எண்சாண் ராஜா எலும்புச் சேவகர்

ஒரு முறை பிரம்மன் அயர்ந்து சயனத்தில் உறங்கிக் கிடந்த நேரம். வாணிக்கும் அவள் வெண் கமலத்தில் வாழ்ந்து வந்த ஒரு பூ நாகத்திற்கும் சின்னதொரு வாக்குவாதம். உலகத்திலேயே மிகச் சிறந்ததாய் விளங்கக் கூடிய அதே சமயத்தில் உருவில் மிகவும் சின்னதாக விளங்கக் கூடிய ஒரு ராஜாங்கம் எது ? என்பதே அந்த வாக்குவாதம் ! இது பூ நாகம் கல்விக் கடவுளான வாணிக்கு இட்ட புதிர். இந்த புதிருக்கான விடை தெரியாத வாணி தனது வீனையின் தந்திகளுக்கு உயிர்தந்து, உடனே அந்தப் புதிருகான விடையைக் கண்டுபிடிக்குமாறு ஆணை இடுகிறாள். தந்திகள் யாவும் தமக்குத் தெரிந்த ஒவ்வொரு உருவத்தில் பூலோகத்தில் இருந்த எல்லா ராஜாங்ககளையும் சுற்றி வந்தன. நான்கு நட்களாகியும் ஒரு பயனும் இல்லை. இறுதியில் பூநாகம் வாணிக்கு ஒரே ஒரு நாள் கெடு விதித்தது. ஒரு நாளுக்குள் விடை சொல்ல மறுத்தால் வாணியின் கல்விப் பெருமை அனைத்தும் குலைந்து போய்விடும் என்றொரு சாபமும் இட்டது. அஞ்சி நடுங்கிய வாணி, உறங்கிக் கொண்டிருந்த பிரம்மன் காதுகளில் மெதுவாக இந்த செய்தியை ஓதலானாள். கண்விழித்த பிரம்மன் தனது தேவியின் இன்னலைப் போக்கும் பொருட்டு பூலோகத்தில் தென் பாரதத்தை ஆட்சி புரிந்து வந்த பாண்டிய மன்னன் வீரேந்திர சேகரனுக்கு இந்த ஐயம் தோன்றுமாறு ஒரு மந்திரம் செய்தான். வீரேந்திரனும் உடனே முத்தமிழ்ச் சபைதனைக் கூட்டி இந்தப் புதிருக்கு ஒரே நாளில் பதில் சொல்லிவிட்டால் அந்நாட்டுப் புலவர்கள் அனைவரது தலையும் துண்டிக்கபடும் என்றொரு நிபந்தனையும் விதித்தான்.


அரண்டுபோன புலவர்கள் யாவரும் தமக்கு வந்த சோதனையை எண்ணி மனங்கலங்கி தத்தம் இறைவர்களைத் தொழுது வணங்கி அழுது கொண்டிருந்தனர். அப்படி அழுது புலம்பிய புலவர் கூட்டத்தில் வெங்கடேச நம்பியும் ஒருவன். மூன்று மகன் நான்கு மகள் மற்றும் ஒரே மனைவி என்று அளவான குடும்பத்தை நடத்திவந்த வெங்கடேச நம்பி தன் தந்தையிடம் முறையான யாப்பிலக்கணத்தைக் கற்றுப் புலவர் பட்டம் பெற்றவன். வறுமையெனும் ராஜாங்கத்தின் இளவரசன் அவன். அப்படி இருக்கையில் அவன் சென்று விட்டால் தன் அளவான குடும்பத்தை யார்தான் காப்பாற்றுவது என்ற ஐயத்தில் இங்குமங்குமாய் உலாத்திக் கொண்டிருந்தான் நம்பி ! பகல் கடந்து இரவு நுழைந்தது. அடுத்த நாள் பதிலைச் சொல்லவில்லை என்றால் தலை துண்டாக்கப் படுவதை நினைத்தபடியே அவன் வாணியைத் தொழுது விடையைக் கேட்ட வண்ணம் புலம்பினான். அன்றைய இரவு முழுவதும் வாணியின் மேல் பாடலெழுதிக் கழித்தான் ! கேள்விக்கான விடையறிய மறந்தான். வாணியும் அவனது ஆனந்தக் கவிதைகளைக் கேட்டு மனம் லயித்தாள் மெய் மறந்தாள், சாபம் மறந்தாள். திடீரென்று எங்கே எட்டிப்பார்த்த பூநாகம், "வாணி தேவியே ! நின் மகிமையே மகிமை ! நான் கேட்ட புதிருக்கான விடையை நீ சொல்லாமல் உன்னரும் பக்தன் வாயால் சொல்ல வைத்து அவனுக்குப் பொன்முடி கிடைக்குமாறு செய்தாயே நீ வாழ்க !" என்று வாழ்த்திவிட்டு மறைந்தது. திகைத்தாளாய், ஒன்றும் புரியாதாளாய் வாணி அங்கே இருந்தாள். தனக்கு அருகில் இருந்த பிரம்மனை நோக்கி வாணி "சுவாமி இந்த நாகம் உரைத்தது எனக்கொன்றும் விளங்கவில்லை விடையைத் தருவாய் என்று அவன் பாடிய பாடலிலா விடை ஒளிந்தது ? தெளிவுறுத்தவும்" என்று கேட்டாள் அதற்கு பிரம்மன், கொஞ்சம் பொறுமையைக் கடைபிடிக்குமாறு கூறினான் ! மேலும் அடுத்தநாள் சபையில் நடக்கவிருக்கும் சுவையான நிகழ்ச்சியில் தானந்த பொருளைக் கூறுவதாகவும் கூறினான். பொறுக்க மாட்டாத வாணி விரல்நகம் கடித்தபடியே மறுநாள் காலை வரையில் காத்திருந்தாள்.


