பாட்டெழுதும் பாவலன் கை

இயற்கை வனப்பில் இதயம் தொலைத்து
மயங்கித் திளைத்து மலைத்து – வியந்துருக
காட்டருவி ஓட்டமெனக் கற்பனையும் ஊற்றெடுக்கப்
பாட்டெழுதும் பாவலன் கை.

பிஞ்சுக் குழந்தைகள்மேல் பேரன்பை வைக்காமல்
நஞ்சு விதைக்கின்ற நானிலத்தார் – வஞ்சகத்தை
கேட்டாலும் கூடக் கிளர்ந்தெழும் சிந்தனையால்
பாட்டெழுதும் பாவலன் கை.

ஒட்டிய ஏழ்மை உடம்பில் உடையென்றுக்
கட்டியக் கோவணம் கொண்டுழைத்தும் – துட்டின்றிப்
பாட்டாளி வர்க்கம் படும்பாட்டைக் கண்டாலே
பாட்டெழுதும் பாவலன் கை.

சொந்தங்கள் தந்திடும் சோதனை தாளாமல்
நொந்து நொடிந்துள்ளம் நூலான - சந்தர்ப்பம்
மூட்டிவைக்கும் தீயில் முளைவிடும் வேதனையால்
பாட்டெழுதும் பாவலன் கை

ஓடுகின்றப் பேரூந்தில் உட்கார ஆசனம்
தேடுகையில் சட்டென்று தோன்றுகின்ற – பாடுபொருள்
கூட்ட நெரிசலிலும் கொட்டும் மழையாக
பாட்டெழுதும் பாவலன் கை.

நேர்வழியில் சேர்க்கா நிலபுலத்தைக் கொண்டிருந்து
கார்முகிலைக் காணாமல் கண்களிலே – நீர்சுரக்கக்
காட்டுகின்ற நீலித் தனங்கண்டால் நெஞ்சுருகப்
பாட்டெழுதும் பாவலன் கை.

கொள்ளை அரசியல் கொண்ட முரண்பாட்டுக்
கொள்கை தனைஎழுதக் கூண்டுக்குள் – தள்ளிடினும்
நாட்டின் நலம்கருதும் நாட்டம் தொலைக்காமல்
பாட்டெழுதும் பாவலன் கை.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் சந்திக்கச் செய்கின்ற
குந்தகங்கள் கண்டு குமுறலின் – உந்தலில்
சாட்டை எடுத்தெம் சமூகத்தை சாடுவதே
பாட்டெழுதும் பாவலன் கை.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-May-16, 2:35 am)
பார்வை : 56

மேலே