யாரோ யார் யாரோ

நான் யாரென்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. என் பெயரும், ஊரும் சுற்றமும் என் நினைவிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது அல்லது யாரோ அழித்து விட்டார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் முன்பு படுத்திருந்தேன் அதன் முன்பு எங்கோ போய்விட்டு வந்திருந்தேன். வேறு ஒன்றும் என்னைப் பற்றி எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை.

வெகு காலம் முன்பு இந்த வீதியில் நடந்து பயின்ற ஞாபகமொன்று மட்டும் மெலிதாய் என் நினைவிலிருந்தபடியால் இந்த வீதிக்குள் நடந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இந்த வீதியாய் அது இல்லாமலுமிருக்கலாம் யாரவது வந்து என்னை யார் என்று கேட்டு விடாத வரைக்கும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

ஒரு மாடு ஒன்று என் முன்பு வந்து நின்றது. அது முறைத்துப் பார்ப்பது போல தோன்றியது. உற்றுப் பார்த்த போது அதுவும் என்னைப் போலவே வெறுமனே நின்று கொண்டிருக்கிறது என்று புரிந்தது. ஏனோ தெரியவில்லை அதன் கண்கள் என்னைப் பார்த்து நீ யாரென்று கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. நீ யார் என்று அதனிடம் மெல்ல கேட்டேன். அது மெளனமாய் நின்றது.

நீ மாடு என்பது உனக்குத் தெரியுமா? இல்லை நான் உன்னிடம் நீதான் மாடு என்று சொன்னால்தான் புரியுமா? உன்னை பொறுத்தவரை எப்படி நீ இருக்கிறாயோ அதே போல நானும் இருக்கிறேன். நீயும் காலத்தை கழித்து மரணத்தை முத்தமிடுவாய் நானும் அப்படியே. மாட்டின் கழுத்தை இறுக்க கட்டிக் கொண்ட போது யாரோவாக நின்ற அந்க்ட மாடு என்னை நீ யாரோ என்று சொல்வது போல மெல்ல நகரத் தொடஙியது.

நானும் மெல்ல அந்த இடம் விட்டு நகர்ந்தேன்.

யாரோவாக வாழ்வெதென்பது
ஆரம்பத்தில் இருட்டில்
நடப்பது போலத்தான்
கொஞ்சம் கலக்கமாயிருக்கும்
வெளிச்சம் பயின்ற விழிகள்
இருள் கண்டு மிரளும்
விழிகள் என்பதே காட்சிகளைக்
காணும் கருவிதானே..
இருளில் எதற்கு விழிகள்
என்ற உண்மை செவுட்டில் அறையும் போது
இருள் நிஜமான
வெளிச்சமாய் மாறும்...

இருள்தான் சுதந்திரம்
கருமைதான் பொருளற்றது
யாதுமற்றதுதான்
யாரோவாக ஆகமுடியும்
சிவனுக்கு கருப்பு பிடிக்குமாம் என்று சொல்லும் போதே சிவன் வேறு கருப்பு வேறு என்றுதானே பொருள்வருகிறது. சிவனே கருப்பு, கருப்பே சிவன். ஆழ்ந்த பொருள் கொண்ட இல்லாமைதான் அவன். இல்லாமல் இருப்பவன்.

நானும் கூட யாரோதான்....இல்லாமையில் வீழ்ந்தவன் என்று எழுதலாம் இல்லை விழுந்தவன் என்றும் கொள்ளலாம். விழுவதை விட வீழ்வதுதான் சிறப்பாய் எனக்கு படுகிறது. விழும் போது அங்கே இன்னும் சக்தி மிஞ்சி நிற்கிறது...வீழும் போது மொத்தமாய் எல்லாம் அழிந்தொழிந்து போகிறது.

யாரோவானவனுக்கு எழுதுவது என்னும் தேவை இருக்கிறதா என்ன? அப்படி ஒன்றும் கிடையாது... முன்பே சொன்னது போல இது நடந்து பழகிய வீதி...ஆடிய காலும், பாடிய வாயும் மட்டும்தான் சும்மா இருக்காதா என்ன...

கையும் கூடத்தான்....

எழுதியவர் : தேவா சுப்பையா... (5-Jul-16, 2:58 pm)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 231

மேலே