நாளைய விடியல் நம்பிக்கையுடன்
எழுத்து உரிமை எதிர்க்கும் உரிமை
பேசும் உரிமை ஏசும் உரிமை
காணும் உரிமை பேணும் உரிமை
தனித்துவ உரிமை தார்மீக உரிமை
உழைக்கும் உரிமை உடமை உரிமை
வழிபடும் உரிமை வாதாடும் உரிமை
தன்னலம் காணா உன்னதம் காக்கும்
பொன்னான உரிமை வாக்களிக்கும் உரிமையே....
தொகுதி எதுவாகின் தகுதி சார் நின்று
பகுடி யார் தரினும் தன்மானத்துடன் மறுத்து
வாக்களிப்பதே குடியாட்சிக்கு வெகுமதி
வாகை சூடுபவர் கொள்ளட்டும் பெருமதி
வாக்களித்தவர்கள் தந்தது ஆட்சிப் பீடம்
அரசு ஆளுமை அதை உணர்ந்திட வேண்டும்
மன்னரல்ல யாம் மக்கள் சேவகர்
மனதில் இதை அவர் பதித்திட வேண்டும்
செந்தமிழை முதல் வணங்கி
தேசியத்தைப் பின் தொழுதிட வேண்டும்
ஏந்தல் வாழ்வை தவமாக்கி
ஏர்களம் வாழ உழைத்திட வேண்டும்
வங்கக் கடற்கரை ஓரம்
வர்த்தகம் வளம் பெற்றிட வேண்டும்
சிங்கக் குருளை எம்குல இளைஞர்
வேலை வாய்ப்பு பெருகிட வேண்டும்
மதுவெனும் மரண அரக்கன் சங்கு
மதுவிலக்கால் அறுபட வேண்டும்
மங்கள மங்கையர் மஞ்சள் குங்குமம்
மாட்சியில் ஆட்சியர் திளைத்திட வேண்டும்
சிங்கத்தமிழ்ச் சமுதாயம் தழைத்து ஓங்கிட வேண்டும்
தங்கரதம் ஏறி தமிழன்னை பவனி வந்திட வேண்டும்
தயக்கமின்றி தமிழினம் யாவும் தங்கிட இங்கு வழி வேண்டும்
பொங்கிவரும் பூரண நிலவாய்
அங்கதம் நீங்கி வாழ்வு பொலிந்திட வேண்டும்!
நாளைய விடியல் நம்பிக்கையுடன்......
வாக்களிப்பீர் வெகுமதியின்றி!
கவிதாயினி அமுதா பொற்கொடி