வெண் முத்துச்சிதறல்கள் -கார்த்திகா
ஒன்று இரண்டு மூன்று
எண்ணிக் கொண்டே வருகிறேன்
யார் சிரிக்கிறார்கள்
அதிகம் யார் புன்னகை செய்கிறார்கள்
அந்த நீல வண்ண சுடிதார் பெண்ணை
ரொம்பப் பிடித்துப் போனது
அவள் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்
இல்லையில்லை
நீலம் எனக்கு பிடித்ததாலும்தான்
கருப்பு வண்ண சேலை
சிரிப்பதற்கு வெகுவாய் எதிர்பார்க்கிறேன்
ஆரஞ்சு சிரிப்பின் அளவில்
கொஞ்சம் சிக்கனமாய்
எனக்கு முன்
புன்னைகைக்கும் இதழ்களை
வெகுவாக நேசிக்கிறேன்
அவற்றில் நானே பிம்பம்
தேடிக் கொண்டே அலைமோதுகிறேன்
திரும்பவும் சிரிப்பு
கும்மாளமிடும் சிரிப்பைக் காணவில்லை
அட கல்லூரிகளை கடந்த பின்னர்
சிரிப்பை எங்கே வாங்க வேண்டும்
இந்த மருந்துக் கடைகளில்
ஒரு சிரிப்பு மாத்திரையாவது
கிடைத்தால் நல்லதுதான்
அடங்கி இருத்தல் வேண்டும்
என்பதற்கு அடக்கிக் கொண்டு
வாழ்தல் சரியென்றால்
ஏன் மூன்று வேளை சாப்பிடல் வேண்டும்
பசி போன்று சிரிப்பும்
அவசியமன்றோ
இன்றைக்கு மட்டுமல்ல
என்றைக்கோ சிரிப்பைத் துறந்து விட்டவர்கள்
துறவிகள் அல்லர்
மீண்டும் சிரிப்பு சிரிப்பு....
எனக்குள்ளாகவே சிரித்துக் கொள்கிறேன்
ஹாஷ்யம் எதுவுமில்லை
இல்லை இருக்கலாம்
எதற்கும் இருக்கட்டும்
பெரிதாகச் சிரிக்கிறேன்
காற்றில் இலை
கொஞ்சம் அசைவதாய் உணர்கிறேன்
மீண்டும் நடுங்க வைக்கும்
மந்தகாசச் சிரிப்பு
இம்முறை இலைகளில்லை
மரங்கள் மரங்கள்
மீண்டும்
மீண்டும் மீண்டு
நானே சிரிக்கிறேன் ....
முதலிலிருந்து மீண்டும்
ஒன்று
இரண்டு
மூன்று......
அதோ வெண்மை ..................