அன்னை ஓர் இறைவி அன்பெனும் அருவி
இறைக்கே இணையாகி வானிற்கு நிகராகி
பேரன்பிற்கு இலக்கணமானவள் இவள்..
இரு ஐந்திங்கள் வலி தாங்கி
மறுபிறவி கையில் ஏந்தி ஓர்
உயிரை ஈன்றெடுக்கும் சுமை தாங்கி இவள்..
பெற்ற பிள்ளைக்குப் பெயர்ச்சூட்டி
தாலாட்டி சோறூட்டி முடிசூட்டப் போராடும்
மணிமகுடம் அணியா அரசி அவள்..
ஆம் அவள் தான் நம் "அன்னை"..
உலகை உருவாக்கி உயிர்களை
படைத்தவனை தெய்வம் என்றால்..
தன் ஊனையும் உயிரையும் உருக்கி
இன்னோர் உயிரைப் பெற்றுடுபவள்
அன்னை அன்றோ..
அன்னையும் தெய்வம் தானே
ஒருவேளை தெய்வமும் ஓர் அன்னை தானோ..
அன்னை என்ற சொல்லே அன்பு எனும்
மகாசக்தியின் பிறப்பிடமாம்..
அகிலமே இவளின்றி அணுவும்
அசையா சொப்பனமாம்..
கருவறையில் உறங்கும் தன் மழலை
முகம் பார்க்க அரும் தவம்
புரியும் இவள் இரு விழியும்..
பிள்ளையின் பிஞ்சுப் பொன்விரல் தீண்ட
உள்ளம் கூத்தாட காத்திருக்கும் இவள் இதயம்..
நம் கொஞ்சும் மொழிக் கேட்க
கெஞ்சும் அவள் நெஞ்சும்
கொஞ்சம் நீர்த்துளிப் பொங்கும் இவள்
வண்ண விழியோரம் எங்கும்..
இச்சொந்தம் இறுதிவரை மிஞ்சும்
அழியா பிரியா பந்தம்..
வாழ்வில் இத்தருணம் சுமை தாங்கிய
நாட்கள் யாவும் பெற்றெடுக்கப்பெற்ற
வலிகள் நூறும் வந்த வழியே வளியோடு
வழிந்தோடும்..
தன் நேசத்தைத் தாண்டிய பாசம்
தன்னலத்தை மீறிய அன்பும்
தாயின் பொன்மனமெங்கும்
வாடா மலர் போல மணம் வீசும் என்றும்..
பொன்னால் வார்த்த இப்புன்னகைச் சிலையைக் கண்டு
உளியால் வடித்து உருவெடுத்த கற்சிலையும் கண்ணீர் வடிக்கும்
இத்தியாகச் சுடரின் கருவில் சிசுவாகவில்லையே என்று..
இத்துனைக் கோடிச் சிறப்புப் பெற்ற இச்சிரிப்பு தேவதை
சிறிதும் செருகற்றவள் என்பதே இஞ்ஞாலத்தின் விந்தையிலும்
விந்தையம்மா..
என் கண்மணிக்கே கண்படும் என்பதாலோ என்னவோ
என் கைவிரல்கள் இத்திருஷ்டிக் கவிதையை வடிக்கின்றன..
இவளருகில் தோள் சாயும் போது
துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம்..
இவள் மடியில் துயிலுறங்கும் போது
இதயத்தில் இன்பத்தின் அருவியும் கரைபுரண்டோடும்..
ஒருமுறை உதிக்கும் நம்மை
தினம்தினம் சுமக்கும் ஒரே ஜீவன்
நம் அன்னை..
நாம் உயிர்த்தெழும் முன் கருவறையிலும்
அவள் உயிர் பிரியும் வரை கருவிழியிலும்
நம்மை சுமக்கும் அன்னையை என்றென்றும்
நம் மனதில் சுமப்போம்
அவளை அன்பால் நேசிப்போம்..
வாழ்வே தவம்
தாய்மை ஓர் வரம்..
பெண்மைக்கு நன்றி..
தாய்மைக்கு நன்றி...
ச.சதீஸ்குமார் அமுதவேணி