ஒரு பெண்ணைப்பார்த்து
"ஒரு பெண்ணைப்பார்த்து..."
==============================================ருத்ரா
(ஒரு பெண்ணின் அழகைப்பார்த்து
எழுதிய கவிதை இது)
இந்த அழகை
கவிதை எழுதாத
பேனாவின் மென்னியை
முறித்துப்போடுங்கள்.
காகிதம் கிடைக்கவில்லையா
துடிக்கும்
இதயத்தசைநார்களை
கிழித்து பரப்பி வையுங்கள்.
என்ன எழுதுவது..
திகைத்து நிற்கிறீர்களா?
வேண்டாம்.
அந்த சொற்களையும்
இலக்கணங்களையும்
தூர எறியுங்கள்.
பார்த்துக்கொண்டேயிருங்கள்.
கண்களையே கொண்டு
கண்களையே பாருங்கள்.
அங்கே
கொஞ்சம்
புன்னகை அவிழும்போது
மூளிகளாய் நிற்கின்ற
உங்கள்
மனதுகளை
உடுத்திக்கொள்ளுங்கள்.
அறிவுக்கு இனி வேலையில்லை.
உணர்ச்சி யாவும் கொப்பளித்து
இந்த பிரபஞ்சத்தையே
கிரகணமாய் மறைத்து விட்டது.
ஆத்திகர்களே
நாத்திகர் ஆகுங்கள்.
நாத்திகர்களே
ஆத்திகர் ஆகுங்கள்.
அதோ
அந்த பிரம்மன்
புலம்பிக்கொண்டு போகிறான் பாருங்கள்!
"மொத்த அழகை உருட்டித்திரட்டி
வைத்திருந்த
மூல வடிவை அல்லவா
இங்கு
கவனப்பிசகாய் எறிந்துவிட்டேன்.
இனிமேல் தானே
அந்த தேவிகளுக்கே
மண் பிசைய வேண்டும்.
எங்கு போவேன்
வார்ப்புக்கு?"
==================================================