மெளன ராகங்கள்
நீ போகும் பாதையெங்கும்
என் கால்கள் போகிறது ;
நீ பேசும் வார்த்தைதானே
என்னுள்ளம் கேட்கிறது..!
நடுஜாம நேரம் ஏனோ
ஒரு வெட்கம் வழிகிறது ;
அதிகாலைப் பொழுதில்கூட
என் தேகம் சுடுகிறது ..!
இதழ்களால் பேசிடு மலரே
என்வசம் நானில்லை மனமே ..!
***
குடையிருந்தும் மழையில் நனையும்
புது மறதி வருகிறது ;
யார்யாரோ என்னுடன் பேச
உன் முகமே தெரிகிறது..!
பல்லாயிரம் வார்த்தை பேசி
கண்ணாடியும் உடைகிறது ;
தலைவலியாய் யோசனை பெருகி
மனநோயும் விளைகிறது ..!
அலைகளை பூட்டுதல் சரியா
அழுவதும் சிரிப்பதும் கலையா ..!
***
உன் பார்வை பேசுவதெல்லாம்
என் மனது அறிந்திடுமே ;
உன் விரலில் என் விரல்படவே
வெண்ணிலவும் சிவந்திடுமே..!
கடல் மணலில் புதைத்தால்கூட
என் காதல் முளைத்திடுமே ;
கண்ணே உன் முகவரி தேடி
எந்நாளும் மலர் தருமே..!
பனிக்காலப் போர்வையாய் பழகு
உனைவிட வேறேது உலகு..!