கன்னத்தில் அறைந்த கவிதை

அவன் ஆடைகளோ
நிர்வாணத்தை மட்டுமே கட்டியிருந்தது
அவன் ஆடைகளில் கிளிசல்களில்லை
கிளிசல்களையே ஆடையாக கொண்டவன்
அவன் விழிகளோ
யாருமறியா சோகமொன்றை
எப்பொழுதும் குடியமர்த்தி வைத்துள்ளது
பசி திண்ற மிச்சமாய்
ஒட்டிக் கிடக்கும் வயிற்றோடு
"ஐயா சாமீ பசிக்குது" என்று
கை நீட்டியவனை கடந்து வந்தவன்
பாஞ்சாலிக்கு நீண்ட கைகள்
பாவமிந்த ஏழைக்கேன் நீளவில்லை
பசிக்கும் எறும்புக்கு அளந்த படியை
பாவமிந்த ஏழைக்கேன் அளக்கவில்லை
பார்வையற்று இருக்கிறாயே நீயும்
பாவம் அவன் வயிற்றுக்கு
பசியை மட்டும் அளக்கிறாயே என்று
கடவுளை பழித்து காட்டமாய் கவிதையொன்றை எழுதி
படித்துக் கொண்டிருந்த வேளையில்தான்
அவன் உன்னைதானே சாமியென்றான்
"நீ என்ன மயிரைப் புடுங்கினாய்" என்று
கன்னத்தில் அறைந்தது கவிதை

எழுதியவர் : மணி அமரன் (24-Jun-16, 10:06 pm)
பார்வை : 136

மேலே