உங்கள் வசைகள் அவள் காதுகளை எட்டப்போவதில்லை
![](https://eluthu.com/images/loading.gif)
விட்டு விடுங்கள் உங்களின் பார்வையில்
அவள் விசித்திரமானவள்
பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று
தன் சுயத்திற்கு தீ மூட்ட விரும்பாதவள்
வெறித்த பார்வையில் அவள் பற்றிக்கொண்டிருப்பது
தன்னுள் புதைந்து போயுள்ள
காலங்களையும் கனவுகளையும்
அடித்து இறுக்கி ஆழப்படுத்தப் பட்டவற்றை
தோண்டி எடுப்பது என்பது இலகுவானதல்ல
அவை வெளிவரும் ஒவ்வொரு கணத்திலும்
ஆயிரம் ஆயிரம் கீறல்கள் ஆங்காங்கே
ஓராயிரம் கசிவுகளாகி வலி கொடுக்கும்
என்பது அவள் அறிந்ததே
இப்படித்தான் என்று எங்கேயும் எழுதப்படாத
சாமானியத்தின் சட்டங்களோடு முட்டி மோதி
வெளிவருதல் என்பது எப்படியும் இலகுவானதல்ல
என்பதுவும் அவள் அறிந்ததே
வெற்றுக் கைகளில் தெறிக்கின்ற சில்லறைகள்
திட்டுத் திட்டாய் ஆங்காங்கே தன்பங்கிற்கு
மறியல்களையும் மறைப்புகளையும்
மறக்காமல் செய்து சிரிக்கும்
இது அவளது அனுபவம்
ஈரம் கசிகின்ற இருட்டு சாலைகளில்
அட்டைகளும் பூச்சிகளும் கால்களைக் கரித்து
இரத்தத்தை உறிஞ்சும் என்பதும் அவள் அறியாததல்ல
வெட்டி நடக்கையில் எட்டிமோதும் தெருவோரத்து
முட்களின் ரணங்களில் தேகம் வலிக்கும்
எனினும் அவள் வேகம் குறைந்தாளில்லை
இருள் கடக்க இரவுகளைக் கிழித்து நடக்கும் அவள்
உங்களின் வெற்றுக் கண்களிற்கு புலப்படாதவள்
இருப்பினும் நீங்கள் உங்கள் வசைகளையேனும்
நிறுத்தப் போவதில்லை
நீல இரவின் இருண்மையை கிழிக்கும் வண்டுகளின்
ரீங்காரத்தினை மீறி உங்கள் வசைகள்
அவள் காதுகளை எட்டப் போவதுமில்லை
பற்றிப்படர்ந்து மூடியிருக்கின்ற பற்றைகளை மீறி
விண்மீன்களும் விடி வெள்ளியும் கூட அவளின்
பாதைக்கு ஒளி வீசப்போவதில்லை
இருப்பினும்
சேற்று நிலங்களில் புதைந்து தொலைவில்
வெளித் தெரியும் மெதேன் கசிவும் எங்கோ தொலைவில்
சூழ் கொண்டு போகும் யாரோ ஒரு மீனவனின்
தூரத்துக் கொள்ளியின் சிறுவெளிச்சத்திலும்
அவள் தன் பாதையைக் கண்டு கொள்வாள்
இப்போது விட்டு விடுங்கள்
இருள் வண்டுகளின் ரீங்காரத்தை மீறி
உங்கள் வசைகள் அவள் காதுகளை
எட்டப் போவதில்லை