நிசி
நிசி
========================================ருத்ரா.
மனம் குப்பையாகி கிடைக்கிறது.
உன் விரல் நக
பாலீஷின் மின்னலில்
எல்லாமே சுத்தமாகி விட்டது.
இன்னும் ஒரு சிரிப்பை
எனக்கு வீசக்கூடாதா?
வெந்து சாம்பலாய்க்கிடக்கும்
என் மனம்
அந்த ரோஜாக்குளியலில்
குற்றாலத்து தேனருவிகளையெல்லாம்
எனக்குள்
குதித்து விழச்செய்துவிடும்
தூக்கம் இல்லாதநிலையில்
இந்த இலவம் பஞ்சு மெத்தை கூட
காட்டுத்தீயாய்
என்னைச் சுருட்டிக்கொண்டிருக்கிறது.
இது
தூக்கத்துக்கான ஏக்கம் இல்லை.
ஏக்கத்துக்கான தூக்கம்.
ஏக்கத்துள் எத்தனை எத்தனை
வர்ணக்கனவுகள்.
அவையாவது
என்னைப்பிசைந்து கொள்ளட்டும்.
தின்று ருசி பார்க்கட்டும்.
கொடுமைக்காரி!
ஆம்
அதில் என்னைத் தின்று
என் இதயத்தை தின்று
ருசி பார்த்துவிடு.
காதல் பசியும் தான்.
காதல் உணவும் தான்.
வா
பசிகளை பரிமாறிக்கொண்டிருப்போம்.
தூக்கம் இல்லாத
நிசியின் நெடும் நாக்குகள்
நம்மை
சுரண்டி சுரண்டித் தின்னட்டும்.
விடியும் சிவப்பின்
ரத்தவிளாறுகளில்
மருதாணி இட்டுக்கொள்.
=========================================