மறுநாள் காலை மன்னனின் ஆட்கள் வந்து ஊரில் வாழ்ந்த அனைத்து புலவர்களையும் குண்டுக்கட்டாகத் தூக்கி வந்தனர். சபை எங்கும் சிறுசிறு விசும்பல்கள். திடீரென ஒரு நிசப்தம். "ஷூ ! யாவாது ஏதாவது எழுதியுள்ளீரா ?" என்று கேட்டான். யாரும் பதில் சொல்லாது மௌனமாய் இருந்ததைக் கண்டு அனைவரது தலைகளையும் துண்டிக்க ஆணையிட்டான் வீரேந்திரன். யாவரும் அங்கே கண்ணீர்க் கடலில் மூழ்கிக் கிடந்த நேரம், திடீரென நம்பியின் இளையமகன் "அப்பா தாங்கள் விடையெழுதிய ஓலையை வீட்டிலேயே வைத்துவிட்டு சபைக்கு வந்துவிட்டீர்கள்" என்று சொல்லி முந்தைய இரவு அவன் வாணியிடம் வேண்டிக் கொண்டிருந்த பாடல்கள் அடங்கிய ஓலைகளைக் கொண்டு வந்தான். நம்பியிடம் அதைச் சேர்க்குமுன் அரசர் அதனை வாங்கிப் படிக்கலானார். முதல்வரி படித்தார், நம்பியை முறைத்தார், அடுத்த வரியைப் படித்தார் அவர் பல்லைக் கடித்தார். மூன்றாவது வரியைப் படித்தார் இருமினார், நான்காவது வரியிலிருந்து அவரது இதழ்கள் புன்னகைக்கத் துவக்கியது, முழுப் பாடலையும் படித்துவிட்டு ! ஆகா அற்புதம் ! கேள்விக் கேற்றவிடை என்று துள்ளிக் குதித்தான் வீரேந்திரன். மறுபுறம் அப்பாடலின் கருத்தை பிரம்மன் சொல்லிட வெண்கமலம் அதிர்ச்சியுறத் துள்ளினாள் வாணி ! அப்படி என்ன தான் அந்தப் பாடல் ? என்னதான் அதன் கருத்து ?


இதோ பாடல் !

காதள வமையுங் காமீ சையொடு
மாதுளைக் கொங்கை மார்புக ளுரசுங்
கருவுரு வத்தான் காவல னென்கோ
அறிவி லாதவன் அரைந்தனன் முரசம் !
சிறுவுரு வத்தான் சிறப்புக ளெய்தி
உறுமர சாங்கம் உரைகெனச் சொன்னான் !
மொழியா புலவர் முழுதலை கொய்ய
வழிசெய் குவனாய் வஞ்சின முற்றே !
யானெவண் செய்கோ யாழுடை மாதே
யானெவண் விடையை யாண்டுமு ரைப்பேன் ?
தென்கரை ஆளும் தேசுடை யவனே
என்குறை கேளாய் வறுமைக் கரையாம் !
மீன்கொடி கொண்டான் ! மிளிர்விலன் யானே !
வான்குடை கொண்டான் ! வானமெ னக்கே !
அஞ்சா வரசன் அமைச்சருங் கோடி
எஞ்சாண் அரசன் எலும்பே சேவகர்
ஒன்பது துவாரம் உடலின மைச்சாம் !
என்நிலை கண்டாய் தேவி
விடைபகர்ந் தென்றன் வினைபொறுப் பாயே !

இந்தப் பாடலுக்குப் பிரம்மன் பொருள் கூரியது இருக்கட்டும் ! தமிழ்க் கவிதைப் பிரம்மாக்களே ! நாமும் பொருள் தருவோமே !

............................................................................................................................................

பின் குறிப்பு : இக்கதை எந்தவொரு இலக்கியத்திலும் சொல்லப்பட்டதல்ல, எனது சொந்தக் கற்பனையே. மேலுள்ள பாடலும் எனது படைப்பே.

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (14-Jun-16, 9:51 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 187

மேலே