பட்டதுயர் இனி மாறும்
தெருவெல்லாம் மதுக்கடைகள் –மனம்
தடுமாறிப் போகுதய்யா !
வருமானம் எல்லாமும் –அங்கு
வழிந்தோடி மறையுதய்யா !
குடிமறக்க முடியாமல் –பல
குடும்பங்கள் அழுகுதய்யா !
அடிதடிக்கும் குறைவில்லை –அது
அன்றாடம் நடக்குதய்யா !
நட்பதுவும் போதையிலே –ஒரு
நஞ்சாகி அழிக்குதய்யா !
வெட்கமதும் விலகுதய்யா-வாழ்வு
வீணாகித் தொலையுதய்யா !
முட்டமுட்ட குடிக்கின்றார் –மனம்
முடமாகிப் போகின்றார்
தட்டிக் கேட்க முடியலையே –இவர்
தடம்புரண்டு அலைகின்றார்.
குடும்பத்தை குலைக்கின்றார்-பின்
கொலைகாரன் ஆகின்றார்
அடுக்காத செயலதனால்- உடல்
அழிந்தன்றோ சாகின்றார்.
நஞ்சாகும் மதுதன்னை –பலர்
நாளுந்தான் குடிக்கின்றார்
அஞ்சாமல் குடல்தன்னை –கொடும்
அழிவினிலே தள்ளுகின்றார்.
மானமதும் ஓடுதய்யா –தன்
மரியாதை ஒதுங்குதய்யா
கோணுகின்ற புத்தியினால்- அவர்
கோவணமும் விலகுதய்யா !
வருங்கால சந்ததிகள் –இந்த
வக்கிரத்தை உணர்ந்துவிட
உருவாக்க வேண்டுமய்யா –ஒரு
உயர்வான மானுடத்தை.....
குடிகெடுக்கும் குடிதன்னை –கண்
காணாமல் தொலைத்திட்டால்
துடிப்போடு எல்லோரும் –பெரும்
தூணாகி வாழ்ந்திடுவார்.
கெட்டுவிட்ட சிந்தையதும் –இனி
குட்டுப்பட்டு மாறுமய்யா !
தொட்டுதொட்டு பட்டுவிட்ட –பெரும்
துயரமெல்லாம் ஓடுமய்யா