்றவர்கள் வென்றவர்களைவிட வாழ்வின் உச்சத்திற்கு வந்துள்ளார்கள் என்பதை உணருங்கள். வென்றவர்களைவிட விழுந்து எழுந்தவர்கள் தான் உண்மையான அநுபவசாலிகள் என்பதை உணருங்கள். பிள்ளைகளின் மனதை காயப்படுத்தாதீர்கள். மாறாக அவர்கள் மனதை ஆக்கபூர்வமாக வலிமைப்படுத்துங்கள்.

எழுதியவர் : மோகனதாஸ் (18-May-16, 7:37 pm)
பார்வை : 1160

மேலே