எப்படி மறப்பேன்

எப்படி மறப்பேன் அன்பே
***என்னுயிர் நீயே அன்றோ ?
செப்படி வித்தை செய்து
***செதுக்கினாய் உன்னை என்னுள்
இப்படிப் போவா யென்று
***என்றுமே நினைத்த தில்லை !
குப்புறக் கிடந்தேன் பாயில்
***குமைந்ததே என்றன் உள்ளம் !

கற்பனைப் புரவி யேறி
***காதலாய்ப் புவியைச் சுற்றி
அற்புதப் பயணம் செய்தோம்
***அன்பினால் அனைத்தும் வென்றோம் !
வற்றிடா ஊற்று நீராய்
***மகிழ்ச்சியும் பெருகப் பூத்தோம் !
முற்றிலும் துய்க்கு முன்னே
***முடிந்ததே புற்றால் வாழ்வும் !

கனிவுடன் உன்றன் பார்வை
***கனவிலும் என்னைக் கொல்லும்
இனியுனை எங்கு காண்பேன்
***இதயமே நொறுங்கிப் போச்சே !
தனிமையில் காலம் தள்ள
***தவித்திடும் மனத்தைப் பாராய் !
வனிதையே அழைத்துக் கொள்வாய்
***வழிபடும் தெய்வம் நீயே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Jun-16, 9:33 pm)
Tanglish : yeppati marappen
பார்வை : 559

மேலே