தெருவோர பழைய திண்ணை

சிறகுகள் இல்லாத
செம்மாலைப் பறவையாய்
சில நேரம் தவிப்பு
சில நேரம் ஏக்கம்.

கூரைமேலிருந்து
கரைந்தழும் காகங்கள் போல்
மனதுக்குள் ஏனோ
ஒருங்கிணைந்த அழுகை.

ஆம்,,,

நாகரீக கெளரவங்களில்
ஒதுக்கிவைக்கப்பட்ட
இந்த
தெருவோர திண்ணையில்
என் கண்கள்
குவியமிடும் போதெல்லாம்
கண்களுக்குள்
உப்புக்கரிசல் நெகிழ்ச்சி...!

போவார் வருவோரெல்லாம்
அமர்ந்து இளைப்பாறிய
பாதையோர வீட்டுத்திண்ணையில்
இப்போதெல்லாம்
பாழடைந்தது என்று சொல்லி
நாகரீக மனிதர்கள்
அமர்வதில்லை.

ஓய்ந்துவிடவில்லை திண்ணை.

பழைய வீடென்று
கெளரவம் பார்க்காத
நிலம் முளைத்த செடியின்
பரங்கிப் பூக்களை
அமர்த்தி வைத்து
அழகு பார்க்கிறது.

இருக்கும் சோற்றை
பங்குபோட்டு தருவதனால்
எங்கள் தெருவை
தத்தெடுத்துக்கொண்ட
செவலை தெருநாயின்
இரவுநேர ரோந்துப் பணிக்கு
இதுதான் கவனிப்பு மேடை…!

இரவு நேரக்களப்பணி முடிந்து
பகலில் ஓய்ந்து தூங்கும்
இந்த காலபைரவரின்
தூங்கு எல்லை புகாமால்
ஓடிப்பிடித்து விளையாடும்
பெருச்சாளிகளின்
பகல்நேர விளையாட்டுக் கூடமாய்
இந்தத் திண்ணை...!

எச்ச எலும்புகளை
ஓட்டுக்கூரைக்குள்
பதுக்கும் காக்கைகளை
ஏமாற்றி எடுத்துவந்து
அணில்களும் விளையாடி
வீசிவிட்டுப் போகும் திண்ணை
இந்த திண்ணை...!

நிலவைக்காட்டி
பால்சோறு ஊட்டவில்லை
என்றாலும்
பாதையில் பயணிப்போர்களைக்காட்டி
பழையசோறை
பாசத்தோடு பிசைந்து
அமரவைத்து அம்மா ஊட்டிய
அந்த நாட்கள் கண்களுக்குள்..

என் தாத்தனும் அப்பனும்
இயற்கைக்காற்றில்
இணைந்தபடி
எனை அமர்த்திவைத்துப்
பேசிய பலகதைகளின்
களமான இந்த திண்ணை
இப்போது
ஊரை விட்டு ஒதுக்கிவைத்த
ஒற்றைக் காதலனாய்...!

ம்ம்ம்...
இதுவும் ஒருநாள்
விலை போகலாம்.
எதுவும் எளிதில்
நுழையமுடியாத
கொசுவலை மாளிகையாகலாம்.

அப்போது எங்கே போகும்
இந்த தெருநாயும், பரங்கியும்,
அணிலும், பெருச்சாளிகளும்..?
எனக்குள் பெருங்கவலை.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (24-May-16, 4:30 pm)
பார்வை : 321

மேலே