கவிதைக்கு முகவுரை

போனவர்கள் பாடியது போதுமென்று போனவளே
ஆனமட்டும் உன்புகழை பாடவென்று பிறந்தேனே
ஏனென்று அறியாமல் போவதுபோல் நடிததென்னே
நானன்று கண்டதை கவிதையில் சொல்கிறேனே
வீணென்று வீதிவழி விடோழித்து போகுமுன்னே
தேனென்று வாய்மலர்ந்து சொன்னால் தான் என்னே!!
வேண்டியவர் வாழ்விலே உன்னத நாளென்று
வேண்டியவர் யாவர்க்கும் வழங்கினார் விருந்தொன்று
நெருங்கிய உறவில்லை முன்பின் தொடர்பில்லை
வருந்தி அழைக்கவில்லை அதுவுமிங்கு வழக்கில்லை
உடனிருப்போர் போவதென்று முடிவெடுத்த காரணத்தால்
கடனென்று நானும் போய்வர எத்தனித்தேன்
விதியென்று ஏற்றுவிட்ட பணிநேரம் முடித்து
வீதிக்கு வந்தேன் விருந்துண்டு அடுத்து!!!
உற்றவர் கூடிநின்று பேசவும் தொடங்கினால்
சற்றுநேரம் என்போம் யுகங்கள் கடந்தபின்
கற்றவர் சொன்னதல்ல மாசற்ற தோழமை
பெற்றவர் சொன்னதால் மெய்யென்று நம்புகிறேன்!!
அன்றைய பொழுதும் அங்ஙனம் கழித்து
முன்சொன்ன விருந்துக்கு முன்னமே சென்றோம்
என்கண்கள் மெல்ல களைப்பில் சுருங்க
ஏதேதோ பாதைகள் மெதுவாக நெருங்க
கையோடு எந்தன் தொல்லைபேசி சிணுங்க
வாயோடு சென்னை தமிழ்பேசி அடங்க
தெருவோடு நின்றபடி ஏதேதோ பேசுகையில்
திரும்பிதான் பாரென்றே உள்ளொன்று சொல்லுகையில்
திரும்பி பார்த்தவன் திகைத்தே போனேன்
அருகில் நின்றவர் அதையே சொல்ல
அதற்கு முன்னே உள்ளம் சொன்னது
அழகு தமிழில் ஆயிரம் கவிதை!!
உள்ளம் சொன்ன கவிகள் கேளிர்
அள்ளி வருவேன் அடுத்த பதிப்பில்!!!